உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
துடிக்கும் இளமை/கட்டுரைகள் 2
கட்டுரைகள்

துடிக்கும் இளமை

கட்டுரைகள் 2 · 2 / 4

“மகளையே காதலித்து, கரடியைக் கூடிய மகானுபாவரே! மூடும் உமது நாலு வாய்களையும்! எனது சங்கின் முழக்கத்திலே—சக்கரத்தின் வீச்சிலே வீழ்ச்சி பெறுவாய். நினைவிருக்கட்டும்.”

தேவலோகத்திலே—ஆமாம்—மனிதரினும் மேம்பட்ட முப்பத்து முக்கோடி தேவர்கள் வாழும்

மேற்கண்ட வழக்குகளில் ஒன்றாகத்தான் பிர்மாவுக்கும் விஷ்ணுவுக்கும், “யார் பெரியவன்” என்ற வழக்கு ஆரம்பமாயிற்று! இதைத் தீர்த்து வைக்க சிவனார் வந்து சேர்கிறார். வழக்கை விசாரிக்கிறார். தீர்ப்பு கூறுவது சங்கடமாகி விடுகிறது. உடனே ஆகாயமளாவ ஜோதியாகக் கிளம்புகிறார். அந்த ஜோதியின் முடியை ஒருவரும், அடியை ஒருவரும் கண்டு திரும்ப வேண்டும். யார் முதலில் திரும்புகிறாரோ அவரே, பெரியவர் என்று சிவனார் முடிவு கூறிவிடுகிறார்.

முடியை நோக்கி பிர்மா அன்னப்பறவை உருவில் பறந்தார். பன்றி உருவமெடுத்து அடியைக்காண பரந்தாமன் பாதாளத்தைக் குடைய ஆரம்பித்தார். இருவரும் வெற்றியை அணுக முடியவில்லை. மேலே பறந்து கொண்டிருக்கும் பிர்மாவுக்கு எதிரில் ஒரு தாழம்பூ மேலே இருந்து கீழே வந்துகொண்டு இருந்தது. “ஓ! தாழம்பூவே எங்கிருந்து வருகிறாய்” என்றார் பிரம்மா.

“சிவபெருமானின் சடாமுடியிலிருந்து வருகிறேன்”, என்றது தாழம்பூ!

“நான் சிவனின் முடியைத் தேடிப்போகிறேன் என்னால் அதைக் கண்டு பிடிக்க முடியவில்லை. நான் அவரது முடியைக் கண்டுவிட்டதாக ஒரு பொய்சாட்சி சொல்லுகிறாயா” என்று கெஞ்சினார் பிர்மா?

பொய் சாட்சி சொல்லத் தாழம்பூ ஒத்துக்கொண்டது. அதன்படி சிவனிடம் சென்று நான் முடியைக்

கண்டுவிட்டேன் என்று பிர்மா கூறினார். அதற்குத் தாழம்பூ, ஆம் நானும் பார்த்தேன் என்று சாட்சியம் கூறிற்று. பாதாளத்தை நோக்கிப் பன்றி உருவிற் சென்ற விஷ்ணு நாரத முனிவரை சந்தித்துத் தன் முயற்சியில் வெற்றியடைய முடியாது என்பதைத் தெரிந்து கொண்டு தோல்வியோடு திரும்பினார். பரமசிவன், பிர்மாவும் தாழம்பூவும் பொய் கூறியதைக் கண்டுபிடித்து அவர்களுக்கு சாபம் அளித்தார். இதிலிருந்து பிர்மா, விஷ்ணுக்களின் கர்வம் அடங்கியதோடு, சிவனே யாவரிலும் பெரியவர் என்ற தீர்ப்பும் கூறப்பட்டது.

சண்டையிட்டவர் வெட்கித் தலைகுனிந்தனர்.

