உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கட்டுரைகள்

உணர்ச்சிமாலை

பகுதி 4 · 4 / 7

கம்பரின் உயிரைக் காப்பாற்ற கட்டுரையாளர், கவிஞர் பாரதிதாசனின் “சஞ்சீவி பர்வதத்தின் சாரலில்” ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்திருக்கிறார். இராம பக்தரல்லவா? கம்பரின் வர்ணனைகள் நம்பத் தகாதவை என்கிறீர்களே; பாரதிதாசன் பாடியுள்ள சஞ்சீவி பர்வதத்தின் சாரல் என்ற கவிதையில் ஒரு பச்சிலையின் உதவியால் இங்கிலாந்து, அமெரிக்கா தேசங்களில் பேசுவோரை குப்பனும் வஞ்சியும் பார்க்க முடிந்தது என்கிறாரே இந்த வர்ணனையை நம்பலாமா?

என்கின்ற தோரணையில் தோழர் பிரச்சினையை எழுப்பு

கிறார். அளவு மீறிய வர்ணனைக்காக கம்பராமாயணத்தை கசக்கிறது என்று கூறியவர்களல்ல நாம் ! கூறுபவர்களுமல்ல.

இராமன் அயோத்தியைத் துறந்து ஆரண்யம் சென்றபோது நகரத்து மக்கள் அழுதனர் எனக் கூறுவதோடு நிறுத்தாமல் “பூவையர் அழுதனர் பூனையும் அழுதது” எனக் கம்பர் வாணனையை நீட்டியது. கண்டு கூட நாம் வருந்தவில்லை. பூனை. அழுமா ? என்று கேட்கவுமில்லை. வர்ணனையின் உச்சம் என நாம் விதி விலக்கு அளித்தோம்.

பூவையர் அழுத கண்ணீர் போகும் பாதையை கம்பர் வர்ணிக்கிற கட்டம்தான், அண்ணாவின் கம்பரசத்திற்கும், அறிவு உலகத்தின் “அக்கினியில் போடு கம்பராயணத்தை” என்ற தீர்ப்புக்கும் இடமளித்தது என்பதை தோழர் உட்பட யாரும் மறுக்க முடியாது.

இதுவரை படிக்காமலிருந்தால் பகுத்தறிவாளரைக் குறை கூறும் நண்பர், படித்துப் பார்க்கட்டும் என்பதற்காக எஞ்சியுள்ள கம்பரசத்தில் கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கலக்கித் தருகிறேன்; பருகட்டும் தோழர் என்பதற்காக! கலை மயக்கம் தெளியட்டும் என்பதற்காக!

இராமன் காடு செல்கிறான். அயோத்தி அழுகிறது. ஆரணங்குகள் அழுகிறார்கள். அழுத கண்ணீர் ஆறாக ஓடுகிறது பாருங்கள்.

“திடருடைக் குங்குமச் சேறும் சாந்தமும், இடையிடை வண்டலிட்டாரமீர்த்தன.

மிடைமுலைக் குவடேறி மேகலைத் தடங் கடலிடைப் புகுந்தகட் குலுழியாரரோ!”

பொழிப்புரையாகக் கூறுவதே போதுமென் எண்ணுகிறேன் ; அண்ணா அவர்கள் கம்பரச புத்தகத்தில் அதிக விளக்கம் இருப்பதால் அதைப் படித்துக் கொள்ளட்டும் என்ற அளவில்!

இராமன் பிரிவால் மங்கையர் கண்ணில் வடியும் நீர், ஆறாகப் பெருகி குங்குமத்தையும் மையையும் கரைத்துக்கொண்டு, மணிமாலைகளைக் கடந்து, ஸ்தனங்கள் என்ற மலைகளில் ஏறி மேகலாபரணம் அணிந்திருக்கிற “மறைவிடம்” எனப்படும் கடலில் விழுகிறது.

“எழுதவே வெட்கமாயிருக்கிறது தோழரே!......இந்தக் காமக்கலை கடவுளின் பேரால் பாடப்பட வேண்டுமா என்று கேட்பது உமக்கு வெறிச்செயலாகப் படுகிறதா?” எனக் கலாரசிகரான என் நண்பரைக் கேட்கிறேன்.

