உணர்ச்சிமாலை
பகுதி 2 · 2 / 7
போலீஸ் அதிகாரிகள் அந்தக் கொலைகாரனிடம் ஏதாவது வாக்கு மூலம் வாங்கிவிடவேண்டுமென தலைகீழாய் நின்று பார்த்தார்கள். ஒரு எழுத்து கூட எழுதிக்கொள்ள முடியவில்லை எப்படியும் சாகப் போகிறோம் என்ற நெஞ்சுரம் அவனை ஊமையாக ஆக்கிவிட்டது, மௌனமாகவே இருந்தான். தூக்கு மேடையிலே நிறுத்தப்பட்டான். “கொலைகாரனே ! உன் உயிரைக் குடிக்கப் போகிறேன்” என்று கும்மாளம் போட்டது தூக்குமேடை.
அப்பொழுது தான் அவன் உதடுகள் அசைந்தன. பேசுவதற்கல்ல புன் சிரிப்புக்காக ! அந்தப் புன்சிரிப்பிலே எவ்வளவு பெரிய பயங்கரமான புரட்சிப் பொறி பறந்தது தெரியுமா ?
செர்கியஸ் கோமகனை சாக அடித்தான். தான் சாவதற்கு சிரித்தான். சமுதாயம் தன்னைமறவாது...என்ற திருப்தி—இரஷ்ய வரலாறு தன்னை ஒதுக்கிவிடாது
என்ற நம்பிக்கை—இவைதான் அந்த வாலிபனின் இதழோரப் புன்னகை. சாவின் சிரிப்பு !
அந்த சிரிப்பு மறைவதற்குள் நாட்டிலே வேலை நிறுத்தங்கள் எழுந்தன. வேலை நிறுத்தத்திற்கு ஜார் அரசாங்கத்தால் வேட்டு வைக்கமுடியவில்லை. அரசாங்கம் திணறியது. எட்டுமாத காலம் வேலை நிறுத்தம் வெற்றிகரமாக வாழ்ந்தது. ஜப்பானுடன் சமர் செய்த இரஷ்யா சரண் புகுந்த வேளையது. ஜனசமுதாயம் ஜார் ஆட்சியைக் காரி உமிழ்ந்தது. புரட்சி வளர்ந்தது. 1906 ம் ஆண்டில் ‘டூமா’ கூடிற்று. சீர்திருத்தங்கள் சில செய்ய அந்த ‘டூமா’ விரும்பியது டூமாவின் சிருஷ்டிகர்த்தா ஜார்!...சிருஷ்டி கர்த்தாவே டூமாவை சிதைத்தான்.
காரணம்; அது நல்லவை செய்ய எண்ணியது தான். டூமா என்றால் ஜனப்பிரதிநிதி சபை என்று பொருள். இது ஜாருக்கு பிடித்திருந்தால் லெனின் பிறந்திருக்க வேண்டியதில்லை. 1907-ல் டூமாவுக்கு தேர்தல் நடைபெற்றது, ஜாரின் வால் பிடிப்போர் வெற்றி பெற்றுங்கூட...அவர்கள் வாயிலும் தப்பித்தவறி நல்ல பேச்சுக்கள் வந்துவிட்டன, இரண்டாவது டூமாவும் இறந்தது. இல்லை...சாக அடிக்கப்பட்டது, ஜாரால்!
வயது வந்த எல்லோருக்கும் ஓட்டுரிமை இருப்பது ஜாருக்கு பிடிக்கவில்லை. மேல் அந்தஸ்தினருக்கே ஓட்டுரிமை அளித்து மூன்றாவது டூமாவுக்கு தேர்தல் நடத்தினான். அது ஐந்து ஆண்டுகள் உயிரோடிருந்தது. 1912-ல் நான்காவது டூமாவின் தேர்தல். அது முதல் ஜார் ஆட்சியின் அடிபீடம் ஆடத்தொடங்கிற்று.
1916-ல்......மன்னர் குடும்பத்தில் மற்றொரு கொலை. 1905-ல் தூக்கு மேடையில் சிரித்தானே ஒரு சிங்கக்குட்டி...அவன் சிரிப்பின் எதிரொலி......1916-ல் ரஸ்புடீனை
சுட்டுக்கொன்றது. அடக்கு முறை குமுறிற்று. புரட்சியும் கொந்தளித்தது.
போர் முனையிலே ஜார் ! இங்கோ புரட்சிக்கொடியை பெண்கள் பறக்கவிட்டனர், 1917 மார்ச் எட்டாம் நாள் !
ரஷ்ய தலைநகரம் ‘கிடுகிடு’ வென நடுங்கிற்று. யுத்தகளத்திலிருந்த படியே உத்திரவிட்டான் ஜார், ‘சுட்டுத் தள்ளுங்கள்’ என்று !
யார் யாரைச்சுடுவது? எரிமலைகள் பொங்கி வழியும் போது அதை எதிர்க்க எண்ணெய்க் கிணறுகளா? தானே நேரில் புறப்பட்டான் ஜார் ! அவன் வந்த புகைவண்டிக்கு பாதை கிடையாது, நாடாண்ட மன்னாதி மன்னனின் கதி...இதுவென ஏங்கினாள் ஜாரின் மனைவி. காடாளும் காண்டா மிருகமவன் என கர்ச்சனை புரிந்தது மக்கள் உள்ளம். ஜனப்பிரதிநிதி சபையின் அவசரக்கூட்டம் கூடியது. புரட்சியை அடக்க ஒரேவழிதான் தெரிந்தது அவர் கட்கு! அது தான் “ஜார் அரசனின் முடிதுறப்பு வைபவம்”
ரோமனால் அரச வம்சத்திற்கே அன்றுதான் முடிதுறப்பு விழா. முதலாளி—மதவாதி வர்க்கத்திற்கே அன்று இரஷ்யாவில் இடுகாடு கட்டப்பட்டது, புதிதாக ! சாகாவரம் பெற்றிருந்த முதலாளி மதவாதிக் கூட்டங்கள் சிரஞ்சீவிப் பட்டத்தையிழந்து சிதையில் ஏற்றப்பட்டன. அந்தக் கொடுங்கோலர் கூட்டத்தின் உயிர்த்தோழனான கடவுளீயம் “சிதையே சிதையே” என்று பாடிற்று.
