உணர்ச்சிமாலை
பகுதி 3 · 3 / 7
சமுதாய துரோகிகள், சுயநல பெருச்சாளிகள், இலட்சிய முத்திரை குத்திக்கொண்டு இழி தொழிலில் ஈடுபடுவோர், பரிகசிப்போர், பின்னிருந்து பேசுவோர், உறுமுவோர், உதைப்பேன் என்போர் ; இந்த பட்டியல் அவன் உறுதியின் முன்னே எரிந்து கருகும்.
“பார்! பார்!...பசலைப் பயலே! உன் செல்வாக்கை செல்லாக்காசாக்குகிறேன்” எனக் குமுறும் ஒரு பொறாமை உருவம்.
“நான் உன் போல் புகழில் நெளியும் பூச்சியல்லவே நீ என் புகழுக்குத் தோண்டும் குழி உன்னையும் உன்போன்ற சதைக் குன்றுகளையும்விழுங்கிஜீரணித்து என் அழியாத புகழுக்கு அஸ்திவாரமும் அமைக்கும்” அன்று வீரமுழக்கம் செய்வான்.
இதோ பாரப்பா......மாட மாளிகை. மரகதக் குவியல், மனதிற்கேற்ற உல்லாசபுரி, இங்கே வந்தால் மல்லிகையில் படுக்கலாம், வெல்வெட்டுக் கம்பளத்தில் நடக்கலாம், என்ற மோகவலை வீசப்படும். துறவியைப் போல பேசி தூர நிற்பான். இலட்சிய வாதி.
காயமே இது பொய்யடா-காற்றடைத்த பையடா என்ற ‘நீர்மேற்குமிழி பஜனை’ நடத்திக்காட்டப்படும். கண்மூடிகளிடம் காட்டப்பா உன் கைவரிசையை எனக்கேலி செய்வான்.
எச்சரிக்கை.அபாய அறிவிப்பு- உடனடி நடவடிக்கை - பாகு மொழி- பாசாங்கு வேலை இத்தனை உருவங்களில் அழிவு அவனை அண்ட வருகிறது. ஆனால் அந்த இலட்சிய வீரன் தன் பாதையிலேயே போகிறான் -போகிறான்-போய்க் கொண்டே இருக்கிறான்.
கொசுவின் தாயகம். உயிர்க்குடிக்கும் பல்வகைப் புழுக்களின் பிறப்பிடம். கண்ணுல் காணமுடியாத தொலைவிலேயே மூக்கைப் பிடித்துக்கொள்ளக் கூடிய நாற்றம். கழிவுப்பொருள்களின் முடிவிடம்-ஆபாசத்தின் எல்லை. இம்மாதிரி ஒரு குட்டையைக் காணுகிறேன் மனிதன். ஆகா! இதோ நெளியும் புழுக்களின் நேர்மைதான் என்னே...பரத நாட்டியமாடும் பாவையரைப் போலல்லவா வளைந்து வளைந்து ஓடுகின்றன. பகவானின் படைப்பே; படைப்பு! இந்த மணத்தை எங்கும் நுகர்ந்திட முடியாதே என்று கூறி அந்த சேற்றிலே விழுந்து புரளுகிறான்.
அடுத்த மனிதன் குட்டையின் நாற்றத்தைப் போக்கினால் பலன் உண்டு எனக் கூறுகிறான். வாசனைப் பொருள்கள் அச்சிறு குளத்தில் ஊற்றினால் பயன் கிடைக்குமென்பது அவன் முடிவு.
மூன்றாவது மனிதன் குட்டையின் தண்ணீரையெல்லாம் இறைத்துவிட்டுக் குட்டையைக் குளமாக்கிப் புதுத் தண்ணீரைப் பாய்ச்சி தக்கதோர் மருந்து கலந்தால் மக்களுக்குப் பயன் தரும் என்கிறான்.
இந்த மூன்றுவகைத் தோழர்களில் உங்கள் ‘ஓட்’ யாருக்கு என்பது 'என் கேள்வியல்ல ! மேலே குறிப்பிட்ட நாற்றக் குட்டையாக நமது தமிழ்நாட்டுக் கலை அமைந்துள்ளதே அதைத் திருத்த வேண்டாமா என்பதுதான் பிரச்சினை. இந்தப் பிரச்சினையை மீண்டும் கிளப்பவேண்டிய அவசியத்தை ஒரு தோழர் ஏற்படுத்தியுள்ளார். பிழைப்புக்கும் செல்வாக்குக்கும் பாதை அமைத்துக் கொள்வதற்காக ஒரு சிலர் கலைக் குட்டையிலே விழுந்து புரளுவது எனக்குத் தெரியும்.
