சிந்தனையும் செயலும்
கட்டுரைகள் 40 · 40 / 50
என்றும்;
“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்”
என அய்யன் வள்ளுவரே; இயற்கையைத் தோல்வியுறச் செய்ய சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்ள வேண்டுமென்று கூறுகிறார்; இயற்கையே வலிமை வாய்ந்தது என்றும் அதைவிட முதன்மையானது எதுவுமில்லையென்றும் என்னை பெரு வியப்புடன் புகழ்ந்துரைப்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் உலக மானிடருக்கும் எனக்கும் நடக்கும் போராட்ட முடிவு இறுமறி நிலையிலேயே இருப்பதை உணர முடிகிறதல்லவா?
“அகழ்வாரைத் தாங்கும் நிலம்” என்று இகழ்வாரைப் பொறுத்துக் கொள்பவருக்கு என்னை உவமை கூறிவிடுவதால் எவ்வளவுதான் பொறுத்துக் கொள்ள முடியும் என்னால்? நீங்கள் அளவுக்கு மீறி சோதிக்க முனையும்போது, நான்தான் என்ன செய்ய முடியும்.
இந்தியாவிலேயே மிகப் பழைய கணக்கு முப்பது கோடி மக்கள் தொகை, இப்போது நூறு கோடியைத் தாண்டிக் கொண்டிருக்கிறது என்றால் - உலக முழுதும் உள்ள நாடுகளின் மக்கள் தொகையைக் கூட்டினால்; அதற்கேற்ப வசதி வாய்ப்புகள் வாழ்வதற்கான சாதனங்களின் தேவையை நிறைவு செய்திட; என்னிடம்தானே கும்பிட்டுக் கேட்கவோ; அல்லது கொள்ளையடித்து எடுத்துக் கொள்ளவோ; அல்லது போர் நடத்திக் கைப்பற்றிக் கொள்ளவோ திட்டமிட்டு செயல்பட மானிட சாதி மந்திராலோசனையில் ஈடுபட்டிருப்பதை நீயும் நானும் அறிய மாட்டோமா என்ன!
நான்தான் என் செய்வேன்; இரக்கமுள்ள ஜென்மம் - இருக்கும் வரை கொடுக்கிறேன் - எடுத்துப் போவதையும் கூடிய மட்டும் தடுத்து நிறுத்தாமல் இருக்கிறேன். என்ன இருந்தாலும் எறும்பு ஊர்ந்திடக் கல்லும் தேயும் என்பது போலக்கூட அல்லாமல் - யானைகளின் ஊர்வலமே அடிக்கடி நடந்தால் காடும் தேயுமே - நாடும் தேயுமே - உலகு சூழல்வதே ஒருநாள் ஓயுமே!
இயற்கையாம் என்னை என்ன பாடுபடுத்துகிறீர்கள்! ஆகாரத்துக்கான பசி என்றால்; மாமிசச் சப்பி மழலையர் பாலை அருந்திக் களிப்பர் - உங்களுக்கேற்பட்டிருப்பது அறிவுப் பசியன்றோ; அதனால் மக்களின் தேவைகளையும்
விருப்பங்களையும் நிறைவு செய்திட, மார்பில் ஊறும் பால் எங்கிருந்து உற்பத்தியென்றே தேடுகின்றீர்; அதனால் ஏற்படும் உபாதையில் நான் அழுகின்றேன் - துடிக்கின்றேன் - அலை மோதுகின்றேன் - வெகுண்டெழுந்து வெடிக்கின்றேன் - இயற்கையான எனக்கு இந்தச் செயல்பாடுகள்தான் என் வலியை அறிவிக்கும் வாயில்லா மொழி!
செயற்கை வழிச் செயல்படும் நீவீர்; சிறிது அடக்கம் காட்டி என்னையும் அடக்கி வைத்து; என்னழகைப் பருகிப் பயனடையலாமே!
அப்படி இல்லாமல் அடக்கி வைத்திட அடிமைப் பெண் கிடைத்தாள் என்று; அடி மேல் அடி கொடுத்துக் கொண்டிருந்தால் “சாது மிரண்டால் காடுகொள்ளாது” எனும் பழமொழிதான், மானிட வர்க்கத்தைப் பயமுறுத்திக் கொண்டிருக்கும்!
