சிந்தனையும் செயலும்
கட்டுரைகள் 41 · 41 / 50
எரிமலை, பூகம்பம், கடற்கொந்தளிப்பு இவற்றால் உடனடி அழிவு ஏற்பட்டு விடாமல் இருக்க; அதே போல பேரழிவும் விளையாமலிருக்க ஜப்பான் போன்ற நாடுகள் - கடந்த கால அனுபவங்களால்; முதலில் தாங்கள் வாழும் இல்லங்களை அவற்றுக்கேற்ப அமைத்துக் கொள்கின்றன.
எல்லாம் இழந்து, குந்திடக் குடிலின்றி நிற்போரைப் பார்த்து; நிரந்தர வீடுகள் கட்டித் தருகிறோம் என்று உறுதி கூறுவதைக் காட்டிலும்; தற்காலிக வீடுகளையே தற்காப்பு வீடுகளாகத் தொடக்கத்திலேயே அமைத்துவிட்டால்; அவைகள் இடிந்து வீழவோ; அதனால் மக்கள் மடிந்து போகவோ வேண்டிய நிலை தோன்றாமலே போய்விடும். இந்த வருமுன் காக்கும் திட்டத்தை உலகில் எல்லா நாடுகளும் உணர்ந்து பார்த்து உரிய நேரத்தில்; உதவாதினி ஒரு தாமதம் என்ற உத்வேகத்துடன் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.
கல்லால் கட்டப்படும் சுவர்களுக்குப் பதிலாக; மூங்கில் சட்டங்களால் ஆன சுவர்கள் எழுப்பி; வேய்ந்திடும் கூரைகளுக்கு மெல்லிய பலகைகளைப் பயன்படுத்தி - அமைக்கப்படும் வீடுகளில் எந்த இடிபாடு ஏற்பட்டாலும்; அதனால் வாழும் வீட்டுக்குத்தான் சேதமே தவிர; இன்னும் வாழ வேண்டிய மனிதர்க்கு மரண ஓலை வாசிக்கப்படமாட்டாது என்பதை அனுபவத்தில் அறிய முடிகிறது!
வளர்ந்த அல்லது வளர்ந்து விட்ட விஞ்ஞான மேதாவிலாசத்தை மேலும் விரிவாக்கிக் கொண்டு விண்ணைச் சாட முனைவதையும் - மண்ணை வென்றிட முயன்றிடுவதையும்; அதற்காகக் கோடானு கோடிப் பணத்தைக் கொட்டிக் குவிப்பதையும் சற்று ஒத்திவைத்து விட்டு;
அந்த விஞ்ஞானப் பார்வையைக் கூர்மையாக்கிக் கொண்டு இயற்கைச் சீற்றம் எந்த வடிவில் - எந்தப் பெயரில் - எங்கிருந்து வந்தாலும்; அதனை முன்கூட்டியே அறிகின்ற ஆற்றலைப் பெற்றிடும் ‘அறிவியற்கலை’யைக் கற்றிட வேண்டியதே உடனடி வேலையாகும்.
“இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் நாட்டு அறிவியல் அறிஞர்கள் அணு குண்டு சோதனை நடத்துவதால் புவியின் மேல் ஓடு (Crust) பகுதிகள் பலவீனமடைகின்றன. இதன் காரணமாகவே நில அதிர்வுகள் தூண்டப்படுவதாக தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். 1950க்குப் பிறகு, சக்தியின் அளவு அதிகரிக்கப்பட்ட, 30,000 அணு ஆயுதங்கள் உலகம் முழுவதும் இருப்பதாக கணக்கிட்டுள்ளனர். இதற்காக பல இலட்சங் கோடி ரூபாய்கள் செலவிடப்படுகின்றன.
