உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
குறளோவியம்/பகுதி 142
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 142 · 142 / 300

“இல்லை! இல்லை! எமனைத்தான் பார்த்துவிட்டு வருகிறேன்.”

“அப்படியா? அதுதான் மிரண்டு போயிருக்கிறாய்! எப்படியிருந்தான் எமன்? எருமை வாகனத்தில் எதிரே வந்தானா? கையில் உயிர்களைப் பறிக்கும் பாசக்கயிறு வைத்திருந்தானா? அந்தக் கயிறு எப்படி இருந்தது? தூக்குக்கயிறு போல இருந்ததா? ஆள், அமாவாசை இருட்டைப்போல கறுப்பா? நெருப்பைப் போல இருந்தனவா கண்கள்? இரு கோடரியை மாட்டிவிட்டதுபோல மீசைகள் உண்டா அவனுக்கு? அவன் சிரித்தால் கோடை இடி இடிப்பதுபோல் இருக்குமாமே! என்ன எழினி?

ஏன் என் ஆவலைத் தூண்டுகிறாய்? எமன் எப்படித்தான் இருந்தான் சொல்லேன்!”

“இனியனே! என் நண்பனே! எமன் என்று கூறப்படுவதைத்தான் நானும் நீயும் கேள்விப்பட்டிருக்கிறோம். எமன் என்பது எருமையில் வருவதுமில்லை! பயங்கர வடிவம் கொண்டதுமில்லை! உயிர்களைக் கவரக் கையில் பாசக்கயிறு வைத்திருக்கவுமில்லை!”

“பின் என்ன எழினி? நீ என்னைத்தான் பார்த்தாயா?”

“எமன் ஓர் ஆணே அல்ல!”

“பிறகு?”

“அழகின் வடிவம்! அற்புதப் படைப்பு! நிலவொளியை உருக்கி வார்த்த மேனி! தாமரையின் மலரே முகம்! அதன் மொட்டுக்களே மார்பகம்! புன்னகை மின்னும் பொன் இதழ்கள்! பூவையொத்தவளாம் அந்தப் பூவையைக் கண்டேன் சந்தைக் கூட்டத்தில்! நான் எதிர்பாராத நிலையில் இரண்டு கூரிய வேல்கள் என் நெஞ்சில் தைத்தன. நான் தோல்வியை ஒப்புக்கொண்டு புறங்காட்டி ஓடிவந்து விட்டேன். இனியா! என் நண்பா! இப்போது புரிகிறதா? எமன் என்று கூறப்படுவதை இதுவரையில் நான் அறியாமல் இருந்தேன்.

சந்தையில் கண்டேனே அந்தச் சந்தனப் பாவையை; அவளைப் பார்த்த பிறகுதான் எமனுக்கே எனக்குப் பொருள் புரிகிறது. எமன் என்பது பெண் தன்மையுடன் கூடியதும் ஆண்கள் மீது போர் செய்து வெற்றி பெறக்கூடிய பெரிய கண்களாம் போர்க்கருவிகளையும் கொண்டது.”

“ஓகோ! விழிவேல் பாய்ந்து காயத்துடன் ஓடிவந்திருக்கிறாயா? உன் உயிரையே பறிப்பதற்கும் பாசக்கயிறு அந்தக் கண்கள் வழியாக வீசப்பட்டு விட்டது போலும். சந்தேகமில்லை; நீ சந்தித்தது எமனேதான்!”

“இனியா! அந்த எமனை மீண்டும் காணவேண்டும் நான்! திங்கள்தோறும் எதற்காகச் சந்தை கூடவேண்டும். தினந்தோறும் கூடினால் என்ன?”

எழினியை, இனியன் கட்டிப் பிடித்துக்கொண்டு கலகலவெனச் சிரித்து, “கவலைப்படாதே! இப்படியொரு எமனை நான் ஏற்கனவே சந்தித்து - எல்லாமே முடிந்து, இரண்டு குழந்தைகளுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறேன். அடுத்த திங்கள்சந்தையின்போது, நீ கண்ட எமனை உனக்கே உரியதாக்குகிறேன்” என்று உறுதி கூறினான்.

“பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன் பெண்டகையால் பேரமர்க் கட்டு.”

அதிகாரம் - 109 - தகையணங்குறுத்தல்; பாடல் - 1083

அழகோவியம் அச்சுப்பதுமை இளங்கிள்ளை எழில்புறா மாதுளைமுத்து மாணிக்கவல்லி

- இப்படி அவளைப்பற்றி அடுக்கிக்கொண்டே போகலாம். சொற்களுக்குத் தான் பஞ்சம் ஏற்படும், அந்தச் சொக்கத்தங்க மேனியாளைப் புகழ இயலாமல்! உச்சிமுதல் உள்ளங்கால் வரையில் இளமை கொழிக்கும் உருவம். உலகைத் துறந்த முனிவனையும் கவர்ந்திழுக்கும் கன்னிப் பருவம். வில்வொத்த புருவம். விழியிரண்டும் கணைகள். பல் வரிசை முத்தாரம் எனலாம். ஆனால், முத்தாரம் முத்தமிடும்போது சுவைக்காதே! தேனமுத அருவியினிலே நனைந்திருக்கும் முத்துக்கள் அன்றோ அவள் பற்கள்!

ஒடியுமோ அவள் இடையென்ற கவலையின்றி ஓங்கி நிற்கும் இரு கொடுமுடிகள்! “மொத்தத்தில் அழகுப் பூங்கொடியென்று கூறிவிடலாம்” என முத்தாய்ப்பு வைத்தால்தான் தமிழ்க் கவிஞர்கள் தப்பமுடியும் எனும் அளவுக்கு இன்பக் கவிதைகட்டும் கட்டுப்படாத பேரழகுப் பெட்டகமாய் அந்தப் பெண் விளங்கினாள்.

தாயில்லை - தந்தையுமில்லை - உற்றார் உறவினர் யாருமில்லை! தனியாகத் தான் அவள் வீட்டில் இருந்தாள். “கதவோரம் நிற்கமாட்டாளா? கணநேரம் அவள் எழில்