உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
குறளோவியம்/பகுதி 191
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 191 · 191 / 300

“மன்னவா! குருதி வெள்ளம் திரண்டோடும் களத்தில் வாள் வீசிப் பகைவர் தலைகளைப் பந்தாடிடப் பயின்றவன் நான்! வள்ளுவரைப் பயின்றதில்லை. வலிமை பற்றிய வகை நான்கு வகுத்திருப்பதாகச் சொன்னீர்களே; என்னவென்று அறிந்து கொள்ளலாமா?”

மலைக்கோட்டைவாழ் மன்னன், படைத் தளபதியின் முதுகைத் தட்டிக் கொடுத்து முறுவலித்தவாறு விடையளித்தான்.

“நாம் நடைமுறைப்படுத்த இருக்கும் செயலின் வலிமை எத்தகையது என்பதை ஆராய்ந்து, அந்தச் செயலை வலிமை பொருந்தியதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு அடுத்ததாக, அந்தச் செயல் புரியத் தொடங்கும் நமது வலிமையை உணர்ந்து பார்த்து, அது போதுமானதாக இல்லாவிட்டால், மேலும் பெருக்கிக் கொள்ள வேண்டும். மூன்றாவதாகப் பகைவனுடைய வலிமையைக் குறைத்துக் கணக்கிட்டுவிடக் கூடாது. சூது, சூழ்ச்சி, இவற்றையும்கூட அவன் படைக்கலன் களாகக் கொண்டவன் என்பதை மறந்துவிடக் கூடாது.

மக்களின் அறியாமையை ஆயுதமாகக் கொண்டே முதலில் நம்மை வென்றான் என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும். அவற்றுடன், அவனிடமுள்ள படை வலிமையையும் நாம் சரியாகக் கணக்கிட வேண்டும். நான்காவது மிக முக்கியம். அவனுக்குத் துணையாக இருக்கும் மன்னர்கள் யார்? நமக்குத் துணையாக இருக்கும் மன்னர்கள் யார்? அந்தத் துணையின் வலிமையை நாம் உணர வேண்டும். ஆம்; வலிமைவாய்ந்த மன்னர்களின் துணை நமக்கு வேண்டும். இந்த நாலு வகை வலிமையையும் ஆராய்ந்து, அதன் பின்னர் எடுக்கும் முடிவுதான் போரில் நமக்கு வெற்றி தரும்!

அஞ்சாதீர்கள்! அந்த வெற்றி முகட்டை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.”

மன்னன் தந்த குறள் விளக்கம், மலைக்கோட்டையில் உள்ள அவனைச் சார்ந்தோர் அனைவரையும் சிந்திக்க வைத்தது; செயல்பட வைத்தது.

செயலின் வலிமை சேர்த்தனர். மாற்றான் வலிமையைக் குறைத்திட முனைந்தனர். தங்கள் படை வலிமையை வளர்த்தனர். வலிமை மிக்க துணைகளைப் பெற்றுக் கொண்டனர்.

போர் மூண்டது! புதிய மன்னன் வீழ்ந்தான்! நல்லாட்சி மீண்டும் தோன்றியது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

“வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்”

அதிகாரம் - 48 - வலியறிதல்; பாடல் - 471

நற்குணங்கள் அனைத்தும் கொண்ட பொற்குன்றமாகத் திகழ்பவர்தான் முதியவர் முகிலன்! அவர் அறிவுரைகேட்டு நடந்திட, அந்த ஊரே அவர் இல்லத்தின் முன் நிற்கும். அவருக்கு வாய்த்த துணைவியும் அந்த ஊருக்கே மூதாட்டியாக விளங்குகிற நல்லம்மை! ஊரில் எந்த வீட்டில் நடக்கும் இன்ப நிகழ்ச்சி, துன்ப நிகழ்ச்சியாயினும் முகிலனும் நல்லம்மையும் அங்கு முன்னிலை வகிக்காமல் இருக்கமாட்டார்கள். அந்த நல்லார் இருவருக்கும் பிறந்த செல்வனோ, தாய்தந்தையர் பெருமையைக் குலைத்திடும் தீயோனாகத் திரிந்திடுகின்றான் என்ற பொல்லாத நிலை!

பெற்றோர் சூட்டிய நல்லான் என்ற பெயரை அவனே மாற்றி விட்டு, வல்லான் என வைத்துக்கொண்டான். முகிலனும் நல்லம்மையும் தங்களுக்கு வாய்த்த பிள்ளையைத் திருத்திட பெரும் பாடுபட்டு, முடியாத காரணத்தால் அவன் மனம்போல் விட்டுவிட்டனர்.

வல்லானின் வன்முறைச் செயல்கள், ஒழுக்கக்கேடுகள், அந்த ஊரார் அறிந்ததாயினும் அவற்றைப் பெரிதுபடுத்தாது, அவன் தந்தையார் முகிலனிடம் தனித்தோர் மரியாதை காட்டி வந்தனர்.

ஒரு நாள், தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த முகிலனை, பக்கத்து வீட்டுக் காளைமாடு பாய்ந்துவந்து முட்டித் தள்ளியது! விலாப்புறம் குருதி கொட்டியது முகிலனுக்கு! தெருவில் உள்ளோர் அந்த மாட்டைத் தாக்கிடத் தொடங்கினர். அதைத் தடுத்து நிறுத்தி - “வாயற்ற உயிர்! அதையேன்வதைக்கிறீர்கள்?”

எனக் கேட்டுத் தனது குண நிறைவைக் காட்டிக் கொண்டவர்தான் அந்தப் பெரியவர்!

இன்னொரு முறை, குறும்புக்காரச் சிறுவர்கள் சிலர் கூடிக்கொண்டு அவர் மீது சேற்றை வாரி வீசிவிட்டனர். அந்தச் சிறுவர்களின் பெற்றோர், செய்தி கேள்வியுற்று அவர்களைத் தங்கள் வீட்டு தூண்களில் கட்டிப் போட்டனர். தகவல் அறிந்ததும் அந்தத் தங்கக் குணநலனார், விரைந்தோடிச் சென்று, “அறியாக் குழந்தைகள்

விளையாடினர்! அதற்காக இப்படியொரு தண்டனையா? வேண்டாம்! வேண்டாம்!” எனக் கூறி, சிறுவர்களை அவிழ்த்துவிட்டு அவர்தம் உச்சியிலே முத்தமிட்டு, தன்னால் அவர்களுக்குற்ற தொல்லைக்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.

“ஊருக்குப் பெரிய மனிதர்! இவர் மகன் மட்டும் ஊதாரியாகத் திரிகிறானே!” இவ்வாறு, அவர்பால் அழுக்காறுகொண்ட இரண்டொருவர் ஊர்ப்பொது மண்டபங்களில் பேசியது அவர் செவிகளில் விழுந்தபோதுகூட, தனது நிலையை நொந்து கொண்டாரே தவிர பேசியவர்கள் மீது கோபங் கொள்ளவில்லை, அந்தக் குணக்குன்று!

ஒரு நாள், இப்படியென ஒரு செய்தி வந்தது! முகிலனின் முரட்டு மகன் அந்த ஊர்க்கோயில் சிலையொன்றைத் திருடிக் காவலரிடம் சிக்கிக் கொண்டான், என்று!

சினத்தால் முகம் சிவந்தறியாத முகிலனின் முகம், செந்தணல்கூட மாயிற்று! “சிலை திருடியவனைக் கொலை செய்துவிட்டுத் திரும்புகிறேன்” என்று புலிக்குரல் கொடுத்துவிட்டுப் புறப்பட்டார், கையில் கொடுவாளுடன்!