குறளோவியம்
பகுதி 114 · 114 / 300
நள்ளிரவில் கதகாலட்சேபம் முடிவுற்றது. பாகவதர், தான் தங்கியிருக்கும் வீட்டுக்குச் சென்றார். அந்த ஊரில் பெரும் பணக்காரரான ஓர் உயர் ஜாதிக்காரர் வீடு அது! அந்த வீட்டு அம்மாளும் இராமாயணம் கேட்க வந்திருந்தார். அம்மாளுடன் துணைக்கு அந்த வீட்டு வேலைக்காரியும் வந்திருந்தாள். அவள் ஜாதி, சற்றுக் குறைவானதுதான்.
கதை முடிந்ததும் அம்மாளும் வேலைக்காரியும் பாகவதருக்கு முன்பே வீடு திரும்பினார்கள். பாகவதரும் வீட்டுக்காரச் சீமானும் சிறிதுநேரங் கழித்து வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.
பாகவதருக்கு வீட்டுமாடியில் தனியாக, ஒரு வசதியான அறையில் படுக்கை. அவர் உணவருந்திவிட்டு மாடிக்கு வருவதற்குள் மாடி அறையைத் தூய்மைப்படுத்தப் படுக்கையைத் தட்டிப்போடுமாறு வேலைக்காரிக்குச் சீமான் உத்தரவிட்டார். அவ்வாறே வேலைக்காரியும் சென்று பணியாற்றிக்கொண்டு இருந்தாள்.
உணவருந்திய பாகவதர், உடலெங்கும் சந்தனம் பூசிக்கொண்டு மாடி அறைக்குள் நுழைந்தார்.
அங்கே இருந்த வேலைக்காரியைக் கண்டதும் பாகவதர் மெய்மறந்தார். கதகாலட்சேபத்தில் சீதையைப்பற்றி அடுக்கிய வர்ணனைகளையெல்லாம் கொட்டித் தீர்த்தார். இறுதியில் அவளைத் தொடவும் பார்த்தார்.
வேலைக்காரி வெகுண்டாள். பாகவதரைப் பார்த்து “தூ!” என்று இழித்துரைத்துவிட்டு, மாடியிலிருந்து கீழே இறங்கி ஓடினாள்.
வீட்டுக்கார அம்மாள் - சீமானின் மனைவி - பாகவதருக்கு வெள்ளிக் கிண்ணத்தில் பால் எடுத்துக்கொண்டு மாடிக்கு வந்தாள். பாகவதர் முகம் ஒரு மாதிரி சோகமாக இருந்தது கண்டு, “ஏன் - என்ன காரணம்?” என்று வினவினாள். “காலட்சேபம் செய்த களைப்பு! உடம்பு வலிக்கிறது; அவ்வளவுதான்” என்றார் பாகவதர்.
“உடம்பு பிடித்து விடுகிறேனே!” என்றாள் அந்த அம்மாள்! பாகவதர் மறுப்பாரா என்ன? உடலைப் பிடித்த அந்த அம்மாள், பாகவதர் பிடியில் சிக்கினாள். அவள் விரும்பியது நடந்தது.
கீழ் ஜாதிப் பெண் ஏற்றுக் கொள்ளாத ஒன்றை, உயர் ஜாதிப் பெண் விரும்பி ஏற்றுக்கொண்டாள். உயர் குடிப்பிறப்பு என்பதும் இழிந்த குடிப்பிறப்பு என்பதும் கற்பிக்கப்பட்ட ஜாதி முறைகளால் ஏற்படுவதில்லை.
ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்குடிப் பிறப்புக்கு எடுத்துக் காட்டு! ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்தகுடிப் பிறப்பாளர்களேயாவர்! குறளின் அளவுகோல்படி அந்த வேலைக்காரி உயர் குடிப்பிறப்பு! சீமான் வீட்டு அம்மையார் இழிந்த குடிப்பிறப்பு! இதோ அதற்குக் குறள்:-
“ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்”
அதிகாரம் - 14 - ஒழுக்கமுடைமை; பாடல் - 133
“கதிரைக் காணாது குவிந்திருந்த தாமரை போலவும் நிலவைக் காணாது கூம்பியிருந்த அல்லிபோலவும் வாடிக்கிடக்கும் உன் முகம், வசந்தப் புன்னகை புரியப் போகிறதடி! ஆதிரை கவர்ந்துசென்ற பகை நாட்டானை விரட்டிச் சென்று போரிட்டு வென்றதோடு மட்டுமன்றி, அவனைத் தேர்க்காலிலே கட்டி இழுத்துவரும் இளவரசரை வரவேற்கத் தலைநகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. வெற்றி கிடைக்குமா என ஏங்கித் தவித்தாயே; நான் அப்பொழுதே சொன்னேன் அல்லவா?
உன் புருவங்களை வில்லாக வளைத்து, விழிகளைக் கணைகளாகப் பொழியும்போது மட்டுந்தான் இளவரசர் தோல்வி காண்பாரே தவிர, எதிரிகளின் ஈட்டிக்கோ, வேலுக்கோ, புறமுதுகு காட்டாத புறநானூற்றுத் தமிழன் நமது இளவரசன் என்று!
அது பொய்த்துவிடுமா என்ன? இருட்டு வேளையில் திருடுத்தனமாக நுழைந்த பகையின் இருப்பிடத்து, வெற்றிக்கொடி விண்ணைமுட்ட வந்து
கொண்டிருக்கிறார். இந்த நற்செய்தி கூறத்தான் ஓடிவந்தேன். இனி நீ அவரை வரவேற்கத் தயாராகலாம். பன்னீர் கலக்கிய தண்ணீரில் குளித்து புத்தாடை உடுத்து! அவர் பிரிவை எண்ணியெண்ணி வளைகள் கழன்றுவிழும் அளவுக்கு மெலிந்துபோன உன் கரங்கள், புதிய வளையல்பெறும் என்று எனக்குத் தெரியும். நெளிந்து நடக்கும்போது மட்டும் தெரியக்கூடிய உன் கொடி இடையைத் தாங்கிடக் கொழுகொம்பாக வருகின்றார் இளவரசர். பாவம், பவளங்களும் முத்துக்களும் பதித்த இந்தக் கட்டிலைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது.
வாயில்லாப் பொருள்! இன்றிரவு என்ன பாடுபடப் போகிறதோ?”
இப்படிச் சொல்லிக்கொண்டே குறும்புச் சிரிப்புக் குலுங்கிட அவள் தோழி கீழேயிறங்கி ஓடிவிட்டாள்.
