உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
குறளோவியம்/பகுதி 207
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 207 · 207 / 300

“பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது”

அதிகாரம் - 11 - செய்ந்நன்றி யறிதல்; பாடல் - 103

மாங்காடு ஓர் அழகிய சிற்றூர். அங்கே மருத்துவரைத் தெரியாதவர் யாருமிலர். பெரிய குடும்பத்தில் பிறந்தவன். செல்வச் செழிப்பின் காரணமாகவே அவனை அந்த ஊரார் ஏற்றிப் போற்றி மதித்து நடந்து வந்தனர். அறிவுத் திறன் பெற்றவன் என்று அவனை யாரும் புகழத் தயாராக இல்லை. அவனிடம் பரிசில் பெற விரும்பிக் கையேந்தி நின்ற சில புலவர்கள் மட்டுமே அவனது அறிவைக் கடலுக்கு ஒப்பிட்டும் - திறமையை வானுக்கு ஒப்பிட்டும் கவிதைகளைப் பாடித் திரிந்தனர்.

எதுவும் தெரியாதவன்கூட ஏற்றம் பெற்றுவிட்டால் எல்லாம் தெரிந்தவனைப் போல நடிக்கும் இந்த உலகில், ஏதோ ஒன்றிரண்டு தெரிந்த மருத்துவர், தன்னை எல்லாம் தெரிந்த அறிவுச் சுரங்கம் என எண்ணிக்கொண்டு பீடுநடை போட்டதில் வியப்பில்லை.

மாங்காட்டில் பொங்கல்விழா நடைபெற்றது. அதனையொட்டிக் காளைகளை அடக்க, கட்டிளங்காளைகள் முன் வந்தனர்.

அவர்களில் வெற்றிபெற்ற அறுவருக்கு அந்த ஊரார் சார்பில் பொற்கிழி அளிக்கும் நிகழ்ச்சி. மருத்துவரின் கரங்களால் அவற்றை வழங்க வேண்டுமென ஊரார் விரும்பினர். மருத்துவர், அந்த வீர இளைஞர்களைப் பாராட்டுவதற்குப் பதில் இகழ்ந்துரைத்தான். “மாடுகளோடு போரிட்டுப் பயிற்சி செய்வது பெரியவீரமோ? முரட்டுத்தனத்திற்கும்

முட்டாள்தனத்திற்கும் பெயர் வீரமென்று எவன் சொன்னான்? சரி! சரி! ஏதோ பரிசுக்காக உயிரைப் பணயம் வைத்துப் பிழைக்கிறீர்கள்; போய்த் தொலையுங்கள்!” என்று கூறிக்கொண்டே அவர்களுக்குப் பொற்கிழியை வழங்கினான். பரிசு பெற்ற இளைஞர்கள், மருத்துவரை மனத்துக்குள் திட்டிக்கொண்டு சென்றனர்.

திருமண நிகழ்ச்சியொன்று! அதைத் தொடர்ந்து அந்த இல்லத்தில் நடந்த ஏற்பாடு. ஆடிய பெண்ணை வாழ்த்துமாறு மருத்துவரை அழைத்தனர். முறையாக நாட்டியம் கற்றவள் அவள். நாட்டிய இலக்கணம் பற்றிச் சிறிதும் அறியாத மருத்துவர், அவள் ஆட்டத்தில் குறையிருப்பதாகக் கூறினான். அந்தப் பெண், அவனது வார்த்துரை முடியும் முன்பே அரங்கத்தைவிட்டுக் கோபமாக வெளியேறினாள்.

தங்களுக்குக் கல்வி கற்பித்து ஆளாக்கிய ஆசிரியப் பெருமகனார்க்கு நன்றி சொல்லும் விழாவொன்றினை, மாங்காட்டு மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். விழாத்தலைவராக மருத்துவர்தான் அழைக்கப்பட்டிருந்தான்.

ஆசிரியரைப் பாராட்டுவதற்குப் பதில், அவர் இன்னும் என்னென்ன கற்றிட வேண்டுமென, அவருக்கு அறிவுரை வழங்கினான். வெறுப்புற்ற மாணவர்கள் மருத்துவரைக் கேலி செய்து வெளியேறினர்.

ஊரில் கொலை களவு போன்ற தீய செயல்கள் பெருகிவிட்டன என்பதறிந்து அதனைத் தடுத்திடப் படைவீரர்களைப் பாதுகாப்புக்காக அரசினர் அனுப்பி வைத்தனர்.

“மாங்காட்டில் மருத்துவரை மீறி, களவும் கொலையும் நடந்துவிடுமா? என்னை விட்டுப் பலம் வாய்ந்ததோ இந்தக் காவல்படை?” என எகடியம் செய்தான் மருத்துவர்.

காவல் படையினர், மாங்காட்டிலிருந்து அடுத்த ஊருக்குச் சென்று விட்டனர்; மருத்துவருக்கு அறிவு புகட்ட வேண்டுமென்ற ஆசையுடன்!

ஒரு நாள் இரவு, மருத்துவர் இல்லத்தில் கொள்ளைக்காரர் நுழைந்தனர். கொடுவாட்களைச் சுழற்றி அவனைப் பயமுறுத்தினர். மருத்துவர் குடும்பத்தார் சிதறியோடினர். மருத்துவரும் அந்த நள்ளிரவில் திக்குத் தெரியாமல் ஓடினான்.

அகல்விளக்கு ஒன்று எரிந்துகொண்டிருந்தது, ஒரு வீட்டின் முகப்பில்-! அங்கே நுழைந்து “அய்யோ! காப்பாற்றுங்கள்” என அலறினான். அந்த வீட்டுக்குரியவள், அவனால் இழித்துரைக்கப்பட்ட நாட்டியப்பாவை! அவள், அவனுக்கு இடம் தர மறுத்துக் கதவைத் தாழிட்டுக்கொண்டாள்.

மருத்துவர் அங்கிருந்து ஓடினான்! ஓடினான்! ஓடிக்கொண்டேயிருந்தான். பொழுதும் விடிந்தது. கூட்டமாக மாணவர்கள் வந்தனர். அவர்களிடம் நின்று “என்னைக் கொள்ளைக்காரர் துரத்துகின்றனர்” என்று கதறினான்; ஏற்கனவே மருத்துவர் மீது வெறுப்புக்கொண்ட மாணவர்கள், அவனைச் சூழ்ந்து நின்று கேலியாகக் கும்மியடிக்கத் தொடங்கினர்.

அதைத் தாங்கமுடியாமல் மருத்துவர் ஓடினான்.