உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
குறளோவியம்/பகுதி 198
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 198 · 198 / 300

அமைச்சரோ முதுபெருங்கிழவர்! அவன் தந்தையின் காலந்தொட்டு அப்பெரும் பொறுப்பை ஏற்றிருப்பவர்! எனவே அவரது அனுபவ அறிவு இளைய மன்னனின் துடிப்புணர்வுக்கு அணையாக எழுந்து நின்றது. அயல்நாட்டு அரசனை எதிர்த்து ஆணவத்தை அடக்க வேண்டுமென்பதில் அவருக்கு ஆர்வமில்லாமல் இல்லை.

இருந்தாலும் படைகொண்டு மோதினால் பகைவனின் தலைகொண்டு திரும்ப வேண்டுமே தவிர - தோல்வியெனும் நிலைகண்டு கலங்கிடலாகாது என்பது அவர் போட்ட கணக்கு!

இளமன்னனோ இப்போதே புறப்பட்டாக வேண்டுமென்று ஒற்றைக் காலில் நின்றான். அமைச்சர், அவனிடம் கனிவாகச் சொன்னார்:

“இளவலே! உன் வீரத்தையோ வைரம் பாய்ந்த உள்ளத்தையோ நான் சந்தேகிக்கவில்லை. நம்மை இகழ்ந்த பகைவனுடன் மோதியே தீர வேண்டும். அவன் மகுடம் கழற்றப்பட வேண்டும். இதில் எனக்குக் கருத்து வேறுபாடில்லை. இருந்தபோதிலும் இளைய மன்னா! என்னுடன் சிறிது நேரம் வருக! அரண்மனைக்கு அப்பால் சென்று உலவிவிட்டு வருவோம். அதன்பிறகு முடிவினைச் செய்வோம்.”

இளவேந்தனும் முதுபெரும் அமைச்சரும் அவ்வாறே உலவிடச் சென்றனர். சலசலவென ஓடிக்கொண்டிருக்கும் வாய்க்காலின் பக்கம் நடந்து கொண்டிருந்தனர். அமைச்சர் என்ன சொல்லப் போகிறார் என்று அவர் உதடுகளின் அசைவையே எதிர்பார்த்துக் கொண்டு அந்த இளம் மன்னன் அவருடன் நடந்து கொண்டிருந்தான். திடீரென அமைச்சர் நின்றார். மன்னனும் நின்றான். “அதோ!”

என்று விரல் நீட்டிக் காட்டினார். ஆம்! வாய்க்கால் ஓரம் கொக்கு ஒன்று ஒற்றைக்காலில் நின்று கொண்டிருந்தது.

“என்ன அமைச்சரப்பா! எனக்கு விளையாட்டுக் காட்டுகிறீர்களா? குழந்தாய்! குழந்தாய்! கொக்கு பார் என்று?”

சிரித்துக் கொண்டே மன்னன் கேட்டான்.

அமைச்சரும் பொக்கைவாய்ப் புன்னகையை அவிழவிட்டு - “ஒலியெழுப்பாமல் அந்தக் கொக்கின் செயலை உற்று நோக்கிடுக!” என்றார். இருவரும் அதனைப் பார்த்தவண்ணம் ஒதுங்கி நின்றனர்.

கொக்கு வாய்க்கால் நீர்மீது தன் கூரிய விழிகளை செலுத்திக் கொண்டிருந்தது. நீரில் நீந்தியவாறு ஒரு மீன் வராதா என்பதற்காகத்தான்! நீண்ட நேரம் காத்திருந்த கொக்கு, திடீரென நீர் மீது தன் நீண்ட அலகால் குத்தியது! ஒரு சிறிய கெண்டை மீன் சிக்கியது! கொக்கு அதை விழுங்கியவாறு கம்பீரமாக நிமிர்ந்து நின்றது.

“கோமகனே! கொக்கின் திறம் புரிந்ததா? கூம்பும் பருவத்தில் - அதாவது காலம் கனியாத கட்டம் வரையில் அது காத்துக் கிடக்கிறது. ஆனால் சீர்த்த இடத்து - அதாவது காலம் சரியாக வாய்க்கிற சமயத்தில் குறி தவறாமல் குத்தித் தன் காரியத்தை முடித்துக் கொள்கிறது. இதைத்தான் மன்னா! வள்ளுவர் அழகுறச் சொல்கிறார்.”

அமைச்சர் அந்தக் குறட்பாவை விளக்கினார்.

கூம்பும் பருவத்தில் கொக்குபோல் காத்திருந்து பொறுமை கடைப்பிடிக்க வேண்டும். வாய்ப்பு ஏற்படும்போது அதன் குத்துபோலத் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.

முதுபெரும் அமைச்சரின் கருத்துக்கு அந்த இளைய மன்னன் இணக்கம் தெரிவித்து, அவர் கைகளைப் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டான்.

“கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து”

அதிகாரம் - 49 - காலம் அறிதல்; பாடல் - 490