குறளோவியம்
பகுதி 167 · 167 / 300
“ஏய்! பல்லக்கை நிறுத்துங்கள்! நாம் சற்று இளைப்பாற வேண்டும். உறக்கம் கண்ணைத் தழுவுகிறது.” என்று பல்லக்குத் தூக்கிகளுக்கு ஆணையிட்டார். பல்லக்குத் தூக்கியவர்கள் நின்றார்கள். அவர்களும் நீர்வீழ்ச்சியைப் பார்த்தார்கள். மடாதிபதியின் மனநிலை அவர்களுக்குப் புரிந்துவிட்டது. பல்லக்கைக் கீழே இறக்கி வைத்தார்கள். மடாதிபதி, நீர்வீழ்ச்சியையே பார்த்துக் கொண்டிருந்தார். பல்லக்குத் தூக்கிகளில் ஒருவன் பல்லைக் கடித்துக் கொண்டான்.
இருந்தாலும் ஆத்திரத்தைக் காட்டிக் கொள்ள முடியவில்லை, வெளிப்படையாக!
“அய்யன்மீர்! உங்கள் விருப்பம்போல் களைப்பாறுங்கள்! இதோ, வெயில் உள்ளே படாமல் இருக்க இந்தப் பட்டுத் திரையைப் போட்டு விடுகிறேன்”
என்று கூறிக்கொண்டே பல்லக்கின் இருபுறத்திலுமிருந்த பட்டுத்திரையை இழுத்து விட்டு நன்றாக மூடிவிட்டான். மடாதிபதிக்குப் பெரிய ஏமாற்றம்! “அரிய காட்சிக்குத் தடை விதித்துவிட்டானே முட்டாள்!” என்று முணுமுணுத்துக் கொண்டார்.
ஆட்கள் நடமாட்டத்தைக் கண்ட அந்த மங்கையரும் அங்கிருந்து உடனடியாக அகன்று விட்டனர். மடாதிபதிக்கு உறக்கமும் வரவில்லை; ஓய்வும் கொள்ளவில்லை. பட்டுத் திரையை நீக்கிவிட்டுப் பார்த்தார். அந்தப் பக்கம் பொற்சிலைகளைக் காணவில்லை. பல்லக்குத் தூக்கிகளோ ஒரு மரத்தடியில் அமர்ந்து, நீர்வீழ்ச்சியின் பக்கம் பார்க்காமலே வேறுபுறமாகத் திரும்பி உட்கார்ந்து ஏதோ சுவடி படித்துக் கொண்டிருந்தனர்.
மடாதிபதி; “என்னப்பா, என்னை இங்கே விட்டுவிட்டுப் படிக்கிறீர்கள்? என்ன அது?” என உருமினார்.
“திருக்குறள் படிக்கிறோம் ஆண்டவனே! மேல்நிலையில் இருந்தாலும் உயர்ந்த பண்பு இல்லாதவர்கள் மேலானவர்கள் அல்லவாம்! எங்களைப்போல் கீழ்நிலையில் இருந்தாலும் இழிந்த குணம் இல்லாதவர்கள் கீழ்மக்கள் அல்லவாம்! இது வள்ளுவர் கருத்து.”
இப்படிச் சொன்னார்கள் அந்தப் பல்லக்குத் தூக்கிகள்! மடாதிபதிக்கு முகம் வாடிப் போயிற்று! மீண்டும் பல்லக்குச் சவாரி தொடர்ந்தது.
“மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர்”
அதிகாரம் - 98 - பெருமை; பாடல் - 973
இன்பமளித்த இரவுக்கு வாழ்த்துக்கூறி பேரன்புப் பெட்டகமாம் காதலனின் கன்னத்தில் நூறு கொடுத்துத் திரும்ப வட்டியுடன் அட்டியின்றி அக்கணமே பெற்றுக் கொண்டு “இரு இரு” என அவனிழுக்க - “ஊஹூம்” என அவள் தடுக்க - அன்றைய காதல் காவியத்தை அத்துடன் முடித்துக் கொண்டு இருவருமே காலைக் கதிருக்கு வணக்கம்கூறிக் கடமையாற்றக் கிளம்பி விட்டனர்.
அழகிய வாசல்புறத்தில் அரிசிமாக்கோலம் இட்டிட வந்தாள். அன்னப்பறவை போல் அமைத்த கோலம் அவள் எண்ணப்பறவையின் சிறகை அசைத்தது. “அன்னம் போல் இருக்கின்றாய்” எனச் சொன்ன அத்தானிடம் “அள்ளி உண்ணுங்களேன்” என்று கேலி புரிந்து தோளில் சாய்ந்துகொண்டதும் - அந்த இனிய பதிலின் தித்திப்பைச் சுவைத்து அவன் அவளை இறுகத் தழுவிக் கொண்டதும் கோலத்தில் கோலம் காட்டின.
வாசல்புறம் விடுத்து அடுக்களைக்கு வந்தவுடன் காய்ச்சுவதற்குப் பால் எடுத்த போது, முன்னாள் இரவு முப்பாலை எழுத்தெழுத்தாய்ப் பிரித்தெடுத்துப் பொருள் கண்டு இன்பம் துய்த்ததெல்லாம் எதிர்நின்று மகிழ்வூட்ட - அந்த மங்கை நல்லாள் மயங்கிப் போனாள்.
கூடத்தில் வந்தமர்ந்த அத்தானுக்கு அப்பத்தை எடுத்து வைத்து - அதனை அவன் விரலாலே தொடுகின்ற அழகினையும் அதனை மெல்ல விழுங்குகின்ற பாங்கினையும் பார்த்துக்களித்துப் பணிபுரிய விடை கொடுத்து அனுப்பிவிட்டு, அவன் போகும்வழி விழிவிடுத்து வீட்டில் ஒரு தூண்போல அசையாமல் நின்றிருந்தாள்.
இரவில் அனுபவித்த இன்பத்தையெல்லாம் அசை போட்டுப் பூரித்துப் போக, அந்தக் காலநேரம் அவளுக்குத் துணையாக இருந்தது.
அதன் பின்னர் அவள் கடமைகளும் தொடர்ந்தன. பணிபுரியப் போயிருந்த கணவனுக்குப் பிற்பகல் உண்பதற்குக் கட்டுமுதும் அனுப்பி வைத்தாள்.
அதன்பிறகு மாலை வந்தது. காலைபொழுதில் களிப்பிலாடிய அந்த மயில், மாலைப் பொழுது கண்டு மனங்கலங்கி நின்றது! ஏன்? எதற்காக? இரவுதான் அவன் வருவான். அப்படித்தான் சொல்லிவிட்டுப் போயுள்ளான். அதற்குள் காலையில் அரும்பி மாலையில் மலரும் அந்தக் காதல் நோய் அவளைப் பற்றிக் கொண்டதே; அவள் என் செய்வாள்! நோயின் கொடுமையால் துடித்துப் போனாள்! மாலை நேரம் அவளை வருத்தி வாட்டியது. அவளுக்குக் காலையையும் மாலையையும் ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றியது.
