உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
குறளோவியம்/பகுதி 201
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 201 · 201 / 300

அவையிலிருந்தோரைப் பார்த்து மன்னன் கேட்டான்: “மாசற்ற என்னைப் பார்த்தா களங்கம் கற்பித்தான் கயவன்! நீங்கள் நம்புகிறீர்களா?” என்று!

“நாடாளும் நாயகனே! நாங்கள் நம்பவில்லை” என்றனர், அவையில் இருந்தோர்.

அவை கலைந்தது! மன்னன் அந்தப்புரம் வந்தான் - தங்கப்பாளங்கள் நிரம்பியிருந்த இருப்புப்பேழை அவனை எதிர்கொண்டு அழைத்தது! அருகே சென்றான். தனது நாட்டு மக்களைப் பட்டினி போட்டுக் கொண்டு, அவன் திரட்டிய செல்வம் அது! அவற்றைப் பார்த்துக் கொண்டே நின்றான்.

அவன் நெஞ்சில் பலமான ஓர் அடி! அய்யோ என அலறினான்! எதிரே அந்த மன்னனைப் போலவே ஓர் உருவம்! கலகலவெனச் சிரித்தது! அந்தச் சிரிப்பு பயங்கரமாக இருந்தது! உருவம் பேசியது:

“தெரியவில்லையா என்னை? நான்தான் உன் மனச்சாட்சி! நீ வெளித்தோற்றத்திற்கு நீதிமான் - நேர்மையாளன் - மாசற்றவன் - இப்படிச் சொல்லி நீ உலகை ஏமாற்றலாம் - ஆனால், உன் மாசு நிறைந்த செயல்களை என்னிடம் மறைக்க முடியுமா?”

இந்தக் கேள்வி, மன்னன் தலையில் சம்மட்டி அடியாக விழுந்தது. அடி தாங்க முடியாமல் அவன் இருப்புப் பேழைமீது சாய்ந்து, கீழே மயங்கி விழுந்தான். மனச்சாட்சி, மீண்டும் உரக்கச் சிரித்தவாறு அந்த இடத்தைவிட்டு மறைந்தது!

“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற”

அதிகாரம் - 4 - அறன்வலியுறுத்தல்; பாடல் - 34

ஆகுல நீர = ஆரவாரத் தன்மை

நீலக் கண்ணாடிக்கு முன் நின்றுகொண்டிருந்தாள், அவள்! நேர்வகிடு எடுத்துச் சீவியிருந்த தலையோ - நெற்றியில் ஒளிவிட்ட குங்குமமோ - குறையொன்றிலாக் குளிர் நிலவின் முகமோ - செம்பருத்திப் பூவின் நிறங்காட்டும் இதழோ - செம்மாதுளைக் கனியிரண்டின் அழகோ - அந்தக் கண்ணாடியில் அவள் கண்களுக்குத் தெரியவில்லை! அதில் அவளுக்குத் தெரிந்ததெல்லாம் அவள் கண்கள் மட்டுமே! அந்தக் கண்களின் இமைகளில் முட்டிநின்றன நீர்த்துளிகள்!

“அழுகிறாயா?” என்று கேட்டு மெல்ல நகைத்தாள்! அந்தச் சிரிப்பில் வேதனையும் சினமும் மாறி மாறித் தலையூக்கி நின்றன!

விழிகளையே நோக்கிக் கொண்டிருந்த விழிகளில் நுழைந்து, அவள் நினைவை அசைத்தது ஒரு நிகழ்ச்சி! ஆம்; கடந்தகால நிகழ்ச்சி!

காளையை அடக்கிட வந்தனர் சில காளையர்! அவர்தம் கட்டுடலைக் கண்டு மயங்கினர், மொட்டுடல் மங்கையர் சிலர்! அன்று வென்றவர்களில் அவள் அத்தானும் ஒருவன்! நெஞ்சுப் பகுதியில் காளையின் கொம்புக் கீறலுடன் வஞ்சியை நோக்கி வந்தான்! அப்போது அவள் விழிகள், அவனுக்கு ஆலவட்டம் சுழற்றின! மாட்டுக் கொம்பின் காயம் வலிக்குதோ என்று விழிகள் கேட்டன! மான் கொம்பின் ஒத்தடம் குணப்படுத்துமென்று அவன் விழிகள் விடையளித்தன. அதன்பிறகு நடந்தவைகளும் அவள் கண்முன் தெரிந்தன!

ஆனால், நீள்விழிகளில் நீர்த்திரை விழுந்து, அந்த உச்சக்காட்சியை உடனே மறைத்துக் கொண்டது.

நேற்றுக் காளையைத் தொட்டுத் தட்டி, வெற்றி மாலைகளைத் தோளில் பெற்று, அன்று அவன் தொலைவில் வரும்போதே, இமைக்கதவை உடைத்துக் கொண்டு, புருவ வாயில்கூட காத்திராமல் பறந்து சென்று, அவன் பரந்த மார்பில் தொத்திக்கொண்ட இந்தக் கண்களுக்குத்தான் அப்போது மட்டும் என்ன அவசரம்!

இன்று அவன், பொழுதெல்லாம் தழுவிக் கிடக்காமல், “போய் வருகிறேன் விரைவில்!” என்று சொல்லிப் போய்விட்டானாம்; அதனால் இப்போது எவ்வளவு ஆத்திரம்!

“நன்றாக அழு கண்ணே; அழு! நீ அழுவது எனக்குக் கேலிக் கூத்தாகத்தான் இருக்கிறது! அன்றைக்கு அப்படி விரைந்தோடி அவரை நோக்கி; என்னை அவருடையவளாக்கினாயே; இன்று அவரைப் பிரிந்து நீ அழுவது வேடிக்கைதான்!”

இப்படித் தன் கண்களைப் பார்த்துக் கேலி செய்கிறாள், கண்ணாடிக்கு முன் நிற்கும் கண்ணாட்டி, கண்ணீர் பெருக்கியபடி!