ஒருவேளை “அவரவர் நிலைக்கு ஏற்ப அமைந்த தோர் அழகுக் கோலம் தாங்குவது கலை.” என்ற தத்துவத்தைக் கடைப்பிடிப்பவராயிருக்கலாம் நண்பர்!

பாரதிதாசனையும்—கம்பரையும் ஒரே கோட்டில் நிறுத்திப் பார்க்கும் தோழர், பாரதிதாசனின் கவிதையில் இந்தக் காமக் களஞ்சியத்தைக் காணமுடியுமா என்று அறை கூவியழைக்கிறேன். வர்ணனைக்கும் அளவிருக்க வேண்டாமா? அதுவும் பரந்தாமன் சரித்திரத்திலா இந்தப் பள்ளியறைச் சிறப்பு ?...

“கலைஞர், களியர், பித்தர், பக்தர்—இவர்கள் பெரும்பாலும் ஒரு நிலையினர். அவர்களை உணர அவர்களாகவே மாறத்தான் வேண்டும். முடியவில்லை என்றால் ஒதுங்கிவிட வேண்டியதுதான்.” என்று முடிவு கூறுகிறார் கட்டுரையாளர். கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாமல் விழிப்பவன்......விவாதத்தை வளர்த்த முடியாமல், நீ பேசுவது விதண்டாவாதங்கள் என்று கூறிவிட்டு ஓடுவதுபோலிருக்கிறது தோழரின் போக்கு! மூக்கையறுத்துக் கொள்ளுங்கள்....

கடவுளை தரிசிக்கலாம் எனக் கூறிய மூக்கறையனின் தந்திரத்தைப் போலிருக்கிறது தோழரின் அபிப்பிராயம்.

சொட்டையுள்ள இடத்தை சுட்டிக் காட்டுகிறான் சுயமரியாதைக்காரன். “பொட்டைக் கண் உனக்கு” என்று பொய் கூறுகிறார் நண்பர் !

“கம்ப ராமாயணத்தில் கடவுளீயம் இல்லை. கதை உண்மையில்லை. இராமன் சாதாரண மனிதன். தமிழ் அழகுக்காக...கலை நுட்பத்திற்காக மட்டும் படியுங்கள். இராமனைக் கடவுளென எண்ணி சீதா கல்யாணமும், அனுமாருக்கு வடைமாலை சாற்றும் வைபவமும் நடத்தாதீர்கள்” என்று ஒரு முன்னுரை எழுதிவிட்டு கம்ப ராமாயணத்தை அச்சிடுவதற்குத் துணியாத தோழர் பெருந்தகை....செல்வர் வீட்டுக் குமுதத்திலே சீர்திருத்த வாதியின் மேல் சீற்றம் நடத்துவது ஏனோ தெரியவில்லை.

மக்கள் பண்பு உயர, கலை தேவையே தவிர மாட மாளிகையிலே—மலர்ச் சோலையிலே—மஞ்சத்திலே—மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிக் கிடக்க, மங்கையர்

வனப்பை வர்ணித்து ஆனந்த லாகிரியில் அமிழ்ந்து கிடக்க, கண்ணீரானது கரை புரண்டு கடலில் கலக்கும் விதத்திற்கு உதாரணம் தேட, கலை தேவையில்லை.

கலை காலத்தின் கண்ணாடியாக...இன எழுச்சியின் முரசமாக இருக்கவேண்டும். கம்பரின் காதை...காமக் கோட்டத்தின் கீதம். கடவுளீயத்தில் மக்களைக் கவிழ்த்து சதிபுரியும் சிந்து! வேற்றினத்துக்கு வணங்கிச்சாகும் வேதனையைத்தந்த வெண்பா! நான் முதலில் குறிப்பிட்டபடி கலையை நாற்றக் குட்டையாக்கி நெளிகின்ற புழுக்கூட்டம்.

சேலம் மாநாட்டிலே கம்பர் கதையை நெருப்பில் போட வில்லையே தவிர சேதுப்பிள்ளை—பாரதியார் தோல்வி, கம்பராமாயணத்துக்கு மூட்டப்பட்ட தீ என்பதை தோழர் அறியவேண்டும்.

