குறளோவியம்
பகுதி 182 · 182 / 300
“நீ இப்படியொன்றை எதிர்பார்த்துக்குத்தான் என்னுடன் நட்புக் கொண்டாய் என்பது எனக்குத் தெரியாது! வாணிபக்கூடத்து மேலாளர் பணிக்கு யார் தகுதியோ அவனைத் தேர்ந்தெடுத்து நியமித்தேன். அதில் என்ன தவறு!”
“போதும் உன் நட்பு! போய் வருகிறேன்!”
“தாராளமாகப் போய் வா! அன்பை எதிர்பார்க்காமல் பொருளை எதிர்பார்க்கும் விலைமகளும் கள்வரும் பயன் கருதித் தோழமைகொண்டு கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பர்களும் ஒரு நிகரானவர் என்று வள்ளுவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்! போய்வா நண்பா! போய் வா!”
நண்பன் எனப்பட்டவன் வேகமாகப் போய்விட்டான். வீட்டுக் கதவும் தாழிடப்பட்டது.
“உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர்”
அதிகாரம் - 82 - தீ நட்பு; பாடல் - 813
பெறுவது கொள்வார் = விலைமகளிர் உறுவது = பயன்
செல்வந்தர் வீட்டுப் பணியாள் அவன்! பெயர் சேவல்! அந்த வீட்டில் பெரியவர் முதல் குழந்தைகள் வரையில் எல்லோருக்கும் அவன் அடிமை! வயிறு வளர்க்க வேண்டுமே; வேறெப்படி வாழமுடியும் - வறுமைச் சூழலில் சிக்கிக் கொண்ட வனால்! செல்வந்தரின் பாட்டிக்குத் தொண்ணூறு வயது. அந்த அம்மையார் “அடே! சேவல்!”
என்று அதிகாரக் குரலில் அழைப்பார். பேரனுக்கு எட்டு வயது. அவனும் “அடே! சேவல்!” என்றுதான் அழைப்பான். அடிமை வேலை செய்யு மிடத்தில் மரியாதையென்ன வேண்டிக் கிடக்கிறது. ஆனால் ஐம்பது வயதான சேவல், அந்த அழைப்புக்களைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்வதேயில்லை.
பேரப்பிள்ளைகளைப் பெட்டி வண்டியில் வைத்து, சேவல்தான் பள்ளிக்கு இழுத்துக் கொண்டு போவான். தேர், திருவிழாக்கள் பல கல் தொலைவில் உள்ள ஊர்களில் நடைபெற்றாலும் பெட்டி வண்டி இழுக்கும் வேலை அவனுடையது தான். நாள்தோறும் கழனிகளைப் பார்வையிடச் செல்வந்தர் செல்லும்போதும் சேவலின் தோள்களே சிவக்கும், வண்டியிழுத்து!
குண்டு குழிகளில் வண்டியேறிச் சற்று ஆடிவிட்டாலோ - அல்லது வண்டியிலிருப்போரின் விருப்பத்திற்கேற்ப வேகமாகப் போகாவிட்டாலோ, சேவலுக்குச் சவுக்கடிகள் விழுவதும் வாடிக்கை!
அந்த வடுக்கள் எல்லாம் அவனது தோளிலும் முதுகிலும் விலாப்புறத்திலும் செந்நிறம் காட்டிக் கொண்டிருக்கும். அடிக்கும்போது வலி பொறுக்க முடியாதுதான்; வாங்கிக்கொண்டால்தான் வயிறு நிரம்பும்! தாங்கிக் கொண்டால்தான் வாழ்வை நடத்த முடியும்!
“அடக் கடவுளே! உனக்குக் கண்ணில்லையா? வாயில்லாத இந்த ஊமையை இப்படி அடிக்கிறார்களே!” என்று சேவல் தன் மனத்துக்குள் சொல்லிக் கொண்டு, யாருக்கும் தெரியாமல் கண்ணீர்விட்டு அழுவான்!
செல்வந்தர் வீட்டில் திடீரென ஒரு புரட்சிகரமான மாற்றம் ஏற்பட்டது.
பெட்டி வண்டியிழுக்க, இரண்டு காளைமாடுகள் வாங்கப்பட்டன.
சேவலுக்கு ஒரே கவலை! தனக்கிருந்த வேலை போய்விடுமோ என்பதுதான், அவன் கவலைக்குக் காரணம்!
