உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
குறளோவியம்/பகுதி 181
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 181 · 181 / 300

“உம்! பேசுங்கள்!”

“அலை அலையாய்ச் சுருண்டு கிடக்கும் உன் கரிய கூந்தல்! அழகேறி நிற்கும் உன் அரும்புப் புருவங்கள்! என் நெஞ்சிலே உணர்ச்சி வெறியேற்றிய உன் நீண்ட மூக்கு! மனிதனை மயக்குவதற்கென்றே மாயனால் படைக்கப்பட்ட உன் மாம்பழ மேனி... இன்பவல்லியே! நான் உன்னை விரும்புவதுபோல நீ என்னை விரும்புகிறாயா?”

“நிச்சயமாக! நீங்கள்தான் இந்த இரதிதேவிக்கு ஏற்ற மன்மதன்! இந்த சுபத்திரைக்கு ஏற்ற அர்ச்சுனன்!”

“அப்படியா? இன்றே நான் பிறவியெடுத்த பயனைப் பெற்றேன்! கண்மணி! என்னையே உனக்குத் தந்துவிட்டேன்.”

“அன்பு ததும்புகிறது உங்கள் உள்ளத்தில்!”

“உன் உள்ளமும் அப்படித்தானே!”

“அன்பில்லாமலா உங்களுடனே வந்தேன்... ஆனாலும், ஆனாலும்....!”

“என்ன, என்ன சொல்கிறாய்...? ஏன் ஆனாலும் என்கிறாய்?”

“இன்றிரவு என்னுடன் இருக்க எவ்வளவு பொருள் தருவீர்கள்? தருவதாகச் சொன்னால் மட்டும் போதாது; முதலில் தந்துவிட்டுத்தான் என்னைத் தொடவேண்டும்!”

“சே! விலைமகளா நீ! நல்ல வேளை, உன் விழிவீச்சில் வீழ்ந்த நான் அடுத்த விபத்தில் சிக்காமல் தப்பிவிட்டேன்.”

- இப்படிக் கூறிவிட்டு, அவன் அந்த இடத்தைவிட்டு விரைந்து நடந்தான். அவள், கவலையேதுங் கொள்ளாமல், கண்வலை வீச வேறுபக்கம் திரும்பினாள்.

ஏமாற்றத்தால் தாக்குண்ட அவன், ஒரு சோலையோரமாகச் சென்று கொண்டிருந்தான். ‘என்ன அண்ணே! சுகம் தானா?’ எனக் கேட்டபடி ஒருவன் முதுகில் தட்டினான். இன்னொருவன் ‘வருகிறேன்னப்பா, குறைச்சல்!’ என்று சிரித்தவாறு எதிரே வந்து நின்றான். நலம் விசாரித்த இருவரும் அவனுக்கு அறிமுகமானவர்கள். நயவஞ்சக் கள்வர்கள். அவன் கைப்பொருளைக் கவர்ந்திட வந்தவர்கள். அவர்களிடமிருந்து தன்னையும் பொருளையும் காப்பாற்றிக் கொள்ள இடையில் செருகியிருந்த கத்தியை எடுத்துப் பாய்ந்தான்.

கள்வர் இருவரும் கதிகலங்கிப் போய் ஓடி மறைந்தனர்.

விலைமகள், கள்வர் - இவர்களிடமிருந்து தானும் பிழைத்துத் தன் பொருளும் பிழைத்தது பற்றி எண்ணிப் பெருமூச்சுவிட்டான்.

வீட்டுக்குச் சென்றான். வீட்டுத் திண்ணையில் அவன் நண்பன் உட்கார்ந்து கொண்டிருந்தான். “எப்போது வந்தாய்?” என்று அவன், நண்பனைப் பார்த்துக் கேட்டான்.

“எப்போது வந்தால் என்ன? இத்தனை நாள் உன்னோடு எதற்காகப் பழகினேனோ அதை நீ சிறிதுகூட எண்ணிப் பாராமல் உன் வாணிபக் கூட்டத்து மேலாளராக

வேறொருவனை நியமித்துக் கொண்டாயே; இது நியாயந்தானா என்று கேட்கத்தான் வந்தேன்!”