உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
துடிக்கும் இளமை/கட்டுரைகள் 3
கட்டுரைகள்

துடிக்கும் இளமை

கட்டுரைகள் 3 · 3 / 4

திராவிட மக்களுடைய உணர்வுக் கழனியிலே அறியாமையை நீராகப் பாய்ச்சி, மூடப் புராணீகப் பழக்க வழக்கங்களை பயிராக வளர்த்து, அவ்வப்போது முளைக்கும் ஆராய்ச்சிகளைக் “களை” என்று கழறி, பயமெனும் அரிவாளால் களைந்து தங்கள் சுயநலத்துக்கேற்ற வசதிகளை விளைவாகப் பெற்று பிழைப்பை அறுவடை செய்து பார்ப்பனரும், பணக்காரரும், படித்தவரும் வாழ்கின்றனர்.

இவர்களுடைய ஒப்பந்தம் முறிந்து கூட்டுச் சுரண்டல் முறை ஒழியவேண்டுமானால் திராவிடர் தன்மானம் பெறவேண்டும். திருவண்ணாமலை தீபங்கள் அணைக்கப்படவேண்டும். அதுவன்றி “அண்ணாமலைக்கு அரோகரா!” போட்டுக்கொண்டேயிருந்தால் பழைய கற்காலத்தை நோக்கிக் கட்டைவண்டிப் பிரயாணத்தை கட்டுசாத மூட்டையோடு ஆரம்பிக்க வேண்டியதுதான்! உணர்வார்களா திராவிடர்கள்? உணர்ந்து ஆவன செய்வார்களா?

கம்பராமாயணம் மட்டுமே கவிதைத் தேனாறு, கம்பன் ஒருவன்தான் கவிச்சக்கரவர்த்தி என்றெல்லாம் பேசப்பட்ட நிலைமை கரைய ஆரம்பித்திருக்கிறது இப்போது. கம்பனுக்கு மட்டுமே மாலை அணிவித்து மகிழ்ந்தவர்கள் இளங்கோவடிகளுக்கும் மதிப்புத் தர முன்வந்திருக்கிறார்கள். கம்பன் மகாநாடுதான் கவிதை மகாநாடு என்று கருதிக்கிடந்தவர்கள் சிலப்பதிகார மகாநாடு நடத்துகிற அளவுக்கு பெருநோக்கம் பெற்றிருக்கிறார்கள்.

திராவிடத்திலே அரசியலில் மட்டுமின்றி, சமுதாயத்தில் மட்டுமின்றி, இலக்கியத் துறையிலும் புரட்சி செய்தவர்கள் அறிவியக்கத்தாராகிய நாம் என்பதை யாரும் மறுக்க முடியாது—கம்பனுக்குக் கோயில் கட்டி அவனைக் கடவுளாக வணங்குகிற அளவுக்கு முதிர்ந்து போன மூடநம்பிக்கையை நமது கம்பராமாயண எதிர்ப்புக் கருத்துக்கள் முறியடித்தன. கம்பனை நாம் குறை கூறிய நேரத்திலே நம்மீது வீசப்பட்ட கணைகள், கொஞ்சமல்ல, கொடுஞ் சொற்களால் அர்ச்சிக்கப்பட்டோம்.

கலையுணர்ச்சி இல்லாதவர்கள் என்று பேசப்பட்டோம். “செவிச்சுவையுணரா வாயுணர்வின்மாக்கள்” என்று சுடு சொல்லால் தாக்கப்பட்டோம். ஆயினும் வெற்றி நமக்குத்தான் கிடைத்தது. நம் நோக்கம் கம்பராமாயண நூலே நாட்டில் கிடைக்கமுடியாமல் செய்துவிட வேண்டுமென்பதல்ல. கம்பன் செய்த தவறை நாட்டிலே எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டுமென்பதுதான் நம் குறிக்கோள். கம்பராமாயணம் திராவிடரை அரக்கர்கள் குரங்குகள் என்று சித்தரிக்கும் சிலந்திக்கூடு.

ஆகவே அதை வெறுக்கவேண்டுமென்றோம். அடிப்படையான வெறுப்பே அதுதான். ஆரிய ராமனை கம்பன் கடவுள் என்று கூறிவைத்தான்.

அந்தக் கயமைத் தனத்தைக் கண்டித்தோம். அப்படிப்பட்ட ஒரு நூல் திராவிடரின் பூஜைக்குரியதாயிருப்பது தன்மானமற்ற செயல் என்று விளக்கினோம். காலத்துக்கேற்றவாறு கம்பராமாயணத்திலே உள்ள கருத்துக்களை அனுமதிக்கத்தான் வேண்டுமென்றார்கள் கம்பதாசர்கள்! நாமோ அவைகளை ஆட்சேபிக்கவில்லை. ஒரு இனத்தையே இழிவுபடுத்தும் முறையில் கம்பன் திராவிடரைக் காட்டிக்கொடுத்திருக்கிறான் என்பதே நம்முடைய தலையாய குற்றச்சாட்டு, அதைத்தான் எதிர்த்துப் போராடினர் புலவர் பலர்.