சேறு அவர்களுக்கு சந்தனமாகவும், சேற்றிலே கிளம்பும் நாற்றம் அவர்களுக்கு மல்லிகையில் மோதி வரும் தென்றலாகவும் தோன்றுகிறதாம். அவர்களைத் திருத்தவோ அல்லது திருப்பவோ நினைப்பது நாயின் வாலை நிமிர்க்க நினைப்பது போலத்தான் என்பதும் எனக்குப் புரியும். புரிந்த போதிலும் இவர்களுடைய வலை வீச்சில் திராவிட இளைஞர்கள் சிக்கிவிடலாகாது என்பதற்காகவே; “பாம்பே! கடிக்காமலிரு, தேளே ! கொட்டாமலிரு !”
என்று அகிம்சா உபதேசம் செய்வதைவிட அவை ‘விஷ ஜந்துக்கள் விலகிப் போங்கள்’ என்று எச்சரிக்கை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளேன்.
வாழை, மா, பலா, என்ற முக்கனியின் கூட்டில் வசிய மருந்து கலப்பதுண்டு. வண்ணப் புதுச்சேலை - வாலிப மேற்பூச்சு இவைகளோடு, வயதேறிய மாது வலை வீசுவதுண்டு.
இந்த வகையைச் சேர்ந்த கட்டுரையொன்றை நான் காண நேர்ந்தது, ஆர். எம். அழகப்ப செட்டியாரை ஆசிரியராகக் கொண்ட “குமுதம்” என்ற
மாத வெளியீட்டில் ஒரு கலாரசிகர். தீட்டியுள்ளது. கட்டுரையின் தலைப்பு இராவணன் நம் பாட்டன் தலைப்பைக்கண்டதும் அழகப்பாவின் பத்திரிகையிலும் இன உணர்ச்சி வாடை வீசுகிறதே என துள்ளிக் குதித்தேன். நான் நினைத்தது முழுத்தவறு என்பதை மெய்ப்பிப்பது போல் தலைப்பின் ஓரத்தில் பத்து தலை இராவணன் படம் விளங்கிற்று. இருந்தாலும் தலைப்பிலே கலந்திருந்த அந்த இன உணர்ச்சி என்னைப் படிக்கத் தூண்டிற்று. இராவணன் நம் பாட்டன்!
ஆகா! தென்னிலங்கை வேந்தன் - தீராதி தீரன் - திராவிடரின் மூதாதை - அவனை நம் பாட்டன் என்று உரிமை கொண்டாடும் உண்மைத் தோழனுக்கு ‘குமுதத்திலே இடமா?’ எனக் கூத்தாடிற்று என். உள்ளம்.
படிக்க ஆரம்பித்தேன் ; “தோள் கண்டார் தோளே கண்டார்” என்ற கம்பனின் வர்ணனையைத் துவங்கியிருந்தார் தோழர்! இராவணன் நம் பாட்டன் என்று கூறிவிட்டு... இராமனின் அழகை வர்ணிக்கும் கட்டத்தில் நிற்கிறாரே ஏன் என்று எனக்கு முதலில் புரியவில்லை. கம்பரின் வர்ணனையைப் புகழ்ந்து... அட்ட! கடவுளீயக் கலையை சிருஷ்டித்திருக்கிறாரே கம்பநாட்டாழ்வார் எனக் காவடிச்சிந்து பாடுவதோடு கட்டுரையாளர் நிறுத்திவிடுவார்; கம்பர்தருங் காட்சி கம்பசித்திரம், சித்திர ராமாயணம் இந்த வர்க்கத்தைச் சேர்ந்த இழைப்பு வேலையாக இருக்கும் இதுவென எண்ணினேன்.
ஆனால் கட்டுரையாளர், வாலிபனை மயக்க வண்ணப்புதுச் சேலையுடுத்தி வந்த வயோதிக மாது என்பதை நன்றாக நிரூபித்துக்கொண்டுள்ளார்.
“கலை என்னும் கடவுள்பொருளின் உண்மை இயல்பை உணாந்துவிட்டால் இந்தப் பிணக்குக்கு கலையுலகில் இடமில்லை. அவரவர் நிலைக்கு அமைந்ததோர் அழகுக்கோலம் தாங்குவது கலை. ஒருவர் காட்சி மற்றவர்க்கு ஏலாது, இதை உணர்ந்தால் எரிக்கும் வெறியும் தரிக்கும் வெறியும் கலையுலகில் இடம்பெறமாட்டா”.
ஆசிரியர் புகுத்தியுள்ள கருத்து இது ! இதைத்தான் கனிச்சாற்றில் கலந்த ‘வசிய மருந்து’ என நான் கூறுகிறேன். சோற்று உருண்டையைக் காட்டி மீனைத் தூண்டிலில் சிக்க வைக்கும் சூழ்ச்சியைப் போல் இராவணன் நம் பாட்டன் என்ற தலைப்பைக் காட்டி கம்பர் கலையெனும் தூண்டில் முள்ளில் இளைஞர்களை சிக்க வைக்க முயற்சிக்கிறார் தோழர்.
