குறளோவியம்
பகுதி 141 · 141 / 300
தொட்டால் துவளக் கூடிய பூங்கொடிதானே என்ற துணிவுடன், அமுதத்தின் தோள் மீது கையை வைத்தான்.
அவள் எந்த மறுப்பும் சொல்லாமல் நடந்து கொண்டிருந்தாள். அவனும் அவளைத் தொடர்ந்துகொண்டிருந்தான்.
ஒரு படகின் ஓரம் இருள் மெல்ல மெல்லத் தன் ஆதிக்கத்தைச் செலுத்திக் கொண்டிருந்தது.
“உட்காரலாமே!” என்றான் இராமன்.
சிரித்துக் கொண்டே அமுதமும் அங்கே உட்கார்ந்துகொண்டாள். அலுவலகப் பணிகள் குறித்து அமுதம் பேசினாள். இராமனோ அவளுடன் பேசிக்கொண்டே அவளை இறுகத் தழுவிக்கொண்டான். இமைப்பொழுதுதான்! அதற்குள் அமுதம் இராமனின் பிடியிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டு, “சீ! என்ன நினைத்துக் கொண்டாய் என்னை! கள்ளங் கபடமில்லாமல் எல்லோரிடமும் கலகலப்பாகப் பழகுவதாலேயே என் கற்பைக் கடைச்சரக்காக எனக் கருதிவிட்டாயா?”
எனச் சீறிச் சினந்து, புயல் வேகத்தில் அந்த இடத்தை விட்டுப் பறந்துவிட்டாள்.
இராமனின் முகத்தில் அசடு வழிந்தது. வீட்டுக்குத் திரும்பினான், வெட்கத்தால் தலை குனிந்தவாறு!
வீட்டு வாயிலில் அவனுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. விழிகளை அகலத் திறந்து பார்த்தான். கதவின் முகப்பில் ஒரு தாளின் சுருள்! அந்தத் தாளை எடுத்துப் பிரித்தான். அதிலிருந்த எழுத்துக்களைப் படித்தான்.
“அன்பு மிகுந்த இராமனுக்கு, அடுத்த வீட்டுக் கண்ணன் அறிவிப்பது! அன்னத்தைச் சிறைப்படுத்தி அவள் கற்பைக் காக்க நீ வகுத்த திட்டத்தில் தோல்வி அடைந்துவிட்டாய்! சிறையிட்டு ஒரு பெண்ணைக் காப்பதைவிட, அந்தப் பெண், கற்பு எனும் நிறையைக் காத்துக் கொள்ளும் பண்புடையவளாக இருப்பதே, தன்னை தானே காத்துக்கொள்ளும் அரணாக அமையும் என்பதை நீ அறியவில்லை. எங்களை மன்னித்துவிடு! அன்னமும் நானும் உன்னைவிட்டு நெடுந்தொலைவு சென்று விட்டோம்.”
அந்த எழுத்துக்கள் இராமனைப் பார்த்துக் கெக்கலி கொட்டிச் சிரித்தன. இராமன் அப்படியே மயங்கிய நிலையில் தலையைப் பிடித்துக்கொண்டு வாயிற் படியில் உட்கார்ந்தான்.
“சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.”
அதிகாரம் - 6 - வாழ்க்கைத்துணைநலம்; பாடல் - 57
“என்னப்பா எழினி! திங்கள் சந்தைக்குப் போய் இப்போதுதான் திரும்புகிறாயா? கைகளில் எதுவும் பொருளைக் காணோம்! ஏன்; ஒன்றும் வாங்கவில்லையா? சந்தைக்குப் போகவேண்டுமென்று துடித்துக்கொண்டு கிளம்பினாய்! சோர்ந்துபோய் வருகிறாயே; என்ன காரணம்?”
இனியனின் கேள்விக்கு, எழினி விடையளிக்காமல் எங்கேயோ நினைவை அலையவிட்டுக்கொண்டு நின்றான்.
குன்றென விளங்கும் அவன் தோளைப் பிடித்துக் குலுக்கி, “இலவு வெடித்துப் பஞ்சு காற்றில் பறப்பதுபோல உன் சிந்தனையை எங்கோ பறக்க விட்டுவிட்டுத் திகைத்து நிற்கிறாயே; ஏன்? என்ன நடந்தது?” என்று இனியன், கேள்விகளை அடுக்கினான்.
“ஒன்றுமில்லை இனியா! எமனைச் சந்தித்துவிட்டு வந்தேன்” என்றான் எழினி, அமைதியாக!
“எமனையா? எங்கே சந்தித்தாய்? எப்படியிருக்கிறான் அவன்? உண்மையிலேயே எமனைச் சந்தித்தாயா? அல்லது ஏதாவது விபத்திலிருந்து தப்பியதைத்தான் இப்படிக் கூறுகிறாயா?”