இது அருணாசல புராணம். தீப ஒளித்திருவிழா நடக்கப்போகிற திருவண்ணாமலை ஸ்தலத்தின் திருப்புராணத்தில் காணப்படும் ஆபாசங்களில் இதுவும் ஒன்று! அண்ணாமலையில் நடக்கும் கார்த்திகை தீபத்திற்குப் பலப்பல ஐதீகங்கள் உண்டு! சிவன் சில அசுரர்களை நெற்றிக் கண்ணால் எரித்துவிட்டதாகவும் அதுவே சொக்கப்பானைத் திருநாள் என்றும் ஒரு புராணம் கூறுகிறது. மற்றொரு புராணத்தில் அக்கினிதேவன், சப்த கன்னியரைக் காமுற்றதாகவும் அதைக் கண்ட அவன் மனைவி சுவாகா தேவி அருந்ததி கற்புடையவளானதால் அவள் உருவத்தைத் தவிர மற்ற ஆறு கன்னிகைகளின் உருவத்தை எடுத்து அக்கினி பகவானின் ஆசையைத் தீர்த்ததாகவும், அந்த ஆறு உருவங்களும் கார்த்திகைப்

பெண்களாக அவர்கள் முருகனுக்குப் பாலூட்டியதால் முருகனுக்கு கார்த்திகேயன் என்ற பெயர் ஏற்பட்டதாகவும், பிறகு அந்தப் பெண்கள் கார்த்திகை நட்சத்திரங்களாக மாறியதாகவும் அதுவே கார்த்திகை விரதத்திற்குக் காரணமென்றும் மற்றொரு புராணம் சொல்லுகிறது. மாபலி சக்கரவர்த்தி பற்றிய மற்றொரு புராணமும் உண்டு!

இம்மாதிரியே, இந்த நாட்டில் நடைபெறும் பண்டிகைகளுக்கும், உற்சவங்களுக்கும் ஆயிரக்கணக்கான—ஒன்றுக்கொன்று முரண்பட்ட கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அந்தக் கதைகளில் யாராவது ஒரு அசுரன் கொல்லப்பட்ட செய்தியும், அல்லது தேவர்களுக்குள் நடந்த அற்பத்தனமான, ஆபாசமான தகராறும் அதுவுமில்லையானால் ஒரு வஞ்சகத்தையும், விபச்சாரத்தையும் வளர்க்கும் புராணமும் காணப்படுமேயல்லாது, சிறிதாவது அறிவுக்குப் பொருத்தமான, ஒழுக்கமான நிகழ்ச்சிகளைக் காணமுடியாது.

இவைகளை சிந்தித்துப் பார்க்க இந்த நாட்டு மக்களுக்கு நேரமோ, நினைப்போ இருப்பதில்லை. எதை யெடுத்தாலும் முன்னோர்கள் வார்த்தை என்று முலாம் பூசப்பட்டு பழக்கவழக்கம் என்ற பசப்பு மொழி பேசப்படுகிறதே தவிர மனிதராக வாழ முயற்சிப்பதே கிடையாது!

இம்மாதிரி ஆபாசக் கதைகளின் பேரால் மாதத்திற்கொரு பண்டிகை! மாதத்திற்கொரு உற்சவத் திருநாள்! அதற்காக பல ஆபாச ஆட்டங்கள்! ஆடம்பரமான செலவுகள்! கண்டவர் சிரிக்கும் காட்டு மிராண்டி நடவடிக்கைகள்! இவைகள்தான், ஞானத்தில் சிறந்து சுதந்திர தாகமெடுத்து சுயராஜ்யத்திற்கு ஏன்? பொது உடமைக்கும் தயாரான சூரர்கள் வாழ்வதாகச் சொல்லப்படும் இந்த நாட்டிலே நடைபெறுகின்றன!

பாட்டாளி மக்களின் பச்சைக் குழந்தைகளின் வறண்ட தலைக்கு ஒரு துளி எண்ணெய் கிடையாது. திருவண்ணாமலைத் தீபத்திற்று ஆயிரக்கணக்கான நெய் டின்கள் உடைக்கப்படுகின்றன. மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள இந்த நாட்டு மாதர்களுக்கு ஒருமுழத் துணி கிடைப்பது கஷ்டமாயிருக்கிறது. ஆனால் அண்ணாமலை தீபத்திற்குப் பீஸ் பீஸாகத் துணிகள் கொளுத்தப்படுகின்றன. பசித்த மக்களுக்கு ஒரு பிடி சோறு கிடையாது. ஆனால் அந்தப் பரமபிதாவுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

இங்கு வறுமையால் வாடும் மக்களுடைய வயிறு எரிகிறது. அங்கு, அண்ணாமலையில் ஆடம்பரத்தோடு அறியாமை நெருப்பு எரிகிறது. அதற்கு நெய் வார்க்கப்படுகிறது. அந்தோ! கொடுமை! கொடுமை!