குறளோவியம்
பகுதி 137 · 137 / 300
“எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசாதே! ஆணவத்தைக் குறைத்துக் கொள்! அடக்கத்தைக் கடைப்பிடித்திடு!” என்று அவனுக்கு வேண்டியவர்கள் சிலர் வேண்டுகோள் விடுத்தனர்.
“எனக்கு அறிவுரை கூறுவோர் யாருமில்லை. நானே எல்லாம்! என் வலிமை எனக்குத் தெரியும்! பேசாது செல்க!” என விரட்டியடித்தான் அவர்களை!
அனைவரும் தொலைவில் சென்று, அவனையே உற்று நோக்கிக் கொண்டிருந்தனர். அவன் அவர்களைப் பார்த்து ஓங்கிய தொனியில் உரை நிகழ்த்தினான்:
“உங்களால்தான் மேலே ஏறினேன் என்று சொன்னீர்கள்; இதோ என் மன வலிமைக்கும் உடல் வலிமைக்கும் சான்று காட்டுகிறேன் பாரீர்! இந்தச் செங்குத்தான பாறையிலிருந்து கீழே குதிக்கிறேன் காணீர்! அப்போது புரியும் என் வீரமும் தீரமும் உங்களுக்கு!”
எனக் கூறிக்கொண்டே பாறையிலிருந்து கீழே குதித்தான். தரையில் குதிப்பது போல் குதிக்காமல், தண்ணீரில் தலைகீழாகக் குதிப்பதுபோல் குதித்த காரணத்தால், தரையில் மோதிய தலை சிதறுண்டது. குருதி வெள்ளத்தில் அவன் உடல் நனைந்து துடித்து இறுதியாக அசைவற்று கிடந்தது. பாவம்; தன்னைப் பற்றிப் பெரிதாக எண்ணிக்கொண்டு மற்றவர்களோடு ஒத்துப் போகவும் இசையாமல், அவர்களையும் மதிக்காமல், தன் வலிமையையும் உணராமல் வீணாக நொறுங்கிப் போனான், தன்னைத்தானே வீரனென்று பிதற்றித் திரிந்த அந்த வீரன்.
இப்படிப்பட்டவர்களுக்காக வள்ளுவர் தீட்டிய குறள்தான் இது:-
“அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும்.”
அதிகாரம் - 48 - வலியறிதல்; பாடல் - 474
உறக்கமெனும் பெண்ணாள், இமைக் கிளையில் கயிறுகட்டி ஊஞ்சலாட வரவே இல்லை. சுண்டக் காய்ச்சிய பாலும் சுவைமிகு கனிகளும் அந்தச் சுந்தரியின் கவனத்தைக் கவரவே இல்லை. படுக்கையறையினை, அவள் பட்டுப் பாதங்கள் அளந்து கொண்டிருந்தன. ஐந்துமுகக் குத்துவிளக்கின் கொழுந்துச் சுடர்கள் அனைத்தும் அவளையே நோக்கி ஆவலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. நடந்து
கொண்டேயிருந்தவளின் நாக்கு நிறப் பாதங்கள் செம்பருத்திப் பூப்போலச் சிவப்பேறிவிட்டவே, படுக்கையறையையொட்டிய வெளிமாடத்துக் கைப்பிடிச் சுவர் ஒன்றில் இடையமர்ந்து நின்றுகொண்டு, செங்காந்தள் விரல்கள் சோர்ந்துகொண்டு நிலவு முகத்திற்கு முட்டுக்கொடுத்தவாறு, விண்நோக்கி வெறித்துப் பார்த்து “எரிகின்ற தண் நிலவே, என்னை மட்டும் ஏன் தகிக்கின்றாய்?”
என விழிகளால் சினந்து கேட்டாள்.
அப்போது வெளிமாடத்திற்கருகே ஒலியொன்று எழுந்து, பின்னர் ஓய்ந்தது.
என்னவென்று தெரிந்துகொள்ள, அந்தப் பொன்மகளின் இதயம் துடித்தது.
ஒலி வந்த திசையை நோக்கினாள்.
மாடத்தை யொட்டியுள்ள மரக்கிளையில் தாவியேறி, அவள் நிற்குமிடம் நோக்கி அவன் வந்துகொண்டிருந்தான். ஆம், அன்று மாலையில் அவள் அருவியோரத்தில் சந்தித்த அவனேதான்!
அருவியில் நீராட அவள் சென்றிருந்தாள். அவனும் வந்திருந்தான். அருவியின் நீர்ப்பெருக்கில் அவள் கண்மூடிக் குளித்தபோது, அந்தக் குளிர் அருவி எத்தனையோ குறும்புத்தனங்களை அவள் உடைமீதும் உடல்மீதும் செய்து காட்டியது. அருவியினை வாழ்த்தியவாறு தொலைவில் நின்றான் அவன். குளித்து முடித்து ஈரக்கூந்தலைக் கோதியவாறு - சரிந்த உடைகளைச் சரிசெய்து கொள்ளாமல், யாரும் அங்கிலில்லை என்று நினைப்பில் அலட்சியமாக வந்தவள், அவன் மீது மோதிக்கொண்டாள்.
அப்போதுதான் அவன், அந்தப் பூச்செடியின் மறைவிலிருந்து வெளிப்பட்டான்.
அவனையறியாமல் ஆடைகள் தங்களைத் திருத்திக்கொண்டன. அதுதானே உண்மையான பெண்மை!
