உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
குறளோவியம்/பகுதி 197
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 197 · 197 / 300

“அக்கா! ஐந்து நாள் பசி எனக்கு! கொண்டுவா சோற்றை! ஐந்து நாள் பசிக்கும் இன்று ஒரு நாள் தின்று தீர்த்துக் கொள்கிறேன்” என்றான்.

“அது எப்படியடா முடியும்? பசியின் பரபரப்பில் சோற்றை அள்ளி அள்ளி விழுங்குவாய்! அவசரமாய் விழுங்குவாய்! இருந்தாலும் ஐந்து நாள் சோறு ஒரு நாளில் உண்டிட இயலுமோ? ஏதோ உன் பசியின் துடிப்பைத்தான் காட்டுகிறாய்” எனக் கேலி செய்தாள் கயல்விழி!

சேல்கெண்டை, குறும்பனாயிற்றே; சும்மா இருப்பானோ?

“அக்கா! நீ மட்டும் உன் கணவன் உன்னைப் பிரிந்து இரண்டு நாள் கடலில் சென்றிருந்தபோது, அடுத்த வீட்டு உன் தோழி அயிரையிடம் என்ன சொன்னாய்?” என்று கேட்டான்.

“என்னடா சொன்னேன்?”

“நான் ஒளிந்திருந்து கேட்டுக் கொண்டுதானிருந்தேன்!”

“என்னடா கேட்டாய்? சொல்லடா!”

“என்னைப் பிரிந்து சென்றுள்ள என் கணவன் என்னிடம் வருவார்! வந்தவுடன் என்னுடைய துன்ப நோய் முழுவதும் தீருமாறு நான் அவரோடு கூடி நுகர்வேன்’ என்று சொன்னாயா; இல்லையா? அதைப்போலத்தான் நானும் ஐந்து நாள் பசியை ஒரு நாளில் தீர்த்துக் கொள்கிறேன் என்கிறேன்!”

இதை அவன் சொன்னதும், கயல்விழி மௌனமானாள்! அவன் சிறிய கன்னத்தை மட்டும் மெல்லக் கிள்ளிவிட்டாள்!

“சரி! சரி! வா சாப்பிடலாம்” என்றழைத்துக் கொண்டு அவள் வீட்டுக்குப் போனாள். அவள் முகத்தில் மட்டும் நாணம், ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது.

“வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன் பைதல்நோய் எல்லாம் கெட”

அதிகாரம் - 127 - அவர்வயின் விதும்பல்; பாடல் - 1266

கொண்கன் = கணவன் பைதல் = துன்பம் பருகுவன் = நுகர்வேன்

“ஆகா! விடக்கூடாது அவனை! என் தோள்கள் துடிக்கின்றன! வாள் புறப்பட்டுவிட்டது உறை நீங்கி! கீழ் மக்களின் வழக்கிலுமில்லாத இழிமொழிகளையன்றோ என்னை நோக்கி வீசியிருக்கிறான்! மானமொன்றே நல்வாழ்வெனக் கொண்டு வாழ்ந்த தமிழ் மரபு என்மரபு என்பதை மெய்ப்பிக்க இப்போதே சென்று அவனுக்குப் பாடம் புகட்டுகிறேன். அவனிடம் பெரும் படையிருக்கலாம். ஒப்பிட்டுப் பார்க்கும்போது அளவிலே சிறியதுதான் என் படை. எனினும் வலுவிலே பெரியது!

நெஞ்சுறுதிகொண்ட வீரர்கள்; உயிரைத் துச்சமெனக் கருதும் தீரர்கள் - என் பின்னே அணிவகுத்து நிற்கின்றனர். என்னை யிகழ்ந்தவனைச் சுற்றியிருப்பதோ வெறும் சோற்றுப் பட்டாளம் - எனவே அமைச்சா பெருமகனாரே! என்னைத் தடுக்காதீர்கள்! உங்கள் கருத்தினை ஏற்றுக் கொள்ளும் நிலையில் நானில்லை. அதற்காக என்னை மன்னித்து விடுங்கள்.”

வயது முதிர்ந்து, நரை திரை விழுந்த நிலையில் அமர்ந்திருந்த மூத்த அமைச்சரின் முன்னால் அந்த நாட்டுக்குரிய இளம் மன்னன், கண்களில் கனல் கிளம்ப வாதிட்டுக் கொண்டிருந்தான்.

பெரிய மன்னர் மறைந்து - அப்போதுதான் முடிசூட்டிக் கொண்டிருந்த வயதில் இளைய - ஆனால் வலிமையில் சிறந்த - அந்த வீரநெஞ்சனை இகழ்ந்துரைத்ததுதான் அயல்நாட்டு அரசன் என்ற காரணம் பற்றியே போருக்குப் புறப்பட வேண்டுமெனத் துடித்தான் அவன்.