உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
குறளோவியம்/பகுதி 143
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 143 · 143 / 300

கண்டு இதயத்தில் இன்பம் மொண்டு செல்லலாம்” எனத் துடித்திட்ட இளைஞர்கள் அந்த ஊரில் பலருண்டு.

குளம் சென்று அவள் நீராடும்போது அவளழகை, அவள் வயதுள்ள பெண்களே கண்டு வியப்பதுண்டு. அவள், யாரைத்தான் காதலிக்கிறாள்? யாருக்குத் தன்னை ஒப்படைத்திருக்கிறாள்; அந்தப் பெரும்பேறு பெற்றவன்தான் யார்? என அறிந்துகொள்ளவும் ஊர் தவியாய்த் தவித்தது.

அந்த இன்பக் கனியை யாருமே சுவைக்கவில்லை. அவள் யாருக்கும் அந்த வாய்ப்பைத்தரத் தயாராயில்லை. தன்னேரில்லாத தன் அழகைக் குறைத்துக் கொள்ள அவள் விரும்பவில்லை. தன் எழிலைக் தானே கண்ணாடியில் பார்த்து மகிழ்வாள்; பெருமைப்படுவாள். ஆடவன் ஒருவன் கைப்பட்டால், தன் உடற்கட்டு உருக்குலையும் - அழகு சரியும் - அதனால் எவனுக்கும் ஒப்புதல் தரவுமில்லை; அந்தப் பேச்சுக்கே இடம் வைக்கவுமில்லை.

நாட்கள் நகர்ந்தன. ஆண்டுகள் உருண்டன. மணவிழா நடக்காமலே மணிவிழாப் பருவம் வந்தது அவளுக்கு! அந்த அழகுச் சிலைக்கு இப்போது வயது அறுபது! காளையொருவன் கரம் பிடித்தால் கட்டழகு பட்டொழியும் எனக்காத்து வந்த அவளழகு, காலத்தின் கரம்பட்டு மெல்லமெல்லக் கரைந்து போயிற்று! கிழமானாள்! நரை, திரை, மூப்புடன் நடமாடும் பழமானாள்!

இப்படியொரு பெண்ணின் கதையை, வள்ளுவர் ஒரே வரியில் உருக்கமுடன் எழுதிக் காட்டுகிறார்.

“மிகுந்த அழகுடைய ஒரு பெண் தனியாகவே வாழ்ந்து முதுமையடைந்துவிட்டாளாம்.” இதுதான் வள்ளுவர் கூறும் ஒரு பெண்ணின் கதை! இந்தக் கதையை ஏன் சொல்கிறார் தெரியுமா? இது கதையல்ல! ஒரு ஈடு இணையற்ற உவமை!

“பொருளற்று எங்கும் வறியவனுக்கு ஒரு பொருள் கொடுத்து உதவி செய்யாதவனுடைய செல்வம், ஒரு அழகான பெண், தனியாகவே வாழ்ந்து முதுமை அடைவதைப் போன்றது.”

இதோ அந்தக் குறள்:-

“அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றாள் தமியள்மூத் தற்று.”

அதிகாரம் - 101 - நன்றியில் செல்வம்; பாடல் - 1007

“தாத்தா! அதோ - தள்ளாடி நடந்து போகிறாரே; அவர் யார்? ஆளைப் பார்த்தால் காட்டில் வாழ்ந்தவராகக் காணப்படுகிறாரே! ஆனால், நடையில் ஏன் இந்தத் தளர்ச்சி?” என்று பேரன் கேட்டான்.

“அவரா? ஆள் வலுவானவர் மட்டுமல்ல; அறிவு நூல்களைக் கூடக் கற்றவர்! ஆயினும் அவர் தடுமாற்றத்தோடு நடப்பதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. தூக்க முடியாத சுமையைத் தூக்கிக்கொண்டு செல்கிறார். அதனால்தான் தள்ளாடிடும் நிலை” என்று பேரனுக்கு அந்த முதியவர் பதில் அளித்தார்.

இளைஞனல்லவா? அத்துடன் அவனுக்கு மன நிறைவு ஏற்படவில்லை. “என்ன தாத்தா! அந்த மனிதர் தலையில் எந்தச் சுமையையும் காணவில்லையே! நீங்கள், அவர் பளுவைத் தூக்க முடியாமல் திண்டாடுவதாகக் கூறுகிறீர்களே!” என்று கிழவரை மடக்கினான்.

“தளிர்ப் பருவம் உனக்கு! அதனால் அந்த மனிதர் தடம் மாறி நடப்பது உனக்குத் தெரியவில்லை. அற வழியிருக்க, அதனை விடுத்துப் பிற வழியில் அவர் செல்வது ஏன் என்று எனக்குத் தெரியும். அவர் சுமந்திருக்கிற மூட்டைகளின் அழுத்தத்தால் அவர் கால்கள் பின்னுகின்றன. எனவே அறவழியை விடுத்து எங்கு செல்கிறோம் என்று தெரியாமல் கால்கள் போகும் வழி போய்க் கொண்டிருக்கிறார்”

“கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் தாத்தா! என்ன மூட்டை? என்ன சுமை? ஏன் அவற்றை அவர் வீணாகச் சுமக்கிறார்? அந்தச் சுமை எதுவும் என் கண்ணுக்குத் தெரியவில்லையே!”

“கண்ணுக்குத் தெரியாது! ஆனால், அறிவுக்குப் புலப்படும் அந்தப் பெரும் சுமை! சொல்லுகிறேன் கேள்! ஒரு பொருளின் மீது மனிதன் விருப்பங்கொள்வது - அல்லது ஆசைப்படுவது இயல்பு! ஆனால், அதை அடைவதற்காக எத்தகைய குறுக்கு வழிக்கும் ஒருவன் தயாராகிக் கொள்கிறான் என்றால், அந்த ஆசை அவனை மனித சமுதாயத்தின் மதிப்பை இழக்கச் செய்து, அவன் தலையில் பெரும் சுமையாக ஏறி உட்கார்ந்து கொள்கிறது. அப்படிப்பட்ட ஆசையை இதோ அந்த மனிதர் சுமந்துகொண்டு நடக்கிறார்.

தன்னுடைய தனிப்பட்ட ஆசாபாசங்களுக்காகத் தன்மானத்தையும் இழக்கத் தயாராகிவிட்டாரே என்று விபரமறிந்தோர் வியந்தனர். அவர்களைக் கண்டு அவர் கொண்ட சினம் மலைபோல் உருவெடுத்தது! அந்தச் சினமெனும் பெரும் சுமையையும் தூக்கிக்கொண்டு நடக்கிறார். எப்படியிருந்த மனிதர் இப்படி ஆகிவிட்டாரே என்று அவருக்காக இரக்கப்பட்டவர்கள் மீது கடுஞ்சொற்களை வாரியிறைத்தார். அந்தக் கடுஞ்சொற்கள்; யானையானது தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்டது போல் - அவர் தலைக்கே மற்றுமொரு சுமையாக வந்து சேர்ந்தது!

இத்தனை சுமையுடன் அவரால் எப்படி அறவழியில் பயணம் செய்திட முடியும்? அதனால்தான் பாதை தவறிப் பரிதவிக்கிறார்.”