உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
குறளோவியம்/பகுதி 189
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 189 · 189 / 300

“மன்னா! என்னை மன்னித்து விடுக! எங்கள் குலம் காக்கும் போரில் நான் ஒரு தளபதியாக இருந்தேன். எங்கள் குலத்தலைவராம் எமது மன்னரின் கோட்டையை முற்றுகையிட்டு, அதனைத் தரைமட்டமாக்கத் திட்டம் தீட்டி விட்டாய்! அதை எதிர்த்துத் தாக்க வந்த முதல் படையின் தளபதியாகிய எனக்கு, உனது பெரும்படையைக் கண்டதும் அச்சம் ஏற்பட்டுவிட்டது. போரில் எனக்கு விளையும் துன்பத்தைத் தாங்குவது என்பது என்னால் இயலாது!”

“எதிரிப்படையின் தளபதியே! இப்போது என்ன கூறுகிறாய்? உன் முடிவுதான் என்ன?” அந்த மன்னன் சீற்றத்துடன் கேட்கிறான்.

மண்டியிட்டவன் சொல்கிறான்: “என்னை உனக்கு விற்றுவிட்டேன் வேந்தே!” என்று!

மன்னன், அவனைத் தட்டிக் கொடுத்துத் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறான். இந்தக் காட்சியைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த இளங்கோவிடம் வள்ளுவர்:

“குழந்தாய்... எதற்கு உரியவர் கயவர் தெரிகிறதா? ஒரு துன்பம் வந்த காலத்தில் தம்மைப் பிறர்க்கு விலையாக விற்றுவிடுவதற்கு உரியவர். அந்தக் கயவரில் ஒருவனே இவன்! நன்றாகப் பார்த்தாயா?”

“எற்றிற் குரியவர் கயவரொன்று உற்றக்கால் விற்றற்கு உரியர் விரைந்து”

இந்தக் குறளையும் வள்ளுவர் கூறினார். இளங்கோவின் ஆவல் அடங்கவில்லை.

“கயவனும் மனிதனைப் போலவே இருக்கிறானே” என்று வியப்புடன் கேட்டான்.

“ஆம் குழந்தாய்! கயவரும் மக்களைப் போலத்தான் இருப்பார்கள். வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் காணமுடியாத தோற்றத்து ஒப்புமை மனிதரைப் போலத் தோன்றும் கயவரிடத்திலேதான் உண்டு. இதோ, இவன் உருவத்தில் மனிதன்! உள்ளத்தில் கயவன்! இது பற்றியும் குறட்பா உண்டு; கூறுகிறேன் கேள்:

“மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்டது இல்”

இளங்கோ விழித்துக் கொண்டான். கனவு கலைந்தது. “அம்மா! அம்மா! கயவனும் மனிதனைப் போலத்தானம்மா இருக்கிறான்!” என்று கூவினான்.

அவன் தாய், “தூக்கத்திலேகூட குறள் பாடந்தானா? காலையில் பேசிக் கொள்ளலாம் தூங்கு” என்று தட்டிக் கொடுத்தாள்.

அதிகாரம் - 108 - கயமை; பாடல்கள் - 1080, 1071

“மல்லிகையே வெண்சங்காய் வண்டே” எனப் புகழேந்திப் புலவர் பாடியபோது, அந்தப் பாட்டின் பொருளையே ஒட்டக்கூத்தர் மறுத்தார் என ஒரு கற்பனைக் கதையுண்டு. “மல்லிகை மலரை வெண்சங்கு போல வண்டு ஊதுகிறது” என்பது புகழேந்தியின் கற்பனை! வண்டு, மல்லிகையில் அமர்ந்திருக்கிற காட்சி, வெண்சங்கை ஊதுவதுபோலத் தோன்றுகிறதாம், புகழேந்திக்கு!

அதை மறுத்து ஒட்டக்கூத்தர் எடுத்துவைத்த கருத்து என்ன தெரியுமா? “சங்கினை ஊதுபவர்கள், அதன் பின்புறத்தில் அல்லவா உதடுகளைக் குவித்து ஊதுவார்கள்; வண்டு மல்லிகையின் முன்புறத்தில் அல்லவா ஊதுகிறது! இந்தக் கற்பனை எப்படிப் பொருத்தமாகும்?”

இவ்வாறு கூத்தர் கேட்டாராம்! சட்டென்று புகழேந்தி அதற்குப் பதில் சொன்னார்.

“வண்டு, மதுவருந்திய மயக்கத்தில் மல்லிகையெனும் அந்தச் சங்கின் முன்புறமெது - பின்புறமெது - என்று தெரியாமல் ஊதுகிறது.”