குறளோவியம்
பகுதி 119 · 119 / 300
“என்னத்தான் வேடிக்கை! இதற்கு நிகரான இன்பமும் உள்ளதோ? அப்படியொன்றை வள்ளுவர் கூறியிருக்கிறாரா?”
“ஆமாம், தங்கம்! சொல்கிறேன் கேள்! ஒருவன், தன்னுடைய உழைப்பாலேயே ஒரு வீட்டைக் கட்டி, அதில் தானே பாடுபட்டுப் பொருளை ஈட்டிக்குவித்து, அப்படிக் குவித்த பொருளை மற்றவர்களுக்கும் பகுத்துக் கொடுத்து, தானும் உண்ணும் போது ஏற்படுகிற இன்பத்தை இந்த இன்பத்துடன் வள்ளுவர் ஒப்பிடுகிறார்.”
“அத்தான்! தன்னம்பிக்கையுடன் உழைத்தல், பயனை விளைத்தல், விளைத்த பயனைப் பிறர்க்கும் பகிர்ந்தளித்தல், எவ்வளவு சிறந்த இன்பம் என்பதை வள்ளுவர் எவ்வளவு அழகாகச் சித்திரித்திருக்கிறார்.”
“ஆமாம் என் உயிரே! புணர்ச்சி மகிழ்தலோடு இப்படியொரு புதுமைக் கருத்தை ஒப்பிட்டுக்காட்டிய புலவனை உலகில் வேறெங்கும் காண்பது அரிது!”
இப்படிக் குறளைப் புகழ்ந்தவாறு இருவரும் கூடிக்கலித்தனர். அந்தக் குறள்தான் இது:
“தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு.”
அதிகாரம் - 111 - புணர்ச்சி மகிழ்தல்; பாடல் - 1107
இருவேறு நாடுகளைச் சேர்ந்த புலவர் பெருமக்கள் இருவர், தமிழ் விழா ஒன்றில் சந்தித்துக்கொண்டனர். அவர்களின் சந்திப்பு, விழாமேடைச் சந்திப்பாக மட்டும் அமையவில்லை. அவ்வாறு இருந்திருக்குமேயானால், நலம் விசாரிப்பதோடு அவர்தம் உரையாடல் முற்றுப் பெற்றிருக்கக்கூடும். விழாவில் இருவருமே விரிவுரையாற்றினர். வல்லினத்தில் உள்ள ‘த்’ என்ற எழுத்தும் மெல்லினத்தில் உள்ள ‘ம்’ என்ற எழுத்தும் இடையினத்தில் உள்ள ‘ழ்’ என்ற எழுத்தும் இணைந்தே ‘தமிழ்’ எனும் மொழிப்பெயர் உருவாயிற்று என்பதை ஒரு புலவர் விளக்கினார்.
முக்கனியில் ‘பலா’ வல்லினம் என்றும் ‘வாழை’ மெல்லினம் என்றும் ‘மா’ இடையினம் என்றும் மற்றொரு புலவர்
எடுத்துக் கூறினார். மூன்று கனிகளின் தோலையும் உள்ளேயிருக்கும் சுவை அல்லது பழத்தின் தன்மையையும் எடுத்துக்காட்டாகக் கொண்டு இனவகையை அவர் பிரித்துரைத்தார். விழா முடிந்த பிறகு, புலவர்களுக்கு விருந்தளிக்கப்பட்டது. அப்போது அவர்களிடையே நடைபெற்ற கருத்துரையாடல் வருமாறு:
“தங்கள் நாட்டு வளப்பமெல்லாம் எப்படி?”
“காலத்தில் மழை பொழிகிறது. வறுமைக்கு எங்கள் நாட்டில் வறுமை! மொழியினாலும், கலையினாலும் சிறந்தோங்கி நிற்கிறது. உழவும் வாணிபமும் உயர்ந்து விளங்குகின்றன. தங்கள் நாட்டு நிலை யாதோ?”
“தாங்கள் மொழிந்ததற்கு முற்றிலும் மாறுபட்ட நிலை. நாட்டு மக்கள் நடைப்பிணங்களாகத் திரிகிறார்கள். நீண்ட நாட்களுக்குப்பிறகு இன்றுதான் உங்கள் நாட்டைக் கண்டு மகிழ்ச்சியில் சற்று ஆறுதலடைகிறேன்.”
“மன்னர் எப்படியிருக்கிறார்?”
“எங்கள் நாட்டு மன்னனா? அவரை யாரும் அசைத்திட இயலாது. மிக்க வலிமை கொண்டவர். அவர் போக்கில் குறுக்கிடும் துணிவு யாருக்கும் கிடையாது.”
“அப்படியா! எங்கள் மன்னர், ஒரு சாதாரணக் குடிமகனின் கருத்தைக் கூடக் காது கொடுத்துக் கேட்பவராயிற்றே! உங்கள் மன்னர் முற்றிலும் மாறாக அல்லவோ இருக்கிறார்!”
