குறளோவியம்
பகுதி 118 · 118 / 300
ஆயினும் மல்லிகை விரிப்பைப்போலத் தூய்மையாக விளங்கிய அந்தப் படுக்கையோ, அவனது அழுக்கேறிய அடிச்சுவடுகளால் ஆங்காங்கு கறுப்புற்றம் பூசிக்கொண்டு கிடந்தது.
“ஏண்டா, உனக்கு எள்ளுமுனையளாவது பொறுப்பு வேண்டாமா? இப்படித் தான் அழகான படுக்கையை அலங்கோலமாக்குவதா? உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன், வெளியில் சென்று வந்தவுடன் கால்களைக் கழுவ வேண்டும் என்று. நாள்தோறும் கூறுகிறேனே; ஏன் இப்படித் திருந்தவே மறுக்கிறாய்?”
வருந்தி வசைபாடினாள் அந்தத் தாய்.
“நீ எவ்வளவுதான் அறிவுறுத்தி என்ன? அடித்துக்கொண்டு என்ன? தான்போன போக்கிலேயேதானே அவன் போய்க்கொண்டிருக்கிறான்! ஆனால், இத்தகைய இயல்பு கொண்டவனைப் பற்றியும் வள்ளுவர் சொல்லாமல் விடவில்லை. வெளியே சேறு போன்றவற்றை மிதித்துவிட்டு வந்த ஒருவன், தன் கால்களைக் கழுவாமலே படுக்கையை மிதித்துக் கறைப்படுத்துவது எதைப் போன்றதாம் தெரியுமா? சான்றோர்கள் குழுமியுள்ள ஒரு கூட்டத்தில் அறிவிலி ஒருவன், தனக்கு எல்லாம் தெரிந்திருப்பதைப்போலப் புகுவதைப் போன்றதாம்!
அதைவிடப் பேதைமையே இல்லை என்கிறது குறள்! இனியாவது நம் பிள்ளை, அந்தப் பேதைமையிலிருந்து விடுதலை பெறுகிறானா என்று பார்ப்போம்.”
இவ்வாறு கூறிக்கொண்டே அவள் கணவன் உள்ளே நுழைந்தான்.
அந்தக் காட்சியை விளக்கும் ஓவியம்தான் இந்தக் குறள்:
“கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல்.”
அதிகாரம் - 84 - பேதைமை; பாடல் - 840
அம்மா அரிவை அவள்! ஆம்; அழகிய மாமை நிறத்தையுடையவள் என்று வள்ளுவர் அந்த நிறத்துக்குச் சிறப்புக் கூறுகிறார். மாம்பழ நிறத்துக்கும் மரகதக் கல்லின் நிறத்துக்கும் இடைப்பட்ட நிறம் போலும் அந்த நிறம். அந்தப் புது நிறப் பேரழகுப் பெட்டகத்தைத் தன் இல்லத்தரசியாகப் பெறுகிறான் கொடுத்துவைத்த குடுமிக்காளையொருவன். இல்வாழ்வின் இன்ப ஊற்று - உழைத்தலுக்குக் களைப்பினைப் போக்கும் கொம்புத்தேன் - ‘புணர்ச்சி மகிழ்தல்’ எனும் கட்டமன்றோ!
இரண்டு உள்ளங்கள் பாலும் கற்கண்டுமாகி, ஈருடல்கள் பின்னலிட்டக் கூந்தல் போலாகி, கடவுளே ஒருவேளை எதிரே வந்து நின்று
“வேண்டுகிற வரம் தருகிறேன்” என்று அழைத்தாலும் விழித்திருந்து பார்க்காத நேரமன்றோ அந்த நேரம்!
புணர்ந்து மகிழ்ந்தனர் - அதனால் மகிழ்ந்து புணர்ந்தனர். மஞ்சத்தில் பரப்பிய மல்லிகை முல்லைகளுக்குச் சத்தம் போட்டு அழச் சக்தியில்லை. பாவம், நசுங்கியும் கசங்கியும் தங்கள் வாழ்வை முடித்துக்கொண்டன. வாழ்வின் சுவையைத் தெவிட்டாது அனுபவித்து, அந்தக் காதலர் இரவை வாழ்த்திக் கொண்டிருந்தனர். கற்பகம் சேர்ந்த கணவனின் மார்பில் கனதனம் இரண்டும் வைத்து அப்புறம் உருவிற்றோ என்று அவன் முகத்தினை அவள் தடவிப் பார்த்தாள்.
அவனோ அவளது இதழ்க் கனிகளைப் பறிப்பதற்குத் தன் உதடுகளைப் பயன்படுத்தி அவற்றை மீட்க முடியாமல் தவித்தான். வீணைகளின் நரம்புகள் மீட்டப்பட்டன. இதயங்களின் துடிப்புகள் தாளங்களாக ஒலித்தன. இரண்டறக் கலந்த மூச்சு, இசையாகி ஒலித்துக்கொண்டிருந்தது.
மிகக் குறுகிய ஓய்வு! அந்த இடைவேளையிலும் அவன் கைகள், அவள் இடையைத் தழுவிக்கொண்டுதானிருந்தன.
அவள், அவனைப் பார்த்துப் புல்லாங்குழல் குரலில் கேட்டாள்.
“அத்தான்! இந்த இன்பம் எப்படியிருக்கிறது? இதற்கு ஏதாவது உவமை கூறமுடியுமா?”
அவன், அவளை இறுக அணைத்துக்கொண்டு விடையளித்தான்:
“கண்ணே! இதற்கு நிகராக வள்ளுவர், ஓர் இன்பத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்.”
