குறளோவியம்
பகுதி 138 · 138 / 300
எதிரில் படையைப் பார்ப்பதுபோல அவனைப் பார்த்தாள். “இதுதான் ஒரு ஆண் மகனுக்கு அழகோ?” என்று கடுஞ்சொல் வீசினாள். அவன் மறுமொழி கூறாது மயங்கி நின்றான். அவளும் தயங்கி நின்றாள். பிறகு கால்களுக்கு வேகம் சேர்த்து அங்கிருந்து மறைந்துவிட்டாள். அருவிக்கரையில் மட்டுமல்ல; அவனை அவள் பல இடங்களில் பார்த்திருக்கிறாள்; அவனும் பார்த்திருக்கிறான். அவள் யார் வீட்டுப் பைங்கொடியென்று அவனுக்குத் தெரியும். அவனும் யார் என்ற விவரங்கள் அவளுக்குத் தெரியும்.
ஆனால், அன்று மாலை அருவியோரத்து நிகழ்ச்சி இருவருமே எதிர்பாராதது! எப்படிப்பட்ட நிலையில் இப்படியொரு நெருக்கமான சந்திப்பு!
அவனேதான் மரக்கிளையிலிருந்து வெளிமாடத்திற்குத் தாவியவன். ஏற்பட்ட அதிர்ச்சியை மெல்ல முடித்துக்கொண்டு கோபக்குறி தோன்ற “யார் அது? இந்நேரத்தில் இங்கென்ன வேலை?” என்று அவன் காதில் மட்டும் விழுமாறு கேட்டாள்.
“தெரியவில்லையா என்னை! நானேதான்” என்றவன், அவள் பக்கம் வந்து நின்றான்.
“உங்களுக்கு என்ன துணிச்சல்! மாலையில் அருவியோரத்தில் இப்படித்தான் பண்பாற்று நடந்து கொண்டீர்கள். இப்போதும் அதே தொடர்கதையா?”
“தொடரவேண்டிய கதை தோகையே! தொடரலாமா! தொடரலாமா?”
“என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. நான் பொல்லாதவளாக இருப்பேன்; போய்விடுங்கள் தயவுசெய்து!”
“உன்னைப் பற்றி நான் தெரிந்துகொண்டேன். நீ பொல்லாதவளல்ல! உள்ளத்தில் இருப்பதை வெளியில் சொல்லாதவள்!”
“குளிக்குமிடத்திற்கு வந்தீர்கள்! அதுவே குறும்புத்தனம் - செடி மறைவில் ஒளிந்திருந்து... சே!...... சே!......”
“ஏன்! வெட்கமாக இருக்கிறதா?”
“இல்லை! வெறுப்பாக இருக்கிறது!”
“உண்மையாகவா?”
“அருவிக்கரையில் உங்கள் செயல்கண்டு அனல் தெறிக்கப் பார்த்தேனே; கனல் தெறிக்கப் பேசினேனே - அதற்குப் பிறகும் உங்களுக்கு எப்படி வந்தது இந்தத் துணிவு?”
“கடுஞ்சொல் இருக்கும். ஆனால், அதன் பின்னே கொடும்பகை இருக்காது. சுட்டெரிப்பதுபோல் பார்வை இருக்கும். ஆனால், அதன்பின்னே நெருப்பான நினைப்பு இருக்காது. வெளியில் அயலார்போலத் தோற்றமளித்தாலும் உள்ளத்தில் அன்பு கொண்ட காதலியின் குறிப்பாகும் இது! இப்படி எழுதியிருக்கிறார் வள்ளுவர்! நீ படித்ததில்லையா? அந்தக் குறளை நம்பித்தான் கண்ணே; குளிர் அருவியின் கரையில் நீ கொட்டிய கடுமொழிக்குப் பிறகும் இங்கு குதித்தோடி வந்தேன்.
வெல்லமாக இனிக்கும் அன்பு இருக்கும் காரணத்தால்தான், நீ என்னைச் செல்லமாகக் கடிந்து கொண்டாய்! இல்லையா?”
அவள் அசைவற்று நின்றாள். அவனையே அவள் விழிகள் விழுங்கி விடுவதைப்போல் மொய்த்துக் கிடந்தன. “தங்கம்!” என்றவாறு தொட்டான். தடையில்லை! தழுவினான். நழுவி ஓடினாள். நாணம் படையெடுத்தது. “சத்தம் போட்டு எல்லோரையும் கூப்பிடுவேன்” என்று அவள் காதுகள் வாய் வைத்துச் சொன்னாள்.
காதலுக்கு அதுதானே முதல் ஒப்புதல்! ஐந்து முகக் குத்துவிளக்கு தன் முகத்தை மறைத்துக்கொண்டது.
“செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.”
அதிகாரம் - 110 - குறிப்பறிதல்; பாடல் - 1097
