குறளோவியம்
பகுதி 117 · 117 / 300
“அய்யய்யோ! உன் கதி? உன் ஊடல் என்ன ஆயிற்று?”
“என்ன ஆயிற்று! ஊதும் காற்றில் கையது கொண்டு மெய்யது போர்த்தி இரவு முழுதும் தாழ்வாரத்தில் தவித்தேன் - நன்றாகச் சளி பிடித்துக் கொண்டது!”
நல்லி, ஒலியெழுப்பிச் சிரித்தான். கிள்ளியின் முகத்தில் அசடு வழிந்தது. இருவரும் பேசிக்கொண்டே ஆற்றங்கரைக்கு நடந்து கொண்டிருந்தனர்! ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அப்போது ஒருவன் “இந்த வெள்ளத்தில் நீச்சல் அடிக்கப் போகிறேன்” என்று அறைகூவல் விடுத்தவாறு ஆற்றில் குதித்து நீந்தினான்.
சில நொடிகளில் அவனை வெள்ளம் இழுத்துச் சென்றுவிட்டதைக் கிள்ளியும் நல்லியும் கண்டனர்.
“என்னப்பா இது? இவ்வளவு முட்டாளாக ஆகிவிட்டான்! வெள்ளத்தின் வேகம் தெரிந்திருந்தும் நீச்சலடிக்கச் சென்று சிக்கிக்கொண்டானே; பாவம்!” என்றான் கிள்ளி!
“நீ ஊடல் நடத்திய கதைதான் இதுவும்! நண்பா! ஆற்று வெள்ளம் அடித்துச் செல்லும் என்று தெரிந்தும் அதில் நீச்சல் அடிக்கப் பாய்பவனைப் போலத்தான், தன் ஊடல் பயன்தராது எனத் தெரிந்தும், ஊடல் செய்ய முனைகிறானே; அவன் நிலையும் இப்படித்தான் ஆகிவிடும் என்று வள்ளுவர் எழுதிய குறளை நீ படித்ததில்லையா?”
என்று கேட்டான் நல்லி!
“உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் பொய்த்தல் அறிந்தென் புலந்து.”
அதிகாரம் - 129 - புணர்ச்சி விதும்பல்; பாடல் - 1287
அது ஓர் எளிய குடும்பம்; எனினும் எல்லாவற்றிலுமே ஏற்றம் தவழும் குடும்பம்.
இல்லக்கிழத்தியோ தங்கச்சிலை; மங்கல விளக்கு! தன்னைப்போலவே தன் குடும்பமும் மங்கலம் நிறைந்ததாக - மற்றவர் வியந்து போற்றிடும் மலர்த் தோட்டமாக விளங்கிட வேண்டுமென்று நினைப்பவள்; அதற்காக உழைப்பவள்.
வாழும் வீடு சிறியதுதான். எனினும் அவளது விழிகளுக்கு ஒரு தூசும் பட்டுவிடக்கூடாது. அடிக்கடி குப்பைக் கூளங்களைப் பெருக்கித்தள்ளி வீட்டின் பொலிவைப் பெருக்கியவண்ணம் இருப்பாள்.
உடையாயினும், உறங்கிட உதவும் படுக்கையாயினும் கலையழகோடு அவளுக்குக் காட்சியளிக்க வேண்டும். அவற்றில் கறை ஏதும் இருந்திடக்கூடாது என்பதில் அவள் கருத்தாக இருப்பாள்.
ஆனால், அவளுடைய பிள்ளைகளில் ஒருவனோ தான்தோன்றியாக - தறுதலையாக - நடக்கக்கூடியவன். தாய்மைக்கும் அவனுக்கும் வெகுதொலைவு.
துப்புரவுக்கும் அவனுக்கும் ஒப்புரவு கிடையாது. என்றாலும், பிறர் குறையைப் பற்றிப் பேசவென்றால் அவனுக்குப் பொல்லாத ஆசை! பொழுதுபோக்கு!
தன் உடையிலும் உடலிலும் மலையளவு அழுக்கினைச் சுமந்துகொண்டு, அடுத்தவரிடம் உள்ள கடுகளவு கரும்புள்ளியைக் கடல் அளவாகப் பெருக்கிக் கூறுவது அவனுக்கு வாடிக்கை.
ஒருமுறை ஊர் சுற்றிவிட்டு வீடு திரும்பிய அவன், நேரே படுக்கையறைக்குச் சென்றான். அங்கே சுவரை ஒட்டியுள்ள ஒரு தட்டிலிருந்து, ஏதோ ஒரு பொருளை எடுப்பதற்காகப் படுக்கைமீது ஏறினான்.
அரவம் கேட்ட அன்னை, அடுக்களையிலிருந்து எட்டிப் பார்த்தாள். அவன் படுக்கையில் ஏறி நிற்பதைப் பார்த்ததும் பதறிப் போனாள். வேலையை அப்படியே போட்டுவிட்டு அடித்துக்கொண்டே ஓடி வந்தாள். அதற்குள் அவன் கீழே இறங்கிவிட்டான்.
