குறளோவியம்
பகுதி 223 · 223 / 300
ஆற்றுப்படுகையில் காற்றுப் புகவிடாத அளவுக்கு ஈருடல்கள் ஒருடலாய் ஒட்டிக்கொண்டன!
“கடல்! கடல்! இன்பக் கடல்!” என இருவர் இதழ்களும் மென்மையாகக் கூத்தாடின!
“ஆமாம்! இன்பம்; நாம் இணைந்திருக்கும்போது கடலாகத்தான் இருக்கிறது! அதேபோலத்தான் துன்பமும் கடலையும் வெல்லுமளவுக்குப் பெருக்கெடுத்து விடுகிறது, காமம் நம்மை வருத்தும்போது!”
அந்த இன்பபுரிப் பயணத்திலும் பிரிவென்னும் துன்பபுரி, இடையே குறுக்கிடுமே என்ற கவலைதான் அவர்களுக்கு!
“இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால் துன்பம் அதனிற் பெரிது”
அதிகாரம் - 117 - படர்மெலிந்திரங்கல்; பாடல் - 1166
அடுங்கால் = வருத்தும்போது
“இனிய சொற்கள் இருக்கும்போது இன்னாத சொற்களைக் கூறக்கூடாது என்று குறள் வடித்துக்கொடுத்த வள்ளுவரேகூடத் தனக்கு ஏற்பட்ட சினத்தை அடக்கிக் கொள்ள முடியாமல், கடுமையான சொற்கொண்டு ஒருவனைத் தாக்கியிருக்கிறார் தெரியுமா?”
என் நண்பன் இப்படியொரு திடீர்க்கதையை என் முன்னால் தூக்கிப் போட்டான்.
“நண்பா! என்ன உளறுகிறாய்? வள்ளுவர் வீட்டுக்கு அடுத்த வீட்டில் குடியிருந்தவனைப் போலக் கூசாமல் பொய் சொல்கிறாயே; இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் வள்ளுவர் என்பதை மறந்துவிட்டாயே!”
என்று நான் அவனை மடக்கினேன். நண்பன் தான் சொன்னதைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக இல்லை! என்னைத் தன்பக்கம் இழுத்துக் கொள்வதிலேயே நாட்டமாக இருந்தான்.
“இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் வாழ்ந்தவர் வள்ளுவர் என்று யார் கூறியது? அவர் இன்னமும் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார். வாழ்வுக்கு இலக்கணம் வகுத்தவர், அவர் வழங்கிய குறட்பாக்கள் உள்ளவரையில் வாழ்ந்து கொண்டுதானிருப்பார்.
நண்பன், மலர்ந்த முகத்துடனும் ஒளி பொருந்திய கண்களுடனும் பதிலளித்தான்.
“சரியப்பா! அவர் கடுமையான சொற்களைப் பொழிந்தார் என்றாயே, யார் மீது? எப்போது? அதையாவது விரிவாகச் சொல்!” என்றேன் நான்.
“அப்படிக் கேள்! வள்ளுவர், மனித குலத்திற்கு அறநெறி நூல் வழங்கிட ஊர்பல சுற்றினார்; நாடுகளைக் கண்டார்; அங்கு நடைபெற்ற ஆட்சிகளைக் கவனித்தார்; மக்களிடையே எழுந்த வேறுபாடுகளை அறிந்தார். இல்வாழ்வோர், துறவறம் பூண்டோர், அரசு நடத்துவோர், காதல் புரிவோர், வீரம் விளைப்போர் - போற்றிட வேண்டிய நெறிகளை உணர்த்திட, அவர் முதலில் உலகத்தையே ஒரு நூலாகக் கற்றார். பிறகு அந்த உலகத்தையே குறளாக ஆக்கி வழங்கினார்.
அப்போது அவர் சந்தித்த மனிதர்களில் ஒருவன்தான், அவரது அடக்கமுடியாத சினத்திற்கு ஆளானான்!”
“நண்பா! இன்னமும் புதிர் போட்டபடியே இருக்கிறாயே; யார் அவன்? அவன் மீது வள்ளுவர் சினங்கொள்ளக் காரணம் யாது? அப்படியென்ன கடுஞ்சொற்களைக் கொட்டிவிட்டார்?”
