குறளோவியம்
பகுதி 186 · 186 / 300
“அந்த மூடநம்பிக்கையெல்லாம் என்னை அண்டியதே இல்லை! இப்போது உன்னைக்கூடச் சொல்ல முடியும்; நீ விரைவில் கெடுவாய் என்று!”
“எப்படி? ஏன்?”
“அதுதான் வள்ளுவர் வாக்கு!”
“அதைத்தான் விளக்குக என்கிறேன்!”
“உன் தம்பியை நம்பியிருந்த ஒருத்தி - ஆம்; இளஞ்சிட்டு - அவனால் கைவிடப்பட்டு இறுதியில் இறந்தாளா, அல்லது கொல்லப்பட்டாளா என்று தெரியாமலே புதைக்கப்பட்டுவிட்டாள் அல்லவா?”
“கொல்லப்பட்டாளா?”
“வியப்புத் தோன்ற விழிகளை உருட்டாதே! அதனை விசாரித்து, உண்மையை ஊருக்கு அறிவித்து, உன் தம்பியையும் தண்டிக்க வேண்டிய ஊர்த் தலைவன் பொறுப்பிலே நீ இருக்கிறாய்! ஆனால் நீயே கேட்கிறாய்; கொல்லப்பட்டாளா என்று! இன்னும் சிறிது நேரம் போனால், உன் தம்பியும் அவளும் காதலித்தார்களா என்றுகூடக் கேட்பாய்! பருவமயிலைப் பாழ்படுத்திப் புதைகுழிக்கும் அனுப்பியதுமல்லாமல், அந்த மங்கையைப் பெற்றோரையும் மிரட்டி உண்மையை இருட்டில் தள்ள முயற்சிகளை மேற்கொள்கிறாய்!
அதனால்தான் சொல்கிறேன், பசுவின் கன்றுக்காகத் தன் மகனையே பலியிடத் துணிந்த சோழன் கதையில் ஆழமான கருத்து இருப்பதாக!”
மறைமுதல்வன் சொற்கேட்டு நலங்கிள்ளி, தலை குனிந்து நின்றான். மறைமுதல்வன் தொடர்ந்து பேசினான்:
“நண்பன் என்ற முறையில் இப்போதும் கூறுகிறேன்! தனக்குக் கேடு வரப்போகிறது என்பதை ஒருவன் முன்கூட்டி அறிந்து கொள்ள வேண்டுமாயின், அவனுடைய நெஞ்சம் நடுவு நிலைமை நீங்கித் தவறு செய்ய நினைத்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டால்போதும்! ஆருடக்காரனின் வாக்கை வெல்லும் அறிவார்ந்த வாக்கு - அதனிலும் மேலான வாக்கு - அன்றே அருளிச் செய்துள்ள வள்ளுவர் வாக்கு!”
இப்படி எச்சரித்துவிட்டு நண்பன், குமுறிக்கொண்டே போய்விட்டான். நலங்கிள்ளியின் நெஞ்சம் நடுங்கியது; கேடு வரப் போவதை அறிந்து!
“கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின்”
அதிகாரம் - 12 - நடுவுநிலைமை; பாடல் - 116
நடுஒரீஇ = நடுநிலை நீங்கி அல்ல செயின் = தவறு செய்தால்
அழகுமிகும் மணிமாட வீதியது! பகல் முழுவதும் தொடர்ந்து, பாதி இரவு முடியுமட்டும் நடமாடும் நம்பியர்கள், நங்கையர்கள், பண்டங்களைச் சுவைத்துவிட்டு வீசியெறிந்த இலைகளின் குப்பை, வீதியெங்கும் பரவிக் கிடக்கிற காட்சி! அசையாது கிடக்கும் இலைகளையும் கூளங்களையும் அசைத்து விளையாடிக் காலைக்காற்று குதியாட்டம் போடுகிறது! கழனிகளில் இருந்து இல்லம் நோக்கி எருதுகளை ஓட்டிப்போவர் மாலை நேரத்தில்; அவை கழிக்கும் சாணம், ஆங்காங்கு சிதறிக் கிடக்கிறது.
மேய்ச்சல் நிலத்திலிருந்து ஆயர்கள் ஓட்டிவரும் பசுக்கள், அவற்றின் வாயிலிருந்து சிந்திய புல்லைத் திரும்பிப் பாராது செல்லும் காரணத்தால் அந்த வீதியில் ஆங்காங்கு பச்சைத் திட்டுகள்.
காலை மலர்ந்ததும் வீதியை அழகுபடுத்தும் கடமையாற்றிட கையில் நீண்ட துடைப்பக் கம்புடன் வழக்கம்போல் வைகை வந்தாள். அவள் வருமட்டும் காத்திருந்து - வந்தவுடன் வீதி கூட்ட வந்துவிட்டான் வடிவழகன்!
ஒரு முனையிலிருந்து வைகை, வீதியைத் தூய்மைப் படுத்திக் கொண்டு குப்பைக் கூளங்களை அள்ளிக் கூடையில் போட்ட வண்ணம் பணியைத் தொடங்கி நடத்தினாள்.
