குறளோவியம்
பகுதி 180 · 180 / 300
மற்றொரு தோணியின் பெயர் ஆண்மை!
அய்யோ! இரண்டு தோணிகளுமே அவனைச் சுற்றிச் சுழன்று பற்றிக் கொண்ட காமவெள்ளத்தில் அடித்துக் கொண்டு போய்விட்டன.
“காமம் என்னும் கடுமையான வெள்ளம்; ஓர் ஆடவனின் நல்ல ஆண்மையையும் நாணத்தையும் - அதாவது அந்த இரண்டு தோணிகளையும் அடித்துக் கொண்டு போய்விடுகின்றது.”
என்கிறார் வள்ளுவர்! அதற்கு இதோ குறள் :-
“காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு நல்லாண்மை என்னும் புணை”
அதிகாரம் - 114 - நாணுத் துறவுரைத்தல்; பாடல் - 1134
புணை - தோணி
“நீ பெண்ணல்ல! புராணங்கள் கூறுகின்ற தேவர் உலகத்து ரம்பை, ஊர்வசி, திலோத்தமை ஆகியோரில் ஒருத்தியாகத்தான் இருக்க வேண்டும்.”
“ஓ! அப்படியா! அவ்வளவு அழகா நான்?”
“அவர்களைவிட நீ அழகியென்பேன்!”
“அந்த மூவரையும் பார்த்திருக்கிறீர்களா?”
“புராணக் கதைகள் வாயிலாகக் கேட்டிருக்கிறேன்.”
“என்னை உங்களுக்குப் பிடிக்கிறதா?”
“கண்ணே! இந்த மீனைப் பிடித்துவிட்ட தூண்டில்முள் அல்லவா உன் பார்வை!”
“ஓ! நல்ல இரசிகர்தான்! அப்புறம்?”
“அடடா! உன் மெல்லிய இதழ்கள், என் நெஞ்சத்தைத் துளைக்கும் மத யானைகளின் பருத்த கால்களைப்போல் காட்சி தருகின்றனவே!”
