உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
குறளோவியம்/பகுதி 115
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 115 · 115 / 300

பகை விரட்டிச் சென்றவன் - பிரிவுத் துயரைத் தனக்கு அளித்துச் சென்றவன் - பசலை படரவும் இதயம் பதைக்கவும் தன்னைப் பிரிந்து சென்றவன், விரைவில் வரப்போகிறான் எனக்கேட்டு அவள் அடைந்த இன்பம் உலகையே வெல்லக் கூடியது. உடைகளைக் களைந்து குளித்தாள். அருந்தப்போகும் விருந்தினை எண்ணி அவள் அங்கங்கள் ஒவ்வொன்றும் விம்மிப் பூரித்தன. கண்ணாடிமுன் நின்று அணிமணி பூண்டாள். அவன் கன்னத்தில் ஒட்டிக் கொள்ளட்டும் என்பதற்காகவே குங்குமப் பொட்டைக் கனமாக வைத்துக்கொண்டாள்.

கண்ணாடியில் அவள் உருவம் தெரியவில்லை. அவன்தான் தெரிந்தான். கால்கள் ஓரிடத்தில் நிற்கவில்லை. வெற்றிப்படை தலைநகருக்குள் நுழைந்து விட்டது என்பதற்கான முரசங்கள் ஆர்த்தன.

இப்போது அவளுக்கு ஒரு பெரிய பிரச்சினை! மூன்று கேள்விகள் அவள் நெஞ்சைத் துளைத்தெடுக்கத் தொடங்கின.

“என் கண்ணான கணவன் இன்னும் சிறிதுநேரத்தில் இங்கு வந்து விடுவார். அவர் வந்ததும், ஏன் என்னைப் பிரிந்து வாடவிட்டார்கள் என்று ஊடல் புரிவதா? அல்லது அவரைத் தழுவிக் கொள்வதா? அல்லது அவருடன் கூடிக்கலிப்பதா?”

இப்படித் திண்டாடுகிறாள் அவள்! ஊடிக் கொண்டிருந்தால் தழுவிக் கிடக்கும் நேரத்தில் சிறிது வீணாகப் போய்விடும். தழுவிக் கொண்டேயிருந்தாலும் கூடலின் இன்பத்தைப் பெறத் தாமதமாகிவிடும். மனப்போராட்டம் அவளைத் தவிக்க வைக்கிறது!

ஊடுவதா?

தழுவுவதா?

கூடுவதா?

இந்த மூன்று கேள்விக்கு விடைகாண முடியாமல் திணறும் தேன்மொழி பொருத்தியின் நிலையை விளக்குகிறது இந்தக் குறள்:

“புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் கண்ணன்ன கேளிர் வரின்.”

அதிகாரம் - 127 - அவர்வயின்விதும்பல்; பாடல் - 1267

நெட்டிலிங்க மரம் என்பது, தேக்கு மரம்போல உயரமாக வளரக்கூடியது. ஆனால், அவ்வளவு உறுதியாகத் திகழக்கூடிய மரமல்ல. நெட்டிலிங்கத்தழை, இலையும் கொப்புமாகத் தளதளவென்று வளமாக இருக்கும். விழாக் காலங்களில் வரவேற்பு வளைவுத் தூண்களில் அந்தத் தழையை அழகுக்காகக் கட்டுவது வழக்கம். இளமைப் பருவத்தில் மாணவர் அணியினைத் திரட்டி, தமிழ்காக்கும் விழாவொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தேன். நிகழ்ச்சிகளுக்கான எல்லா ஆக்கப் பணிகளிலும் நண்பர்களுடன் நானும் கலந்துகொண்டேன்.

விழா அறிவிப்புக்களை மக்களிடையே செய்வதிலிருந்து, விழாச் சிறப்புறப் பந்தலை அலங்கரிப்பது வரையில் முன்னின்று காரியங்களைக் கவனித்தேன். அந்த வேலைகளில் ஒன்றாக நெட்டிலிங்கத்தழை வெட்டிவரும் வேலையும் அமைந்தது. நானும் நண்பர்களும் ஆற்றோரமிருந்த நெட்டிலிங்க மரங்களை நாடி இரவு நேரத்தில் சென்றோம்.

மரம் ஏறித் தழைகளை ஒடித்துப்போட ஓர் ஆளையும் கூப்பிட்டுக்கொண்டு சென்றோம். அந்த ஆள் நன்கு குடித்திருந்திருக்கிறான். மளமளவென்று மரத்தில் ஏறித் தழைகளை ஒடித்துப் போட்டுக்கொண்டேயிருந்தான். நாங்கள் கீழேவந்து விழும் தழைகளையெல்லாம் கொப்புகளோடு சேர்த்துப் பொறுக்கி ஓர் இடத்தில் குவித்துக்

கொண்டிருந்தோம். அந்த ஆள், சிறிது சிறிதாக மரத்தின் நுனிவரையிலே சென்று தழைகளை ஒடித்துத் தள்ளிக் கொண்டிருந்தான். எங்களுக்கு ஒரே மகிழ்ச்சி. விழாப்பந்தலைச் சீரோடு அமைக்க வேண்டிய தழைகள் கிடைத்து விட்டன என்பதில் அளவுகடந்த உற்சாகம். அப்போது மரத்தின் உச்சியிலிருந்து அந்த ஆள் குரல் கொடுத்தான். நாங்கள் திடுக்கிட்டு விழிகளை மரத்தின் நுனிப்பக்கம் திருப்பினோம். அவன் சொன்னான்:

“நான் எவ்வளவு உயரத்தில் இருக்கிறேன் பார்த்தீர்களா? இப்போது இதைவிட உயரத்துக்குப் போகப் போகிறேன்.”

கீழே நின்ற நாங்கள், அவன் பேச்சைக்கேட்டு அலறிவிட்டோம்.