குறளோவியம்
பகுதி 166 · 166 / 300
நெடிய தூண், அவர்கள் வருகையைக் கல்லறைக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் அந்தத் தூயவருக்கு உணர்த்துவதுபோல் நின்று கொண்டிருந்தது.
சுற்றுலாப் பயணிகள், கல்லறையைத் தங்கள் கண்களால் தொழுதனர்.
“எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது.”
அந்த வாசகத்திற்குப் பொருள் புரிந்து கொள்ள அயல்நாட்டினர் அவாக் கொண்டனர். மொழிபெயர்ப்பாளர் விளக்கினார்.
“கடமை, கண்ணியம், கட்டுப்பாடு - என்ற மூன்று சொற்களை மறைமொழிகளைப் போலத் தமிழர்களுக்குத் தந்தவர்! எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று தன்னைப் பின்பற்றியோருக்கு வலியுறுத்தியவர்! அந்த இதயத்துக்குச் சொந்தக்காரர் - அவர் பெயர்தான் அண்ணா! அண்ணாதுரையாகப் பிறந்தார்! இத்தகைய மறைமொழிகளை என்றும் அழியாத அளவுக்குத் தந்த காரணத்தால் அண்ணாவாக மறைந்தார்!”
அந்த விளக்கம்கேட்ட அயல்நாட்டுச் சுற்றுப்பயணிகள், கல்லறையைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டனர்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு - அந்தச் சொற்களின் ஆழத்தை ரசித்தனர்! புகழ்ந்தனர், போற்றினர்!
‘பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் சிறப்பை, உலகில் அழியாமல் விளங்கிடும் அவர்களது மறைமொழிகள் காட்டிவிடும்’
என்ற குறள் கருத்தின் மாண்பும் அந்தப் பயணிகளுக்கு விளக்கப்பட்டது.
“நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்”
அதிகாரம் - 3 - நீத்தார் பெருமை; பாடல் - 28
மடாதிபதியொருவர், பல்லக்கில் போய்க் கொண்டிருந்தார். பல்லக்கைத் தூக்கிச் சென்றவர்களுக்கோ கால்வலியும் தோள்வலியும் தாங்கமுடியவில்லை. அவர்களது துன்பத்தை மடாதிபதி எப்படி அறிவார்? அவரது வாய் ஆண்டவனின் திருநாமங்களை உச்சரித்துக் கொண்டிருந்தது. கையிலோ உருத்திராக்க மாலை! அந்த மணிகளை அவரது விரல்கள் உருட்டிக் கொண்டிருந்தன. சிந்தனையோ அவருக்கு வந்த வாழ்வு குறித்து சுழன்று கொண்டிருந்தது.
அந்த மடத்திற்கு ஏராளமான சொத்து சுகம் உண்டு. கண்ணுக்கெட்டிய தூரம் கழனிகள், தென்னந் தோப்புகள், கரும்புத் தோட்டங்கள், ஆற்றுப்படுகைகளில் ஆதீனத்திற்குச் சொந்தமான மூங்கில் காடுகள். அத்தனைக்கும் அதிபதியாகப் போகிறோம் என்று அவர் எதிர்பார்த்து அந்த மடத்திற்கு மாணவனாக வரவில்லை; ஏதோ வந்து சேர்ந்தார்; காவி யுடுத்தினார்; காகுத்தன், கைலைநாதன், கார்மேகவண்ணன் என்றெல்லாம் கடவுளர்களின் கதைகளைக் கற்றுக் கொண்டார்.
பெரிய மடாதிபதியின் பேரன்பைப் பெற்றார். பெரியவர், காலம் முடிவடையும் கட்டத்தில் அவரை மடத்தின் அதிபதியாக்கிவிட்டுக் கண்ணை மூடினார். அப்படி வந்த மேலான வாழ்வை எண்ணி மகிழாமல் இருக்க முடியுமா?
பல்லக்குப் போய்க் கொண்டேயிருந்தது. நீர்வீழ்ச்சியொன்றின் அருகே பல்லக்குக் கடந்து செல்லும்போது, மடாதிபதியின் திருவிழிகளில் ஒரு காட்சி தென்பட்டது. மங்கையர் இருவர் நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு, நீர் வீழ்ச்சியில் தங்கள் தலை முதல் கால்வரையில் குளிர்ந்த நீர் தழுவிடும் இன்பத்தை அனுபவிப்பதிலே ஓர் உவகை! வேகமாக விழும் அந்த நீரினிடையே கண்ணாடிப் பேழைக்குள் தெரியும் கயல் மீன்களைப் போல் அவர்கள் தோற்றமளித்தனர்.
அவர்களின் மேலாடையைக் கீழே தள்ளிவிட்டு அந்த நீர்வீழ்ச்சி அவர்களின்
பொங்கிப்பூரித்த அங்கங்களைச் சுவைபார்த்துக் கொண்டிருந்தது. எஞ்சியிருந்த உடைகளும் அவர்களின் உடலோடு ஒருசேர ஒட்டிக் கொண்டு, இயற்கையின் படைப்பை முழுமையாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.
மடாதிபதியின் கண்கள், நீர்வீழ்ச்சியின் பக்கம் பாய்ந்தன. அவர், தனது இமைகளைத் தாழ்ப்போட்டு மூடி, விழிகளுக்குத் தடை போடவில்லை. விழிகளைச் சுதந்திரமாகப் பறக்கவிட்டார். அவற்றைவிட அவர் இதயம் வலிவான இறக்கைகளைக் கட்டிக் கொண்டு நீர்வீழ்ச்சியின் பால் பறந்தது! கையிலிருந்த உருத்திராக்க மாலை உருளவில்லை. விரல்கள் அசைவற்றுப் போயின! இதழ்கள் இறைவன் நாமத்தை உச்சரிக்கவில்லை.
