குறளோவியம்
பகுதி 196 · 196 / 300
“நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு”
பொற்கோ இந்தக் குறளைச் சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி விட்டான். நல்லிதயனின் மடியில் கிடந்த மாம்பழ அழகி: “அன்பே! அவன் சொல்லிவிட்டுப் போன பாட்டுக்குப் பொருள் என்ன?” எனக் கேட்டுத் தன் கன்னத்தால் அவன் கன்னத்தைத் தேய்த்தாள்.
“பகைமையுணர்வு படர்ந்திருக்கும் நேரத்தில்கூட பிறருடைய இயல்பை அறிந்து நடப்பதே நல்ல பண்பாகும். விளையாட்டு வேடிக்கையாகக்கூட ஒருவனை இகழ்ந்து பேசுதல் துன்பம் தருவதால், அப்படிப் பேசுதல் பண்பாகாது.
இந்தக் குறளைத்தான் சொல்லி என்னை அவன் குட்டிவிட்டுப் போய் விட்டான்” என்று நல்லிதயன் கவலையுடன் முணுமுணுத்தான். முணுமுணுத்த இதழ்களுக்கு முத்தங்களை அதிரசங்களாக அடுக்கி, அவன் நினைப்பை மாற்றித் தன் மடியில் அவனை இழுத்துப் போட்டுக் கொண்டாள்.
நொந்து திரும்பிய பொற்கோவின் மனைவி நங்கை, அவன் வாயிலாக நடந்ததை அறிந்து அவனுக்கு ஆறுதல் வழங்கினாள்.
“இத்துணைப் பெருஞ்செல்வம் படைத்த என் பழைய நண்பன் இவ்வாறு நடந்து கொண்டானே என்பதை நினைக்கவே முடியவில்லை என்னால்!”
கண் கலங்கினான் பொற்கோ! நங்கை அவன் விழிநீரைத் துடைத்தவாறு சொன்னாள்:
“அத்தான்! பெருஞ்செல்வம் படைத்திருக்கும் காரணத்தினாலேயே அவன் உயர்ந்தவனாக விளங்க முடியுமா? சுவை பொருந்திய பசுவின் பாலைக் காய்ச்சிக் களிம்பு ஏறிய பாத்திரத்தில் ஊற்றி வைத்தால் அந்தப்பால் எப்படிக் கெட்டு விடுகிறதோ, அதைப் போலத்தான் பண்பு இல்லாதவன் பெற்றுள்ள பெரிய செல்வமும் மதிப்பிழந்து விடுகிறது.”
“ஆம் கண்ணே!” என்றான் பொற்கோ! நங்கை சொன்ன கருத்து அமைந்த அந்த அழகிய உவமைக் குறளும் அவன் நினைவுக்கு வந்தது.
“பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலந்தீமை யால்திரிந் தற்று”
அதிகாரம் - 100 - பண்புடைமை; பாடல்கள் - 995, 1000
சேல்கெண்டை அவன் பெயர்! மீனவர் குப்பத்திலேயே குறும்புக்காரன் என்று பெயர் எடுத்த இளைஞன். வாயாடி வம்புக்கிழுப்பது அவன் வேலை என்பதுணர்ந்த மீனவர்கள், அவனைக் கடிந்து கொள்வதேயில்லை. சிறுசிறு வேலைகளை அயராமல் செய்வான். கரையில் மோதும் அலைகளைப்போல் சேல்கெண்டையும் ஓய்வறியாது அந்தக் குப்பத்தில் வீட்டுக்குவீடு சுற்றிக் கொண்டிருப்பான். எல்லா வீடுகளுக்கும் அவன் ஒரு செல்லப்பிள்ளை. பாட்டிகள் மத்தியிலும் அவன் பாட்டொலி கேட்கும்!
பருவக்கிளிகள் மத்தியிலும் அந்தச் சின்னப்பிள்ளையின் சேட்டைகள் நடக்கும்! யாரும் அவனிடம் குற்றம் குறை கண்டதுமில்லை! அவனும் அப்படிப்பட்ட குணம் கொண்டவனுமல்ல.
ஒருநாள், கட்டுமரங்கள் மீன் பிடிக்கக் கடல் நோக்கிக் கிளம்பின. சேல்கெண்டையும் ஒரு மரத்தில் தொத்திக் கொண்டான். “நீ குப்பத்தில் அலைந்து கொண்டிருந்தால் எங்களுக்கெல்லாம் ஒரு துணை; நீயும் ஏனடா போகிறாய்?” என்று கயல்விழி எனும் கட்டழகுப் பெண் - கடுத்துப் பார்த்தாள்; அவன் கேட்கவில்லை! கயல்விழிக்கு மணமாகித் திங்கள்கள் நாலைந்துதான் கழிந்திருந்தன! அவள் கணவன் கடல் மீது சென்று, அன்று காலைத்தான் திரும்பியிருந்தான்.
அந்த மகிழ்ச்சியில் பூத்து நிற்கும் கயலின் பேச்சு, சேலின் செவிகளில் ஏறவில்லை!
அன்றிரவு பெரும் புயற்காற்று - கடற்கொந்தளிப்பு - ஊரெல்லாம் வெள்ளக்காடு! கடலில் சென்ற கட்டுமரங்களை ஐந்து நாட்களாகக் காணவில்லை! பதறிப்போயினர் குப்பத்து மக்கள் - அலறித் துடித்தனர் ஆண்களும் பெண்களும்! “இப்படியும் ஒரு பிழைப்பா, இறைவா! எங்களுக்கெனத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தாய்” என்று கண்ணீர் வடித்துக் கடலை வென்றனர்.
ஐந்து நாட்கள் கழித்த பின்னர், ஊண், உறக்கம் எதுவுமின்றி ஒட்டிய எலும்புக் கூடுகளை மரத்தில் கட்டியது போல கடலில் சென்றவர் திரும்பினர்! குப்பத்தில் கொண்டாட்டம்! வயிறு குளிர்ந்தது. வாழ்த்தித் தழுவி, அவரவர் வீட்டு ஆண்களை அழைத்துச் சென்றனர்.
சேல்கெண்டை மட்டும் தனியாய் நின்றான். கயல்விழி, ஓடி அவனைக் கண்டுபிடித்து “வாடா தம்பி! என் வீட்டில் சாப்பிடலாம்!” என்றாள்.
