குறளோவியம்
பகுதி 164 · 164 / 300
இரு நாடுகளுக்கிடையே நட்புறவு நிலைக்க வேண்டுமென்பதற்காகத் தூதன் பணியாற்றுவதுண்டு.
தனது நாட்டின்மீது வீண் பகைகொண்டு, வெறுப்பு மிகுதியால் போரிடத் தயாராகும் பகைநாட்டு மன்னனிடம் விளக்கங்கள் அளித்து, அவை பயனற்றுப் போனபிறகு, “போருக்கான அறைகூவலை ஏற்றிட எமது மன்னனும் தயார்தான்” எனச் சுடர்முகந்தூக்கி சூளுரைத்துவிட்டு வரும் தூதனும் உண்டு!
இரு சாராருக்கிடையே எழுந்திடும் காழ்ப்பு உணர்ச்சியைக் குறைத்து மோதுதலைத் தவிர்த்திட வேண்டுமென முயற்சி மேற்கொள்கிற ஒரு தூதுவன், தான் யாருடைய சார்பில் செல்கிறானோ - அவர்களுக்காகப் பல்வேறு கருத்துக்களையும் நிகழ்ச்சிகளையும் தொகுத்துச் சொல்லும் ஆற்றல் உடையவனாகவும் அதே சமயத்தில் சொல்லத் தேவையற்ற பயனற்றவைகளைச் சொல்லாமல் விலக்கிடும் பண்பு கொண்டவனாகவும் இருந்திட வேண்டுமென வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கிற சொல்லவன்மை ஆகியவை, தூது உரைப்பவருக்குத் தேவையானவை என்றும் கூறுகிறார். கற்பன கற்று, பிறருடைய பகை நிறைந்த பார்வைக்கு அஞ்சாமல், கேட்போர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லுகிற திறனும் தூதுவனுக்கு வேண்டுமென வலியுறுத்துகிறார். தூய ஒழுக்கம் உடையவனாகவும் - துணை உடையவனாகவும் - துணிவு உடையவனாகவும் தகுதி பெற்றிருப்பவனே தூதனாகப் பணியாற்ற முடியும் என்றும் இலக்கணம் வகுக்கிறார்.
தனக்கு அழிவே வருவதாக இருந்தாலும் அதற்காக அஞ்சிடாமல், தன் தலைவனுக்கு நன்மை ஏற்படுமாறு கடமையாற்றுகிறவனே நல்ல தூதன் என்றும் அடையாளம் காட்டுகிறார்.
பயனற்றவைகளை நீக்கி, பலவற்றைத் தொகுத்துச் சொல்லித் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகிறவனே தூதன்! அஃதன்றி, தலைவனையே பகைவர்களிடம் காட்டிக் கொடுத்துத் தன்னையும் தன் சுற்றத்தாரையும் காத்துக் கொள்கிறவன் தூதனல்ல; அவன் ‘சுதன்!’
தலைவனுக்கு நன்மை தேடுகிற தூதனைப் பற்றி, இதோ இந்தக் குறள் குறிப்பிடுகிறது.
“தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாம் தூது”
தனக்கேற்படும் அழிவைப் பற்றிக்கூட அஞ்சாது, தன் தலைவனாம் அரசனுக்கு உண்மையான பற்றுள்ளவனாக இருந்து நன்மையை விளைவிப்பவனே தூதன் என்று விளக்குகிற குறள் இதோ :
“இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு உறுதி பயப்பதாம் தூது”
அதிகாரம் - 69 - தூது; பாடல்கள் - 685, 690
மணல் மெத்தை விரித்திருக்கும் கடற்கரையில், மாங்களியும் பூங்கொடியும் கையைத் தலைக்கு முட்டுக்கொடுத்தவாறு நிலா இரண்டு நிலத்திற்கு இறங்கி வந்ததைப் போல் காட்சியளித்துக் கொண்டிருந்தனர். பூங்கொடியின் பூவிதழ்களில் புன்னகை ஒளி! மாங்களியின் முகமோ வாடிய மலர்போல்! அந்தத் தங்கச் சிலைகளிரண்டின் அங்கங்களைக் கண்டு களித்திட, ஆடைகளைத் தொட்டிழுத்துக் கடற்காற்று குறும்பு விளையாட்டில் ஈடுபட்டிருந்தது.
அலைகளுக்கும் ஆசைபோலும்! திடீரென ஓரலை வந்து தனது முத்துநுரை எச்சிலால் மாங்களியின் முழங்கால்வரை நனைத்துவிடும். மற்றோர் அலையோ பூங்கொடியின் தொடையினைத் தொடுவதற்கு எத்தனிக்கும். காற்றின் குறும்பும் கடலலைகளின் சேட்டைகளும் அவர்களிருவரின் உருக்கமிகு உரையாடலைக் கெடுத்துவிடவில்லை.
“மாங்களி! நானும் கவனித்துக் கொண்டேயிருக்கிறேன் உன்னை! எப்போது பார்த்தாலும் உன் வட்ட மதிமுகம் வாட்டமுற்றே இருக்கின்றதே! அதற்கென்னதான் காரணம்? கொஞ்சம் சொல்லேன்!”
“பூங்கொடி! உன்னிடம் மனம்விட்டுப் பேச என்றைக்காவது நான் தயங்கியதுண்டா? நேற்றிரவு நடந்த இன்ப நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்தேன்...”
“ஓகோ! விண்மீன்கள் வெட்கியோட கடற்கரை மண்மீது கொட்ட மடித்தார்கள்! அலைகளை ஆடும் படுக்கையெனக் கொண்டு அமளி நடத்திக் குதித்தார்கள்! வெண்மணலையள்ளி ஒருவர் மீதொருவர் வீசிக்கொண்டு ஈரத் தரையில் உங்கள் காதல் வீரத்தைக் காட்டிக் கொண்டார்கள்! சரி! இன்னும் என்னென்னவோ செய்தீர்கள்! அதை நினைத்து நினைத்து மகிழ வேண்டுமே தவிர - மலர் கூம்பியதுபோல முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறாயே; ஏன்?”
“பூங்கொடி! உனக்கென்ன தெரியும் என் வேதனை?”
