உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
குறளோவியம்/பகுதி 200
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 200 · 200 / 300

குவிந்து கிடக்கும் மண்ணையும் மணலையும் அகற்றி, அமிழ்ந்து கிடக்கும் வயல்களைச் சீர்படுத்துவதற்கு ஓராண்டுக் காலமாகும். நல்லான் மனமொடிந்து போனான். எனினும், மீண்டும் அந்த வளமிகு பூமியைச் செம்மைப்படுத்த முடியுமென்று உறுதியாக நம்பினான்.

தன் துயரத்தை நாகனுடன் பங்கிட்டுக் கொள்ளத் துடித்தான். நாலைந்து நாட்களாகவே நாகன், அவன் வீட்டுக்கு வரவில்லை. வெள்ளத்தில் ஏதாவது நாகனுக்கு விபத்து ஏற்பட்டு விட்டதோ என்ற கவலையில் அவனை அழைத்து வர நல்லான், ஆளை அனுப்பினான். அனுப்பப்பட்ட ஆளிடம் நாகன், “நாளை வருகிறேன்” என்று சொல்லியனுப்பினான்.

இதே பதில்தான் நாகனிடமிருந்து ஒவ்வொரு நாளும் வந்து கொண்டிருந்தது.

பிறகு நல்லான் கேள்விப்பட்டான்; நாகன் இப்போதெல்லாம் அந்த ஊரில் மற்றொரு நிலக்கிழார் வல்லான் என்பாரின் வீட்டிலேயே இருக்கின்றான் என்று!

வல்லானின் நிலங்கள் மேட்டுப்பாங்கான இடத்தில் இருந்ததால் அதிகம் பாதிக்கப்படவில்லை. நல்லானுக்கு ஏற்பட்டது போன்ற பேரிழப்பு ஏற்படவுமில்லை. நாகன், வல்லானைப் புகழவும் வாழ்த்தவும் தன் நாக்கை வளைத்துக் கொள்வது அவனுக்கு எளிதாகவே இருந்தது.

நல்லான், தன் நிலம் மண்மூடிட்டது குறித்துக் கவலைப்பட்டதைவிட, நாகனின் நட்பு எத்தகையது என்பதை எண்ணித்தான் அதிகமாகக் கவலைப்பட்டான்.

“தமக்குப் பயன் உள்ளபோது நட்புகொண்டு நெருங்கியிருந்துவிட்டு, பயன் இல்லாதபோது நீங்கிவிடுகிறவர்களின் தகுதியற்ற நட்பைப்பெற்றால் என்ன? அல்லது இழந்தால்தான் என்ன?”

என்ற குறள்மொழியை நல்லானின் நெஞ்சம் குமுறலாக வெளிப்படுத்தியது.

“உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை பெறினும் இழப்பினும் என்”

அதிகாரம் - 82 - தீ நட்பு; பாடல் 812

உறின்=பயனுள்ளபோது அறின்=பயனில்லாதபோது ஒரூஉம் = நீங்கிடும்

“குற்றம் புரிந்தனையா இல்லையா?” என்று கொலுமண்டபத்தில் அந்தக் குரல் ஓங்கி ஒலித்தது! அமைச்சர்கள், தளநாயகர்கள், வேலேந்திய வீரர்கள், அனைவரும் புடை சூழ இருந்த அவைக்களத்தில் அவன் வீர முழக்கமிட்டான். கொற்றக்குடை நிழலில் வீற்றிருந்த மன்னனோ, தன் உடைவாளை உருவியவாறு எழுந்தான்! அப்போது அரண்மனைக்கு வெளியே பெரு முழக்கம்! ஆம்; கொலு மண்டபத்தில் குரலெழுப்பியவனுக்கு ஆதரவாக - அரசனுக்கு எதிராக - எழுந்த முழக்கம்!

வாளை உருவிய வேந்தன், அசையாமல் நின்றான். மண்டபம் முழுவதும் ஒரே அமைதி.

“மக்களுக்கெனச் சேமித்து வைக்கப்பட்ட உணவு தானியக் களஞ்சியத்தை யாரோ கொள்ளையடித்துச் சூறையாடிக் கொண்டு ஓடிவிட்டார்கள் என்பது சூது! சூழ்ச்சி! மன்னவா! நீயே அந்தக் கொள்ளைக் கூட்டத்துடன் உறவுகொண்டு களஞ்சியத்துத் தானியங்களை யெல்லாம் இந்தப் பஞ்சகாலத்தில் பக்கத்து நாட்டுக்குக் கொண்டுபோய் விற்றுவிட்டு, சொந்த நாட்டுக்காரர்களைப் பட்டினி போட்டுக் கொல்கிறாய்! உன் கருவூலம் தங்கப்பாளங்களால் நிரம்பிவிட்டது - ஆனால், நாட்டில் மக்கள் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் சாகிறார்கள்!

இப்போது சொல்! நீ குற்றவாளியா? இல்லையா?”

மன்னன் இடியொலியெனப் பதில் அளித்தான்: “இல்லை! இல்லை! நான் குற்றவாளி இல்லை!” என்று! அத்துடன் நிறுத்தவில்லை -

“தளபதிகளே! இந்தத் தலைக்கனம் கொண்டவனைச் சிறையில் அடைப்பீர்! வீரர்களே! குதிரைப்படை புறப்படட்டும். அதன் குளம்புகளில் கோட்டைக்கு வெளியே கூடியிருக்கும் கும்பல் நசுங்கிப் பிதுங்கி நாசமாகட்டும்! உம்! என் ஆணையை உடனே நிறைவேற்றிடுக.”

என்று கர்ச்சனை செய்தான்!

குற்றம் சாட்டியவனைத் தளபதிகள் சிறைப் பிடித்தனர்! குதிரைகளில் வீரர்கள் - கோட்டைக்கு வெளியே குருதி வெள்ளம் - மக்கள் ஆயிரக்கணக்கில் மாண்டொழிந்தனர்.