10 - 10 - 2005
★★★
கி.பி. 2004 - கடந்த ஆண்டு கடற்கோள் எனப்படும் சுனாமித் தாக்குதலால் சுமத்ரா தொடங்கி, அந்தமான் நிக்கோபார் எனத்தொடர்ந்து தமிழ் நாட்டுக் கடற்கரையோர நகர மக்களும், சிற்றார் பேரூர் மக்களும் உயிர் உடைமைகளை முறையே இலட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் இழந்தது பற்றியும் -
கி.பி. 2005 - இந்த ஆண்டும் இயற்கையின் சீற்றம் பூகம்பமாக - நில வெடிப்பு, நில நடுக்கம் என்பவைகளாக எழுந்து, இந்தியாவின் வட மாநிலங்களில் சில பகுதிகள், ஜம்மு-காஷ்மீர் - மற்றும் பக்கத்து நாடான பாகிஸ்தான் போன்றவற்றில் - மக்கள் உயிர் இழப்பே ஒரு இலட்சத்தைத் தாண்டும் என்ற கணக்கும் - மண்ணோடு மண்ணாகப் பல நகரங்களும், ஊர்களும் புதையுண்டு போயின என்ற கொடுமைகள் நிறைந்த செய்திகளும் அடங்கிய பேரிழப்பைச் சந்தித்துள்ளதை நானும் - முனைவர் நாகநாதனும் சிந்தித்தவாறே, வழக்கம்போல் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது; எங்கள் உரையாடலில் இந்தப் பேரிழிவு விளைவிக்கும் இயற்கைச் சீற்றங்களுக்குக் காரணம் தேடவும் முற்பட்டு; அதுபற்றி அறிவியல் மேதைகள் தமது ஆய்வில் கண்டறிந்து வெளியிட்டுள்ள கருத்துக்கள் குறித்தும் விவாதிக்கிற வாய்ப்பினைப் பெற்றோம்.
அப்போது முனைவர் நாகநாதன்; உலகம் போற்றும் பொருளியல் அறிஞரும் நோபல் பரிசு பெற்றவரும், இந்தியக் குடிமகன் என்பதில் பெருமைப்படுபவருமான அறிவியல் மேதை
அமெர்த்தியா சென் எனத் தொடங்கி - அறிவியல் அறிஞர்கள் ஆல்பர்ட் ஐன்ஸ்டின், ஒயிட் போர்டு, விஜயோஷி மாட்சுமோ, மஹமூப் உல்ஹக் ஆகியோரைப் பற்றியும், அவர்கள் இந்தப் பேரிழிவுக்கான இயற்கைச் சீற்றங்களுக்குக் கூறிய காரணங்கள் குறித்தும் விவரித்துவிட்டு; அவர்கள் கொண்டிருந்த ஆய்வுக் கருத்துக்களின் அடிப்படையில்தான் அண்மையில் நான் எழுதியுள்ள இயற்கைச் சீற்றம் குறித்த “வலி அறிவிக்கும் வாயில்லா மொழி” எனும் கட்டுரை அமைந்துள்ளது என்றும் விவரித்தார்.
அவர் விவரித்த அந்த விளக்கங்கள் கருமுகில் கூட்டம் வானில் பரவியிருப்பது போல் எனக்குத் தோன்றிய காரணத்தால் - இந்த முகில்கள் எல்லாம் சேர்ந்து எல்லோர்க்கும் பயன்படும் ஒரு கட்டுரை மழையாகப் பொழிந்தால் நலமாக இருக்குமே என்று நான் கூறிடவே அவ்வாறே அவர்; “அணு ஆயுத பூஜையும் - அச்சுறுத்தும் பேரழிவும்” என்ற தலைப்பில் அருமையான அறிவுபூர்வக் கட்டுரையாக வழங்கியுள்ளார். அது ‘முரசொலி’யிலும் வெளிவந்துள்ளது.
பாராட்டிப் பல கடிதங்கள்! தொலைபேசிகள்!
