உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
குறளோவியம்/பகுதி 185
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 185 · 185 / 300

இத்தனையும் செய்த குருஷேவ், ஓரிரு ஆண்டுகளில் அவரது கட்சியினராலேயே பதவியிலிருந்து விலக்கப்பட்டார்.

அவர் எங்கு போனார், என்ன ஆனார் - என்ற விவரங்களே தெரியாமல் இருந்தது.

நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு செய்தி வந்தது; சோவியத்தில் நடைபெற்ற தேர்தல் ஒன்றில், எங்கேயோ ஒரு வாக்குச் சாவடியில் குருஷேவ் வாக்களிக்க வந்தார் என்றும் அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை யென்றும் அந்தச் செய்தி குறிப்பிட்டது.

பின்னர் அவர் இறந்துபோன செய்திகூட ஏடுகளில் இருட்டான ஒரு மூலையில் மிகச் சிறிய அளவில் வெளியிடப்பட்டது.

உலகத்து ஏடுகளில் எல்லாம் ஒரு காலத்தில் முதல் பக்கம் - முழுப் பக்கத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த குருஷேவின் மரணச் செய்திக்குக் கிடைத்த மரியாதை அவ்வளவுதான்!

நீரில் இருக்கும் வரையில்தான் முதலை, பலம் வாய்ந்தது! நீரைவிட்டு வெளிவந்து விட்டால், அதனை ஒரு சாதாரணப் பிராணிகூட வென்றுவிடுமல்லவா? அதிகாரத்தில் உள்ள மனிதர்களில் பலர் முதலையைப் போன்றவர்களாகவும் இருப்பர்! அவர்கள், தாங்கள் அந்த நீரை விட்டு நீங்கினால் என்ன ஆவோம் என்பதையும் சிந்திக்க மறந்துவிடக் கூடாது என்பதற்குக் குருஷேவின் வரலாறு எடுத்துக்காட்டாக விளங்குகிறதல்லவா?

“நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற”

அதிகாரம் - 50 - இடம் அறிதல்; பாடல் - 495

புனல் = நீர் அடும் = வெல்லும்

“பசுவின் கன்றின்மீது பாராளும் வேந்தனின் மகன் தேரை ஏற்றி விட்டானாம்! கன்று மாண்டது கண்டு கதறியதாம் தாய்ப்பசு! பசுவின் வேதனையை உணர்ந்த சோழமன்னன், தனது மகனையே தேர்க்காலில் படுக்க வைத்து அவன்மீது தேரைச் செலுத்தினானாம்! இதெல்லாம் என்ன நடக்கக்கூடியதா?”

என்று நகைத்தவாறு கேட்ட நண்பன் நலங்கிள்ளியின் முதுகில் தட்டியவாறு, “நடக்காத கற்பனைக் கதையாகக்கூட இருக்கலாம்; ஆனால், அந்தக் கதை விளக்கும் ஆழமான கருத்தொன்று இருக்கிறதே, அதனை மறந்து விடாதே!” என்றான் மறைமுதல்வன்!

“என்னப்பா ஆழமான கருத்து?”

“நாட்டுக்கு - சமுதாயத்திற்கு - ஏன் - ஒவ்வொரு வீட்டுக்கும் தேவையான கருத்து அஃது!”

“முன்னுரை இருக்கட்டும்! முடிவுரையை எழுதுக!”

“எழுத்தத்தான் போகிறேன்! ஒருவனைப் பார்த்து நீ விரைவில் கெட்டுப் போகிறாய் என்று கூறிவிட முடியும், தெரியுமா?”

“ஓ! ஆரூடம் கற்றுக் கொள்கிறாயா?”