குறளோவியம்
பகுதி 208 · 208 / 300
மிரண்டுபோன காளையொன்று அவனை முட்டித்தள்ளத் துரத்தியது. அப்போது இரு இளைஞர்கள் அங்கு வந்தனர். அவர்தம் வீரத்தைப் பழித்த மருத்துவர், இப்போது அவர்கள் காலில் விழுந்து “அபயம்” கேட்டான். அந்த இளைஞர்கள் முரட்டுக் காளையை அடக்கி மருத்துவரைக் காப்பாற்றினார்கள் என்றாலும் அவனது ஆணவம் அளவுக்கு அவனை ஏளனம் செய்து அனுப்பினார்கள்.
பித்துப்பிடித்தவனைப்போல ஆகிவிட்ட மருத்துவர், தள்ளாடியவாறு தன் வீடு நோக்கி வந்தான். வீட்டைச் சுற்றிக் காவலர்கள் நின்றனர். படைக் காவலர்களைப் பார்த்ததும் மருத்துவர் “அய்யா! வீரர்களே! என்னை மன்னித்து விடுங்கள்! ‘நான்’ என்ற அகந்தையால் எல்லோரையும் பகைத்துக்கொண்டேன். பெரிய அறிவாளி என்ற நினைப்பில் எல்லோரையும் இகழ்ந்தேன். இப்போதுதான் புரிகிறது; ஒரு பித்தனின் அறிவைவிட என் அறிவு குறைவானது!”
எனக் கூறிக் கொண்டே அவர்களைத் தொழுது வணங்கினான்.
படைவீரர்களால் காப்பாற்றப்பட்ட அவனது குடும்பத்தாரும் மருத்துவரைப் பார்த்து, “இனிமேலாவது எல்லோருடைய பகையையும் தேடிக்கொள்ளாதே!” என்று அறிவுரை கூறினர். மருத்துவர் திருந்தினானா என்பதுதான் தெரியவில்லை.
“ஏமுற்றவரினும் ஏழை தமியனாய்ப் பல்லார் பகைகொள் பவன்”
அதிகாரம் - 88 - பகைத்திறம் தெரிதல்; பாடல் - 873
ஏமுற்றவர் - பித்துப்பிடித்தவர்
ஏழை - அறிவற்றவன்
தமியன் - தனித்தவன்
காதலன் பிரிந்து சென்றால் காதலியின் உடல் பசலை படர்ந்துவிடுமாம். தோள்கள் மெலிந்துவிடுமாம். வளையல்கள் கழன்று விழுந்துவிடுமாம். காதலனின் பிரிவு, இவ்வளவு கடுமையான துன்பங்களைக் காதலிக்குத் தந்து வாட்டிவிடும் என்கிறார் வள்ளுவர்! சரி, பிரிவின் கொடுமையை விவரிப்பதற்குக் குறளில் இப்படியெல்லாம் தமிழ், கொஞ்சிக் கூத்திடுகிறது; ஒப்புக் கொள்வோம் - இதோ இன்னொரு அதிசயத்தையுமல்லவோ அவர் நிகழ்ச்சியாக்கி அதனைக் காட்சியாக்கி நம்முன்னே காட்டுகிறார்!
காதலன் அருகேயிருக்கும்போது காரிகையொருத்திக்குப் பசலை படர்ந்து விடுகிறதாமே! அது எப்படி? ஏன்?
கதவைத் தாளிட்டான்! கட்டிலில் அமர்ந்தான்! கனிவகைகளை உண்டான்! பாலை மட்டும் பிறகு அருந்தலாமென்று அவன் கண்ணாடை காட்டிட, சூடு ஆறாத பாத்திரத்தில் அதை மூடியபடி வைத்தாள். எரிந்து கொண்டிருந்த பெரிய விளக்கிற்கு ஒய்வு வழங்கிவிட்டு, சிறியதோர் அகல் விளக்கை மட்டும் ஒளியுதவிடுமாறு பணித்தாள். அவன் மடியில் அவளும் - அவள் மடியில் அவனுமாக மாறி மாறிச் சாய்ந்தனர். சொற்கள் கோக்கப்படாத இசை இருவரிடையே எழுந்திட, இதழ்களோ எண்ணப்படாத முத்தங்களைத் தாள ஓசைகளாக ஆக்கிக்கொண்டிருந்தன.
காலை முதல் மேனியை அழகு படுத்திக்கொண்டிருந்த ஆடைகளுக்கு நன்றி தெரிவிக்காமல் அவற்றை இப்படியா தூக்கி எறிவது? ஒருவேளை அவைகள், உடல்களை இறுக்கின என்ற கோபம் போலும்! அழகுக் கோலத்தை மிகைப்படுத்திக்கொண்டிருந்த ஆடைகளும் அணிகளும், தாங்கள் ஒரேயடியாகப் புறக்கணிக்கப்பட்டதை எண்ணி வருந்தி அந்த அறையின் மூலைகளில் சிதறிச் சுருண்டு கிடந்தன.
அகல் விளக்கின் சுடர் இனிய தென்றலில் ஆடிக்கொண்டிருந்தது! அவர்கள் உடல்களும்தான்!
“நம் இருவர் உடல்களையும் ஒரே உடலாகப் படைத்திருந்தால் எப்படியிருக்கு மத்தான்! அப்படியே பிரியாமல் ஒட்டிக்கொண்டேயிருக்கலாம்; இல்லையா?”
இது அவளது கேள்வி!
“நாம் எப்படிப் படைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதைத்தான் - நம்மைப் படைத்ததாக ஒருவனிருந்தால் - அவனுக்கு இப்போது காட்டிக் கொண்டிருக்கிறோம்.”