அந்தக் கட்டுரையில் அமெரிக்க அறிவியல் அறிஞர் ஒயிட் போர்டு என்பார்; உலகில் அணு ஆயுத பரிசோதனைகளுக்கு முன்பும் பின்பும் எனக் கணக்கிட்டு 1950க்கு முன்பு; ஆண்டுக்கு சராசரி 68 முறை நில அதிர்வுகள் என்றும், 1950க்குப் பிறகு ஆண்டுக்கு சராசரி 127 முறை நில அதிர்வுகள் என்றும் - அதிர்வு அளவும் 5.8 ரிக்டர் என இருந்து அதிகமாகிக் கொண்டே வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இயற்கையே புலம்பி அழுவது போலன்றோ நான் எழுதியிருந்தேன் -
“இயற்கையாம் என்னை என்ன பாடுபடுத்துகிறீர்கள்! ஆகாரத்துக்கான பசி என்றால்; மார்பைச் சப்பி மழலையர் பாலை அருந்திக் களிப்பர் - உங்களுக்கேற்பட்டிருப்பது அறிவுப் பசியன்றோ; அதனால் மக்களின் தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவு செய்திட, மார்பில் ஊறும் பால்
எங்கிருந்து உற்பத்தியென்றே தேடுகின்றீர்! அதனால் ஏற்படும் உபாதையில் நான் அழுகின்றேன் - துடிக்கின்றேன் - அலை மோதுகின்றேன் - வெகுண்டெழுந்து வெடிக்கின்றேன் - இயற்கையான எனக்கு இந்தச் செயல்பாடுகள் என வலியை அறிவிக்கும் வாயில்லா மொழி!”
இயற்கை, சினந்து சீற்றங்கொண்டு உயிர்களையும், உடைமைகளையும் பெருமளவுக்குப் பேரிழிவுக்கு உட்படுத்திய பிறகுதான்; வந்தபின் காப்போராக அரசுகள், அருள்நெறித் தொண்டு நிறுவனங்கள் - துயர் துடைப்புப் பணியாற்றத் துடித்தெழ முடிகிறது. வருமுன் காப்பதற்கான ஏற்பாடுகளை; நாமேதான் செய்து கொள்ள வேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசுகள் எதுவாயினும் எடுத்திடத் தயங்காமல் முன்வரவேண்டும்.
நிலநடுக்கமோ; அல்லது பேரலைத் தாக்குதலோ வரும்போது; அதன் காரணமாக ஒரு பத்தாயிரம் பேர் ஒரு பகுதியில் மாண்டு போயினர் என்றால் - நில நடுக்கம் - பேரலை இவற்றின் நேரடித் தாக்குதலுக்கு ஆளாகி மண்ணுள் புதைந்தோ; அல்லது மூழ்கியோ போகிறவர்கள் எண்ணிக்கையாக அந்தப் பத்தாயிரமும் இருப்பதில்லை. ஊன்றியுள்ள காலுக்குக் கீழே நிலம் அதிர்ந்தோ, வெடித்தோ புதைந்து போகிறவர்கள் அந்தப் பத்தாயிரத்தில் சில நூறு பேர்கள்தான் இருப்பார்கள்.
மற்றும் ஒன்பதாயிரத்துக்கு மேற்பட்டோர்; நில அதிர்ச்சியால் - வெடிப்பால் - பேரலைத் தாக்குதலால் - அவர்கள் வாழ்ந்திடும் வீடுகள் இடிந்து நொறுங்கி அந்த இடிபாடுகளில் சிக்கித் திணறி மூச்சை இழப்பவர்களேயாவார்கள்.
வேண்டுமானால் தொலைக்காட்சிகளிலே பாருங்கள்; இந்த அதிர்வுகளும் நடுக்கங்களும் ஆரம்பத்தில், உயர்ந்த வீடுகளை - மாடிக் கட்டிடங்களை - ஒரு நொடியில் அசைத்து இடித்து; அங்கே வாழ்பவர்களைத்தான் பிணக்குவியலாக்குகிறது என்ற நிலையை உணர முடியும்.
இதற்குத்தான்; வந்தபின் காப்பதற்கு துயர் தணிப்புப் பணிகளை மேற்கொள்வது ஒருபுறமிருந்தாலும் இத்தகைய
அழிவுகளை அனுமதிக்காமல் கதவைத் தாளிடும் முறையில் நாடுகளைப் பரிபாலிக்கும் அரசுகளும் - நாமும்; வருமுன் காப்பவர்களாக வாழ்வதற்குப் பழகிக்கொள்ள வேண்டும்.
ஆடம்பரத்தை வெளிச்சம் போடும் மாடி வீடோ, மாளிகையோ, இயற்கைச் சீற்றத்தினால் தாக்குண்டு நொறுங்கும்போது - நம் மேலே இரும்பு உத்திரங்களும் - கல்தூண்களும் - கருங்கல் சுவர்களும் விழுந்தால் நசங்கித்தானே ஆக வேண்டும்.
எனவே; இயற்கைச் சீற்றத்தைத் தடுத்துவிட முடியாது; ஆனால் அந்தச் சீற்றத்தினால் விளையும் பேரிழவை ஓரளவாவது கட்டுப்படுத்திட முடியும்.