புரட்சி அடங்கிற்று. மழை ஓய்ந்தது: தூறல் நிற்கவில்லை.
சுமார் எட்டுமாதங்கள் இரஷ்யாவில் சில்லறைக் குழப்பங்கள். தொழிலாளர் சக்தி முழுவதையும் போல்ஷ்வெக்கட்சியின் பக்கம் திரட்டத் திட்டம் போட்டான் இலெனின். 1917 நவம்பர் ஏழாம் நாள் அகில இரஷ்ய சோவியத் காங்கிரஸ் பீட்ரோ கிரோட்டில் நடைபெற்றது.
கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே போல்ஷ்வெக்படையினர், அரசாங்கத்தைக் கைபற்றிக் கொண்டனர். தற்காலீக அரசாங்கத்தின் பிரதம மந்திரி கெரென்ஸ்கி பெண் வேடத்தில் தப்பியோடினார். சோவியத் அரசாங்கம் நிறுவப்பட்டது. இல்லை ...புதுவாழ்வுக்கு கால்கோல் விழா செய்யப்பட்டது. அந்தவெற்றிச் சிரிப்புதான் இன்றைய மேதினத்திலே எதிரொலிக்கிறது அந்த எதிரொலி திராவிடத்தில் இன ஒலியை—சுயமரியாதை ஒலியை எழுப்புமா?
கூறிய முட்கள் கைகளைக் கீறிடினும் மலர் கொய்யத் தாவும் குமரியின் கரங்கள்.
மூச்சை நிறுத்திவிடும் பயங்கர அலைகள் இருப்பினும் முத்தெடுக்க நினைக்கும் மனித உள்ளம்.
பாறைகள் இடிந்து உடலை நசுக்கிவிடும், என்பதறிந்தும் பொன்னெடுக்க சுரங்கந் தோண்டும் மானிட ஜாதி.
மலரும்-முத்தும் - பொன்னும் இலட்சியங்களாகின்றன. முள்ளும் - கடலும்- பாறையு இடையூறுகளாகின்றன. இடையூறுகளுக்கு அஞ்சாத பண்புகொண்டவன் இலட்சியப் பாதையை நோக்கி நடந்தபடியிருக்கிறான்.
அந்த இலட்சிய வீரன் எதற்கும் கலங்காத காளை.
“இடுக்கண் வருங்கால் நகுக,” இந்தக் குறள் அவன் மூச்சு.
‘இலட்சியமே என் உயிர்’ இது அவன் பேச்சு.
கொடுமைகள் கோர நர்த்தனம் செய்யும்போதும் அவன் குதூகலமாகத்தான் தன் பயணத்தை நடத்துவான்.
தன் எதிரே தனக்குக் தடையாக நிற்கும் மனிதர்களை அவன் மாமிச மலையென்பான். நசுங்கிப் போன ஈயச் செம்பே! என நையாண்டி செய்வான்.
“என்னை இப்படிப் பேசச் சொல்வது இதயத்தில் பீறிடும் இறுமாப்பல்ல ! உன் கண்களிலே தாண்டவமாடுகிறதே... அந்த கோரம் ! உன் உதடுகளின் இடுக்கில் வழிகிறதே அந்த அலட்சியம் ! உன் உள்ளத்தில் பொங்குகிறதே அந்த நஞ்சுக் குழம்பு ! இவைதான் என்னை அமைதியிழக்கச் செய்கின்றன” என்று தன் ஆத்திரத்தித்திற்கு விளக்கம் கூறுவான்.
அவன் புகழுக்காக ஆசைப் பட்டு பொதுநலப் பணியில் குதிக்கவில்லை. அவனுக்குத் தெரியும் அந்த வேலை சருக்கு மரம் ஏறும் கதை யென்று ! அவனறிவான் பொதுப்பணி-குமுறிவரும் வெள்ளப் பெருக்கில் எதிர் நீச்சல் போடும் செயல் என்று! எதிர் இயக்கத்தார் ஏவுகிற கணைகள் சொந்த இயக்கத்தார் சொருகுகிற ஈட்டிகள் - இவைகளை எதிர்பார்த்தே அந்த இலட்சியக்காரன் களத்தில் உலவுகிறான்.
பாசிபிடித்த ரத்தக்குட்டைகளாக - உளுத்துப் போன எலும்புக் கூண்டுகளாக-செல் மொய்த்த நரம்புக் கூடுகளாக மக்கள் வாழ்வது அவனுக்குப் பொறுக்க முடியவில்லை.
வாழ்வதற்குப் பகையாக இருக்கும் அத்தனை சக்திகளையும் அவன் நேர் நின்று தாக்குகிறான். மகாத்மாக்கள் போற்றி வந்த மதமா? மரவுரிதரித்த நாள் முதல் வணங்கி வந்த கடவுளா? மதத்தின் தலைவர்களா? கடவுளின் பிரதிநிதிகளா? அத்தனையும் அவன் சிந்தனைப் பட்டரையில் தூள்! தூள்!
