உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
குறளோவியம்/பகுதி 184
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 184 · 184 / 300

தனி வீடு! தனியாகத் தானிருக்கிறாள்! கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைகிறான்! கணக்கப்பிள்ளை - ஆம்; அந்தக் கட்டழகு ஆண்பிள்ளை - காவடிச் சிந்துடன் பின் தொடர்கிறான்.

“வாடியிருப்பது வஞ்சமோ? - பொல்லா வன் கருங் கல்லோஉன் நெஞ்சமோ? - கொண்ட மையல் வைத்தியம் கொஞ்சமோ? - சிலை மதனாகம முதுகாவியம் அதிலேமொழி சுகலையின் மார்க்கம் உனக்கென்ன நஞ்சமோ? - ஒரு வார்த்தை உரைக்கவும் பஞ்சமோ?”

சுவை மிகுந்த சொல்லாரம் தொடுத்தான்! சுவைத் தமிழில் காதல் கணை விடுத்தான்!

தன் நெஞ்சத்தை அடக்கியாளும் பெண்மையை அவன் வெற்றிகொண்டு விடாமல் - நிறையழியாமல் - பாதுகாத்துக் கொள்வதில் அவள் மிகவும் எச்சரிக்கையாக இருந்தாள்.

“இனியவளே! கனியமுதே! இன்னும் என்ன தயக்கம்? அன்று தேரடியில் கண்டபோது உன் தேனிதழ்கள் துடித்தனவே; அவை எனக்கு என்ன கட்டளையிட்டுப் போகின்றன எனக் கேட்கத்தானே இப்போது கைகட்டி நிற்கின்றேன்! திருவிழாக் கூட்டத்தில் ஓர் நாள் உன் விழிகள் என்னைத் திருடிக் கொண்டிருந்தன! திரும்பிப் பார்த்தேன்! அதே விழிகள் தீச்சுடர்களாய் மாறின! குற்றமென்ன செய்தேன் எனக் கேட்கத்தானே கூப்பிய கரமுடன் உன் முன் இப்போது ஓடிவந்திருக்கிறேன்!

உன் அசையும் இடை காட்டும் நடனத்தை ஆணையாக ஏற்று நடக்க அடியேன் என்றைக்கும் எப்போதும் தயாராக இருக்கிறேன். பிறகேன் விழிகளில் தணல்? தாமரை முகம் எனை நோக்கித் திரும்பிடத் தயங்குவது ஏன்! நான் உனைத் தழுவ - நான் முழுவதும் மண்டியிட்டுத் தவம் புரிய வேண்டுமா? அப்படியில்லை! பஞ்சுபட்டாலும் வலிக்கின்ற உன் பாத மலர்களில், காமபூஜைக்குரிய மலராக என் இதயத்தைப் படைத்திருக்கிறேனே; அதைக்கூட நீ பார்க்கவில்லையா?

இன்னும் உனக்கு என்மேல் இரக்கமில்லை பெண்ணால், புருவ வில்லை வளைத்து என்னை உருவம் தெரியாமல் அழித்துவிடு!”

அவன் பேசிக்கொண்டேயிருந்தான். பணிவும் பாசமும் நிறைந்த அந்தப் பேச்சின் முன்னே அவளது பெண்மையெனும் அரண் அழிந்துவிட்டது!

ஒட்டிக்கொண்டாள்! அவன் கட்டிக் கொண்டான்! தெருக்கதவு மூடிக் கொண்டது! அந்தச் சிறிய வீட்டில் ஒரே அமைதி!

அவள் நெஞ்சு மட்டும் அவளுடன் பேசியது, “நாளை வருகிறேன்” என்று அவன் விடை பெற்றுச் சென்ற பிறகு!

“மாயக்கள்வனான என் காதலனின் பணிவு நிறைந்த மொழி, என் பெண்மையெனும் அரணை உடைக்கும் படையாக அல்லவா இருக்கிறது!”

இப்படி வியப்புத் தெரிவித்தது அவள் நெஞ்சு! அதனால் விம்மியது அவள் மார்பகம்!

“பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் பெண்மை உடைக்கும் படை”

அதிகாரம் - 126 - நிறையழிதல்; பாடல் - 1258

சோவியத் ருஷ்யாவை உருவாக்கிய லெனின் என்ற மாவீரனுக்குப் பிறகு அந்தப் பொதுவுடைமைப் பூமியைக் கட்டிக்காத்த பெருமை ஸ்டாலினுக்கு உண்டு. இட்லரின் மிகப்பெரும் படையெடுப்பிலிருந்து நாட்டையும் காத்து, பொதுவுடைமைத் தத்துவத்தையும் காப்பாற்றியவர் ஸ்டாலின்! அவர் மறைவுக்குப் பிறகு மாலங்கோவும், அவரை வீழ்த்திவிட்டு குருஷேவும் தலைமைப் பொறுப்பேற்றனர். குருஷேவ், ஸ்டாலினை விமர்சிப்பதில் பெரும் பொழுதைக் கழித்தார்.

ஒரு முறை கிரெம்ளின் மாளிகையில் நடைபெற்றக் கூட்டத்தில், குருஷேவ் மறைந்த ஸ்டாலினின் சர்வாதிகாரப் போக்குகளைக் குறித்து கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்தாராம். அப்போது ஒருவர் குறுக்கிட்டு, “ஸ்டாலினின் சர்வாதிகார முறைகேடுகள் நடைபெற்றபோது அதனைத் தட்டிக் கேட்காமல் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?”

எனக் கேட்டாராம். கேட்டவரை குருஷேவ் சினத்துடன் நோக்கினாராம்! கேட்டவர் மெளனமாகி அடங்கி உட்கார்ந்து விட்டாராம்! குருஷேவ் அமைதியாக, “இதைத்தான் நானும் செய்து கொண்டிருந்தேன்” என்று பதில் அளித்தாராம். இப்படி குருஷேவ் காலத்தில், மேற்கூறப்பட்ட செய்திகள் வருவதுண்டு.

மாஸ்கோ செஞ்சதுக்கத்தில் லெனின் உடலும் அருகே ஸ்டாலின் உடலும் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தன. குருஷேவுக்கு ஸ்டாலின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, ஸ்டாலினின் பதப்படுத்தப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த உடலை அகற்றி விடுமாறு ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆணையும் உடனடியாக நிறைவேற்றப்பட்டு விட்டது.

ஸ்டாலின் பெயர்கள், சின்னங்கள், சிலைகள் பெரும்பாலும் அழிக்கப்பட்டன; அகற்றப்பட்டன.