உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
குறளோவியம்/பகுதி 199
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 199 · 199 / 300

ஒரு துளி தேன்; இருவர் இதழ்களிலும்! ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டது! இதழில்பட்ட தேனை, நாவில் சுவைத்து இன்பமுறக்கூட நேரமில்லை; அதற்குள் அந்த முரட்டுக் குரல் தோட்டத்துப் பக்கம் கேட்டது - “அடியே அழகம்மை! அங்கே என்னடி செய்கிறாய்?”

என்று! அந்தக் குரலுக்குச் சொந்தக்காரி அழகம்மையின் தாயார்தான்! பெண்ணைப் பேழையில் வைத்துப் பூட்டிப் பாதுகாக்காத ஒன்றுதான் பாக்கி! பிணைத்த இதயங்களுடன் அணைத்துக் கிடந்த அழகம்மையும் அன்புமதியும் அதிர்ச்சியுடன் பிரிந்தனர். “ஊருக்குக் கிளம்பத் தெருவிலே வண்டி கட்டித் தயாராக நிற்கிறது, அப்பா காத்துக் கொண்டு நிற்கிறார். நான் உன்னைத் தேடி அலைகிறேன். வாடி இங்கே!”

அவளைப் பரபரவென்று இழுத்துச் சென்று வண்டியில் ஏற்றி உட்காரவைத்தாள் அந்தத் தாய்!

அன்புமதியோ, அவன் வீட்டுத் திண்ணையிலிருந்தவாறு அழகம்மையை ஏற்றிக் கொண்டு அசைகின்ற அந்த வண்டியைப் பார்த்துக்கொண்டே நின்றான்.

அவள், வெளியூரில் வாழ்கிறாள். அடிக்கடி உறவினர் வீட்டுக்கு வருவாள் பெற்றோருடன். அப்போதுதான் அடுத்த வீட்டு அன்புமதியின் இதயத்தில் குடியேறிக் கொண்டு அவனையும் தன் இதயச் சிம்மாசனத்தில் கொலுவிருக்கச் செய்தாள். திருமணத்திற்கெல்லாம் திட்டம் போட்டுத்தான் வைத்திருக்கின்றனர் இருவரும்! அதற்கிடையே திங்களுக்கொருமுறையோ இருமுறையோ சந்திக்கும் வாய்ப்புக்

கிட்டும்போது, ஒருவரையொருவர் அள்ளிப் பருகிட - அமுதம் சுவைத்திட - அகிலத்தை மறந்திட - துடித்தனர்! ஆனால், அந்த ஒவ்வொரு சந்திப்பின் போதும் “அடியே! அழகம்மை!” என்ற அந்தக் கடுமையான குரல் தடுப்புச் சுவராக எழுந்து நிற்கத் தவறவில்லை.

ஆனாலும் அவர்கள் பிரிய முடியாத பிரிவிற்கு உடன்பட்டு - அதனால் ஏற்படும் துன்பத்தினால் கலங்குவதை விட்டுப் - பிரிந்த பிறகும் பொறுத்திருந்து உயிரோடு வாழ்கிறவர்கள் உலகில் பலர் இருக்கிறார்கள் அல்லவா; அவர்களைப் போலவே உயிர் வாழ்ந்து என்றோ ஒருநாள் ஒன்று சேர்வோம் என்ற உறுதியோடிருந்தனர். பிரிவைத் தாங்கிக் கொள்கிற கடின இதயம் படைத்த பலரும் இருக்கிறார்களே; அந்தப் பட்டியலில் தங்களையும் இணைத்துக் கொண்டு, தங்களையே கடிந்து கொண்டனர், அந்தக் காதலர்கள்!

அந்த உள்ளங்களின் வேதனை ஒலியைத்தான் இதோ - இந்தக் குறள் விளக்குகிறது.

“அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப் பின்இருந்து வாழ்வார் பலர்”

அதிகாரம் - 116 - பிரிவாற்றாமை; பாடல் - 1160

நாள் தவறினாலும் தவறும்; நாகன் - நல்லானைச் சந்திப்பது தவறாது; நல்லான் அந்த ஊரில் உள்ள பெருநிலக் கிழார்களில் ஒருவன். கண்ணுக்கெட்டிய தூரம் அவனுக்குக் கழனிகள் உண்டு. ஆற்றுப்பாசனம் - அதுவும் ஆற்றுப் படுகையை ஒட்டிய வளம் பொருந்திய பூமி! முப்போகம் விளையக்கூடிய செழிப்பான நிலம்! அவன் வீட்டுக் களஞ்சியத்தில், மாணிக்க நெல்மணிகள் நிறைந்திராத நேரமே இருந்ததில்லை.

நாகன், அவனுக்கு நண்பன். அவனைத் தன் உயிரினும் மேலாக நேசித்தான் நல்லான். எளிதில் யாரையும் நம்பி, அவர்பால் அளவற்ற அன்பும் நட்பும் கொண்டு அவர்கட்குத் தேவையான உதவிகளைச் செய்வது நல்லானின் இயல்பு!

அவனிடம் மிக நெருங்கிப் பழகிய நாகன், நல்லானின் இதயத்தில் சிறந்ததோர் இடத்தைப் பிடித்திருந்தான். நாகன் தங்கைக்குத் திருமணம், அந்த விழா இனிது நிறைவேற தேவையான பணமும் பொருளும் கொடுத்து நாகனுக்கு, நல்லான் உதவினான்.

கிழமைதோறும் நாகன் வீட்டுக்கு நல்லான் மாளிகையிலிருந்து தும்பைப்பூ போன்ற அரிசி, அவன் வீட்டுத் தேவைக்கேற்ப அனுப்பப்பட்டுக் கொண்டே இருக்கும். குடிசை வீட்டில் வாழ்ந்த நாகனுக்கு, அழகிய கல்வீடு ஒன்று கட்டிப் பரிசாக வழங்கியிருந்தான் நல்லான்.

நாகன், நல்லானைச் சந்திக்கும்போதெல்லாம் அவன் செய்யும் உதவிகளுக்கு நன்றி கூறிக்கொண்டே யிருப்பான். நல்லானின் அறிவாற்றல் - செயலாற்றல் - இனிய குணம் - நல்ல பண்பு - நட்புக்கு இலக்கணமாகத் திகழும் தன்மை இவற்றையெல்லாம் நாகன் பாராட்டிக்கொண்டே யிருப்பான். நல்லானுக்கே சலித்துப்போகிற அளவுக்கு நாகன் அவனைப் புகழ்ந்துரைப்பான்.

“போதுமப்பா! போதும்! என் நண்பனுக்குச் செய்ய வேண்டிய கடமையை நான் செய்கிறேன். அதற்குக் கைமாறாக நீ என்னைப் பாராட்டத் தேவையே இல்லை. எந்த நிலையிலும் நமது நட்பு அழியாமல் நீடித்தால், அது ஒன்றே எனக்கு மனத்தெம்பினை அளிக்கும். மகிழ்ச்சியைத் தரும்” என்று கண்களில் நீர்துளிர்க்க நல்லான், நாகனிடம் கூறுவான்.

திடீரென ஓராண்டு கடும் புயல் - மழை - ஊரெங்கும் வெள்ளம்! தொடர்ந்து பத்துப் பதினைந்து நாட்கள் பெய்த மழையாலும் - அடித்த புயலாலும் ஆறு திசைமாறியது. ஆற்றின் கரைகள் இருந்த இடம் தெரியவில்லை. அதன் விளைவு, ஆற்றுப் படுகையையொட்டிய நல்லானின் கழனிகள் அனைத்தும் மண்மூடிப் போய்விட்டன. அந்த ஊரில் எந்த நிலக்கிழாருக்கும் ஏற்படாத இழப்பு நல்லானுக்கு ஏற்பட்டுவிட்டது.

மழையும் புயலும் ஓய்ந்தபிறகு, நல்லான் தன் நிலங்களைக் காணச் சென்றான். மண்மேடுகள்தான் தென்பட்டன.