உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
குறளோவியம்/பகுதி 165
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 165 · 165 / 300

“ஏன்; உடம்பெல்லாம் நோகிறதா இன்று?”

“சே! வாயை மூடு! என் கவலை என்ன தெரியுமா? வாரி வாரி இன்பத்தை வழங்கிய அந்த வள்ளல் என்னைவிட்டுப் பிரிந்திருக்கிறாரே; இன்னும் என்னை வந்து காணவில்லையே! அதை நினைத்துத்தான் துடித்துப் போகிறேன்.”

“என்னடி இது வம்பு! நேற்றுத்தான் காதலாற்று வெள்ளத்தில் நீச்சலடித்திருக்கிறாய்! அதற்குள் இன்று அவரை அடைய வேண்டுமே என எண்ணிக் கவலையா?”

“நீ என்னை முழுமையாக உணரவில்லையே பூங்கொடி! அவர் என்னை வந்து சேராதபோது இன்னும் வந்து சேரவில்லையே என்ற துன்பம்! சேர்ந்துவிட்டாலோ அப்போதும் என் மனத்துக்குத் துன்பம்தான்! என்னை அள்ளுவார், துள்ளுவேன்! அணைப்பார், இதழ் நனைப்பார்! அப்போதும் எனக்குத் துன்பம்தான்! ‘அப்போதுகூட என்னடி துன்பம்’ எனக் கேட்பாய்! இவ்வளவு இன்பத்தைத் தருகின்றவர் என்னை விடுத்துப் பிரிந்து செல்வாரே என எண்ணி அழும் என் உள்ளம்!

ஆகவே, அவரை நான் அடையாதபோது, அடைய முடியவில்லையே என்று அஞ்சுவேன்! அடைந்து விட்டாலோ; வரப்போகிற பிரிவை நினைத்து அஞ்சுவேன். எல்லா வகையிலும் என் நெஞ்சம் துன்பத்தையே அனுபவிக்கிறது.”

அவளது துன்பமான துன்பத்தையும் - இன்பமான துன்பத்தையும் - அவள் வாயிலாகவே கேட்டுப் பூங்கொடி, “களுக்” கென்று சிரித்தாள்.

“பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும் அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு”

அதிகாரம் - 130 - நெஞ்சொடு புலத்தல்; பாடல் - 1295

அயல் நாட்டுச் சுற்றுலாப் பயணிகள், இந்தியத் திருநாட்டைக் காண வந்தனர். வரலாற்றுப் பொன்னேடுகளாகத் திகழுகின்ற சிற்பக்குகைகள், ஓவிய மண்டபங்கள், பழங்கால மாளிகைகள், தொன்மை வாய்ந்த கோட்டைக் கொத்தளங்கள் அனைத்தையும் பார்த்து வியந்து போற்றினர்.

அடிமை விலங்கொடிக்க அயராது பாடுபட்டு, அன்பு வழியில் இந்திய நாட்டு விடுதலையைப் பெற்றுத்தந்து, மதவெறியன் ஒருவனால் படுகொலைக்கு ஆளான காந்தியடிகள் எரியூட்டப்பெற்ற இடம், எழில்மிகு இளமை காலத்தைக் கொடுஞ்சிறையில் கழித்துத் தியாக வாழ்வு நடத்தி, இந்திய மண்ணுக்குச் சுதந்திரம் கிட்டியபிறகு ஈடற்ற தலைவராகவும் இணையற்ற தலைமை அமைச்சராகவும் பல்லாண்டு காலம் பொறுப்பேற்று உலகில் சமாதானம் நிலவப் பாடுபட்ட நேரு பெருமானின் உடல் எரியூட்டப்பெற்ற இடம், அரசியலில் அருந்திறன் கொண்ட சிந்தனையாளர் மூதறிஞர் இராஜாஜிக்கு அமைக்கப்பட்ட நினைவாலயம், தியாகச்சுடர் காமராஜருக்கு எழுப்பப்பட்டுள்ள நினைவிடம், எதையும் ஆராயாமல் ஏற்றுக் கொள்ளாதே!

ஏன்! எப்படி? எனக் கேள்! என்று பகுத்தறிவு ஒளிபரப்பிய பெரியாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம், அனைத்தையும் கண்டனர்.

தென்புலத்துச் சிங்கம் தேவர் திருமகனின் திருவுருவச் சிலையைப் பார்த்தனர் மதுரையம்பதியில்! தாழ்த்தப்பட்டோருக்கென உரிமைக்குரல் கொடுத்த அம்பேத்காரின் புகழ்பாடும் கல்வாரிகளைக் கண்டனர். மதப்புயல் எழாமல் அரணாகக்

காத்து நின்ற காயிதே மில்லத் அவர்களின் நினைவு கலையாமல் நின்றுகொண்டிருக்கும் கலைக்கூடங்களைக் கண்டனர்.

இந்தியாவின் வடபகுதியிலிருந்து தென்பகுதி வரையில் காணவேண்டிய சுற்றுலா இடங்கள் அனைத்தையும் பார்த்துப் பரவசமுற்ற அந்த அந்நியப் பயணிகளின் பார்வை, சென்னையின் நீண்ட கடற்கரைமீது விழாமல் இருக்குமா?

அந்தக் கடற்கரையில் தென்னஞ்சோலைகளுக்கிடையே, கருமை நிறப் பளிங்குக் கற்களால் ஆன கல்லறையை நோக்கின அவர் தம் கண்கள்!

அணிந்திருந்த காலணிகளையெல்லாம் தொலைவிலே கழற்றிவைத்துவிட்டு, அமைதி குடிகொண்டிருந்த அந்தச் சோலையில் நடந்தனர்.

கல்லறையில் எரிந்துகொண்டிருந்த என்றும் அணையாத விளக்கு, அவர்களை வரவேற்றது!