பசுமலை பாரதியும், பண்டித சேதுப்பிள்ளையும் நிற்க முடியாத இடத்திலே நிற்க நினைக்கிறார் தோழர். சரிந்து விழுந்த கம்பராமாயணக் கட்டிடத்தைப் புதுப்பிக்க சாரம் கட்டுகிறார் அன்பர். பாவம் பரிதாபத்திற் குரியவர். “கலை வாழ்க! ஆனால் கலை, நாற்றக் குட்டையாக-புழுக்கள் நெரியும் இடமாக உள்ள நிலை ஒழிக!”
இதுதான் பகுத்தறிவாளனின் பாசறை முழக்கம். இந்த முழக்கம் முன்னமேயே கம்பர், சேக்கிழார் போன்ற இனத் துரோகிகளின் முதுகெலும்பை முறித்து விட்டது என்பதை நண்பர் அறிந்திருந்தும் நச்சுப்பல்லை நீட்டியிருக்கிறார். ஆபாசக் குட்டையின் அழுகல் நாற்றத்தை அந்திமல்லிகையின் வாடையெனக் கூறும் ரகம் இவர் ! முகத்தின் சுருக்கங்களை முக்காட்டால் மறைத்துக்கொண்டு என் முல்லைச்
சிரிப்பைப் பார் எனக்கூறும் மூதாட்டிக்கும் தோழரின் கட்டுரைக்கும் முரண்பாடிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. குட்டையின் நாற்றத்தை அகற்ற அத்தரும் ஜவ்வாதும் போடு எனக் கூறுகிறவரின் வரிசையில் கூட தோழர் இடம் பெறாதது வருந்தத் தக்கது.
திரிக்கும் வெறி கலை யுலகில் இடம்பெறக் கூடாது என தோழர் கூறுவதிலிருந்து நாற்றக் குட்டையில் வாசனைப் பொருள் கலப்பவரின் வரிசையில்கூட நிற்கமுடியாமல் வழுக்கிவிழுந்து டி. கே. சிதம்பரநாதர்களின் மேலும் சீறிப் பாய்கிறார் என்பது விளங்குகிறது.
எரிக்கும் வெறி என எழுதியதால் சுயமரியாதை இயக்கத்திற்கு சூடு கொடுத்துவிட்டதாக அன்பர் சொல்லிக் கொள்ளலாம். அழகப்பாவின் ‘அப்ளாசை’ யும் பெற்றிருக்கலாம். கையிலிருப்பது பேனா என்பது கூட தெரியாமல் கலை போதையில் கிறுக்கியிருக்கிறார் ஆசிரியர் !
கம்பராமாயணத்தைக் கொளுத்துவதா? இல்லையா? என்ற சொற்போரில் அறிஞர் அண்ணாதுரையை எதிர்த்து மேடையில் நிற்கமுடியாமல் சேதுப்பிள்ளைக்குத் தலைவலியும், சோமசுந்தர பாரதியாருக்கு பிரயாண அவசரமும் ஏற்பட்டதை இந்தக்கலைக் காதலர் மறந்துவிட்டது மாபெரும் ஆச்சரியம்.
“அவரவர் நிலைக்கு ஏற்ப அமைந்ததோர் அழகுக் கோலம் தாங்குவது கலை” எனக் கூறுகிற ஆசிரியர். கொள்ளைக்காரன் கொள்ளையடிக்கும் தொழிலைக் கலையாகக் கொள்வதையும், விபசாரி...வாலிபர்களை
மயக்கிக் கவிழ்ப்பதைக் கலையாகக் கொள்வதையும், அதற்கென அவர்கள் கம்ப ராமாயணத்தில் தொழிலுக்கேற்ற சுவையான கட்டங்களைத் தேடுவதையும்—அதற்காகவே அவர்கள் கம்பர் கலையை ஏத்திப் புகழ்வதையும் ஒத்துக் கொள்கிறாரா என்பது என் கேள்வி !
“ஒருவர் காட்சி மற்றவர்க்கு ஏலாது” என்கிறார். உண்மை. எரிக்கும் எண்ணம் சுயமரியாதைக்காரர்களுக்கு ஏற்பட இது காரணமாகுமா என்று கேட்கிறேன்.
இனக்கொலை செய்தார் கம்பர். சாதாரண மனிதனை சகத் ரக்ஷகனாக்கிக் காட்டினார் கம்பர்.
கடவுளின் காதையைப் பாட வந்த இடத்திலும் காமலீலைகளுக்கு முதல் ஸ்தானம் அளித்தார் கம்பர்.
இந்தக் குற்றச்சாட்டுகள் தான் கம்பர் கலையைக் கொளுத்தியெறியும் தீக்குச்சுகள் என்பதை குமுதத்தின் வியாசகர்த்தா தெரிந்து கொள்ள வேண்டும்.