அந்த நேரத்திலே கூட நாம் கூறினோம் நாங்கள் இலக்கிய விரோதிகளல்ல, சிலப்பதிகாரம் போன்ற நூல்கள் அக்காலக் கருத்துக்கள் பல கொண்டனவாயினும் திராவிடரை இழித்துப் பேசவில்லை என்பதோடு திராவிடரை உயர்த்திக் காட்டியிருக்கின்றன அவைகளை நாங்கள் வெறுப்பதில்லை என்று விளக்கியிருக்கிறோம்.

சிலப்பதிகாரம் போன்ற தமிழரின் செல்வங்கள் புதைபட்டுக் கிடக்கும் போது தமிழனை அரக்கனெனக் கூறும் கம்பராமாயணத்துக்கேன் விழா நடத்துகிறார்கள் வீணர்கள் என்று வினவியதுண்டு. நாம் அப்படி வினவியது சிலப்பதிகாரத்தின் மீது நமக்கேற்பட்ட பக்தியல்ல. பகவத் உணர்ச்சியுமல்ல. அல்லது அதிலே காணப்படும் அளவுக்கு மீறிய கற்பனைச் செய்திகளல்ல. தமிழர்களுடைய வாழ்க்கை முறை சிலப்பதிகார காலத்தில் எப்படியிருந்தது என்பதை விளக்கும் நூலாக சிலப்பதிகாரம் அமைந்திருக்கிறது என்பதற்காகவும், வடநாட்டாரின் முடிநெறித்த திராவிட வீரர்களின் சிறப்பு காணப்படுகிறது அதிலே என்கிற காரணத்தாலும் நீதிக்காக வாழ்ந்த திராவிட மன்னர்களின் பெருமை கூறப்படுகிறது அதிலே என்கிற ஆர்வத்தாலும் கண்ணகியென்கிற பாத்திரம் கற்பனைக்கெட்டாத செயல்களை செய்தாள் என்பதை நம்பாவிட்டாலும் அக்காலப் பெண்மணிகளின் துணிவு சித்தரிக்கப்பட்டுள்ள தன்மையை அறிந்துகொள்கிற வாய்ப்பு அதிலே இருப்பதாலும், சேர, சோழ, பாண்டியர் மூவருடைய ஆட்சிபற்றிய விபரங்கள் தெரிந்துகொள்ளும் அரிய நூல் அது என்பதாலும் சிலப்பதிகாரத்தை நாம் ஆதரிக்கிறோமே தவிர வேறில்லை.

திருக்குறளை ஏன் போற்றுகிறோம். தெய்வப் புலவர் திருவள்ளுவர் என்பதற்காகவா? இல்லை; அக்காலத்

தமிழகத்தைப் பற்றிய நல்லதொரு படப்பிடிப்பு திருக்குறள் என்பதாலும் திராவிடர் நீதி முறைகள் குறிக்கப்பட்டிருப்பதாலுமே குறளுக்கு விழா எடுக்கிறோம். குறைகளே யில்லாதது அல்ல குறள். அந்தக் குறைகள் அக்காலத்தில் எழுதப்பட்ட நூல் என்கிற ஒரே காரணத்தில் அடிபட்டுப் போகின்றன. வரப்போகும் காலங்களிலே இன்றைக்கு எழுதப்படுகிற புரட்சிக் கருத்துக்கள் கூட பழமையென்று கூறப்படலாம்.

பொதுவாக குறள், சிலப்பதிகாரம் போன்ற நூல்களிலே திராவிடரின் பெருமை ஒளிவிடுகிறது; ஆகவே பாராட்டுகிறோம்; கம்பன் திராவிடரை இழி மக்களாய் ஆக்கிவைத்தான்; ஆகவே எதிர்த்தோம்.

நம்முடைய பேச்சுக்களுக்கு சக்தி உண்டு என்பதைத்தான் கம்பனையே கட்டியணைத்திருந்தவர்கள் சிலப்பதிகாரத்துக்கும் மாநாடு நடத்த முன் வந்திருப்பது காட்டுகிறது.

ஆனால் ஒன்று கம்பனைப்போல ஆக்கி விடக்கூடாது, இளங்கோவடிகளை! காவிரிப்பூம்பட்டினத்திலே கூடிய மகாநாட்டில் இந்திர விழா கொண்டாடும்படியாக உபதேசம் செய்திருக்கிறார் ஆர். கே. சண்முகனார்! அந்த மூட நம்பிக்கைகளை வளர்ப்பதற்காக இருக்கக்கூடாது சிலப்பதிகார மகாநாடு.

“கொங்கணர் கலிங்கர் கொடுங் கருநாடர் பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர் வடவாரியரோடு வண்டமிழ் மயக்கத்துன்