5000 அணு ஆயுதங்கள் 15 மணித் துளிகளில் விரைந்து ஏவப்படுவதற்காக தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சான்றாக, எதிர்பாராத வகையில் தற்செயலாக ரஷ்யாவின் அணு நீர் மூழ்கிக் கப்பலில் இருந்த அணு ஆயுதம் ஏவப்பட்டால் 8 அமெரிக்க நகரங்களில் உள்ள 70 இலட்சம் மக்களை நெருப்புப் புயல் எரித்து விடும். அதன் பின்பு கதிர்வீச்சின் விளைவுகள் ஏறக்குறைய ஒரு கோடி மக்களை மரணத்திற்கு அனுப்பிவிடும். எனவேதான் அணு ஆயுத சோதனைகளை நிகழ்த்தும் வல்லரசு நாடுகளை ‘மரண வணிகர்கள்’ (Merchants of Death) என்று அமெர்த்தியா சென் குறிப்பிட்டுள்ளார்.”
என்று தம்பி நாகநாதன்; தனது கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே விஞ்ஞானிகளின் முன்னேயுள்ள கேள்வி; “அய்யன்மீர்; உங்கள் கண்டுபிடிப்பு; மனிதர் நடமாடும் பாதையில் போடப்படும் வாழைப்பழத் தோலாக இருக்க விரும்புகிறீர்களா? அல்லது அவர்களை வீழாது காத்திடும் கைப்பிடிகளாக இருக்க விரும்புகிறீர்களா?”
என்பதுதான்!
16 - 10 - 2005
★★★
இந்தப் பிறவி - அடுத்த பிறவி; இந்த ஜென்மம் - மறு ஜென்மம் - நல்ல தமிழில் சொல்வதாயின், இம்மை - மறுமை; இவற்றில் இம்மைதான் உண்மை! மறுமை என்பது வெறும் கற்பனை - மனிதன்; மறு பிறவியெடுப்பான் என்பது கற்பனை பென்றாலும்; அவன் மறைந்த பிறகு சொர்க்கத்தை அடைகிறான் அல்லது நரகத்தை அடைகிறான் என்பதைக் கற்பனையென்று கூறாமல்; நான் நம்பிடவே செய்கிறேன்.
இஃதென்ன; புதுக் குழப்பம்? மறு பிறவியையே நம்பாதவர்; சொர்க்கம் - நரகம் என்பவற்றை நம்புவது வேடிக்கையாக இருக்கிறதே? இப்படிக் கேட்கத்தான் தோன்றும்!
மனிதன், பிறந்தவுடன் உலகவாசியாகி விடுகிறான் - வாழும்போதே; சொர்க்கலோகம் அடைவதற்கோ - அல்லது நரகலோகம் அடைவதற்கோ அனுமதிச்சீட்டை முன்கூட்டியே பதிவு செய்து விடுகிறான். எப்போதாவதுதான் அந்த இரண்டு உலகங்களில் ஒரு உலகத்திற்கான அனுமதிச் சீட்டை; ஒன்றை மாற்றிக் கொண்டு ஒன்றைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறான். அப்படித் திரும்பப் பெற்றது சொர்க்கலோக அனுமதிச் சீட்டாகவும் இருக்கலாம்; அல்லது மிக அரிதாக நரகலோக அனுமதிச் சீட்டாகவும் இருக்கலாம்.
சொர்க்கம் என்றால் என்ன? அது எப்படியிருக்கும்? நரகம் எப்படியிருக்கும்?
அந்த இரு உலகங்களின் நகர அமைப்பு, சாலை அமைப்பு - வசிப்போரின் வாழ்க்கைக்கான வசதிகள் - இவற்றை வைத்து இரண்டையும் ஒப்பிட்டுக் காட்ட முன்வரவில்லைய - ஏறத்தாழ இந்த அமைப்புகள் எல்லாம் ஒன்றுக்கொன்று வேறுபடாமல் - சொர்க்கத்தைப் போலவே நரகமும்; நரகத்தைப் போலவே சொர்க்கமும் விளங்குவதைக் காண முடியும்.