“காமாலைக் கண்ணின்றி, கலைமாலைக் கண் கொண்டு நோக்க வேண்டும்..... இப்படியாக உள்ள சில உண்மைகளை உணராதவரை இராவணன் நம் பாட்டன்தான், சூர்ப்பனகை நம் பாட்டிதான்.” என்று கிண்டல் செய்து கட்டுரையை முடிக்கிறார் கம்ப பக்தர்!

தோழர் எழுதுவதற்கு இடங் கொடுத்த குமுதத்தின் கௌரவ ஆசிரியர் அழகப்ப செட்டியார் அவர்கள் எப்பொழுதாவது புது டெல்லிக்குப் போனால் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களைக் கேட்கட்டும்; ராமாயணத்தில் அரக்கர் என்று குறிக்கப்படுவோர் யாரென்று! “ராமாயணத்தில் அரக்கர் என்று எழுதப்

பட்டிருப்பவர் தென்னாட்டிலுள்ள திராவிடர்.” என ஜவஹர்லால் நேரு, செட்டியாரிடம்...தான் முன்பு தீட்டிய “ஜவஹர்லால் தன் மகளுக்கு எழுதிய கடிதங்கள்” என்ற புத்தகத்திலிருந்து ஆதாரம் எடுத்துக் காட்டுவார். அப்பொழுது தெரியும்; இராவணன் நம் பாட்டனா; இல்லையா? என்பது ஏது மறியாத இந்தத் தோழருக்கு; இதைத் தவிர வேறு பதிலில்லை.

காக்கைபாடினியார் நச்செள்ளையார் காவற்பெண்டு பாரிமகளிர் பெருங்கோப் பெண்டு வெண்ணிக்குயத்தியார் வெறிபாடிய காமக் கண்ணியார்

புதுப் பெயர்களல்ல ! புறநானூற்றிலே பொதிந்து கிடக்கும் புதையல்கள் பலவற்றின் படைப்பாளர்கள். பெண்கள் ! அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பேதுக்கடி என லாலிபாடும் பாட்டிகள்......பத்தாம்பசலிகள் நிறைந்துள்ள இன்றைய திராவிடத்தின் வரலாற்றில் ஒன்று இரண்டு பக்கங்களிலே காணப்படும் மங்கையர் கும்பல் !

கவிதை மழை பொழிந்த தமிழரசிகள் ! தமிழுக்கே தனிப்பெருமை தந்த தங்கக் கொடிகள் ! வீரத்தின் பீடத்தில் அமர்த்தி வெற்றி மாலை சூட்டி, வெங்கொடுமை சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித்தோள்கள் என காளையரைத் தட்டிக் கொடுத்து, கங்கையைப்போல் காவேரியைப்போல் கருத்துரை கவிதைகளை, உணர்ச்சி கொப்பளிக்க, பெருக்கெடுக்கச் செய்த பெருமாட்டிகள் !

“மகன் போன இடமறியேன் அப்புலி வாழ்ந்த குகையிதோ !” என தாயொருத்தி வயிற்றைக் காட்டினாள் என்ற வீர முழக்கத்தை விருத்தமாக்கினவர்—என் பாலைக்குடித்தவனா பகைவனின் ஈட்டியை முதுகினால் தாங்கினான்......அவன் பால் குடித்த மார்பின் ரத்தத்தை இந்த வாள் குடிக்கட்டும் என ஆவேசக் கூச்சல் போட்ட கிழவியொருத்தியின் எழுச்சியை இதய கீதமாக்கினவர்—“தந்தை மாண்டார். சோதரர் செத்தார், என் இளம் மகனே ! இங்கே வா ! இந்தா வேல் !

இந்நாடு உன் உதிரத்தாலும் நனையட்டும்” என்று தலைவாரி பூச்சூடி களத்திற்கு பசலைப் பையனை அனுப்பிய தாயின் நாட்டுப் பற்றை சிங்க நடைச் செய்யுளாக ஆக்கியவர்—ஆம் மேலே காணப்படும் பெண் புலிகள்தான் !