அப்படியானால்; எந்த அடிப்படையை வைத்து - இது சொர்க்கம்; இது நரகம் என்று அடையாளப்படுத்துவது என்பதற்கு விடையாக அமைவது; அந்த இடங்களில் ஏற்கனவே குடியேறியிருப்பவர்கள்; தொடர்ந்து குடியேறியவர்கள் ஆகியோரின் பண்பை வைத்துத்தான் எது சொர்க்கம்; எது நரகம் என்பதை நிர்ணயிக்க முடியும்.
அந்தக் காலத்துக் கதையொன்றுண்டு; அதனை அடிக்கடி கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் நினைவுபடுத்திப் பேசியுள்ளார்.
அக்கதைக்கு இப்போது வெருகேற்றி வழங்குகிறேன்.
வீட்டுக் கூடத்தில் முதியவர் ஒருவர் உடம்புக்கு முடியாமல் படுத்திருக்கிறார். அப்போது தெருவில் சவ ஊர்வலம் ஒன்று செல்கிறது என்பதை அறிவிக்கும் சங்குச் சப்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது. முதியவர், தனது பேரன் முரளியை அழைத்து; “முரளி! தெருவுக்குப் போய் பார்த்து வா; மயானத்துக்குப் போகிற ஊர்வலத்தின் பின்னால் தொடர்ந்து போய்; இறந்து போனவர் சொர்க்கத்தை அடையப் போகிறாரா; நரகத்தை அடையப்போகிறாரா என்று தெரிந்து கொண்டு வா!”
என்று கூறிப் பேரனை அனுப்பி வைக்கிறார்.
வீதிக்குச் சென்று, அந்த சவ ஊர்வலத்தைப் பின்தொடர்ந்து போன பேரன் திரும்பி வந்து “தாத்தா! அவர் சொர்க்கத்துக்குத்தான் அனுமதிக்கப்படுகிறார்!” என்று கூறினான்.
“நீ எப்படித் தெரிந்துகொண்டாய்?” தாத்தா கேட்டார்.
பேரன் பதில் சொன்னான்.
“ஊர்வலத்தின் பின்னால் போகிறவர்கள் என்ன பேசிக்கொண்டு போகிறார்கள் என்பதைக் கவனித்தேன். வீட்டு வாசல்களில் நின்ற பெண்கள் கண்ணீர் பெருக்கியதையும் கண்டேன். எதையும் எதிர்பார்க்காமல் எல்லோருக்கும் நன்மை செய்தவர் - முகம் கோணாமல் அள்ளியள்ளி வழங்கியவர் - அகம் மலர அனைவரையும் அரவணைத்தவர் - முகஸ்துதி என்பது அறவே பிடிக்காதவர்.”
இப்படிப் பாராட்டப்படுகிற ஒருவருக்கு; நிச்சயம் சொர்க்கம்தானே கிடைக்கும்; அங்குதானே போவார் தாத்தா; என்றான் பேரன்!
“அடேய்; முரளி! சொர்க்கத்துக்கு அவர் போக முடியாது. ஏனென்றால் சொர்க்கமென்றே ஒன்று கிடையாது. எங்கேயிருக்கிறது; சொர்க்கம்; தெரியுமா?”
“என்ன தாத்தா முன்னுக்குப் பின் முரணாகச் சொல்கிறீர்கள்? எனக்குப் புரியவே இல்லையே!”
“இப்போது புரிந்து கொள்! - சொர்க்கம் இங்கேதான் இருக்கிறது - சவ ஊர்வலத்தில் சென்றவர்கள்; வீதியில் நின்று பார்த்தவர்கள் எல்லாம் பேசிக்கொண்டார்களே; கண் கலங்கினார்களே; அதுதான் அவர் சென்றடைந்துள்ள சொர்க்கம்.
இதற்கு மாறாக; ‘பீடை தொலைந்தது’ என்று ஊரார் ஆறுதலடைவார்களேயானால் அதுதான் அந்த நபருக்கு நரகம்”
