சிந்தனையும் செயலும்
கட்டுரைகள் 31 · 31 / 50
அறிவு முதிர்ச்சியில்லாதவராக உள்ள அவையும்,
பகுத்தளித்து உண்பவர் பக்கத்தில்
அமர்ந்திட அமையாத நிலையும் –
நலன் விளைவிக்காமல்; தீமை
விளைவிக்கக் கூடியவைகளேயாகும்.
ஊரும், உணவருந்தும்போது பக்கத்திலிருப்போரின் குணமும், ஊரார் கூடும் அவையும் எவ்வாறு அமைந்தால் நன்மை பயக்கும் என்பதையும் – அவ்வாறு அமையாவிடின் தீமையே பயக்கும் என்பதையும் நல்லாதனார் விளக்கும் விதம் கண்டு வியப்பில் ஆழ்ந்துவிட்டால் மாத்திரம் போதுமா?
ஊர் மக்கள் கல்வியாளர்களாக – குறைந்த பட்சம் கற்றவர்களாகவாவது இருந்திடப் பாடுபட்டு முயற்சி மேற்கொள்ள வேண்டும். எந்தவொரு ஊரிலும் எழுத்தறிவில்லாதவரே இல்லை என்ற நிலை ஏற்பட எழுத்தறிவிக்கும் இறைவன்களாம்
கணக்காயர்கள் எனப்படும் ஆசிரியர்கள் போதுமான அளவுக்கு இருக்க வேண்டுமல்லவா?
அதைப் போலவே பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பாடு பற்றி நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலையான கருத்தைத் தந்த அய்யன் வள்ளுவரின் அடியொற்றி; நம் வாயிலாக வழங்கப்படும் உணவு, உடை மற்றும் பொருள்களைப் பகுத்தளித்து விட்டு நாம் நமக்குரியதைப் பெற்றுக் கொள்ள வேண்டுமே தவிர; எல்லாம் தமக்கேயென்று எடுத்தொளித்துக் கொள்ளக் கூடாதன்றோ?
மேலும் ஒரு கருத்தாக; இந்தப் பாடலில் அவைக்களத்தில் “பிணக்கறுக்கும் மூத்தோர் இருக்க வேண்டும்” என்பதை நல்லாதனார் அத்தகைய முதிர்ச்சியுற்றோர் இல்லா அவைக்களம் நன்மை பயக்கக் கூடியதாக அமையாது என்று அழுத்தம் திருத்தமாகச் சுட்டிக் காட்டுகிறார்.
இதற்கான சான்று தேடி நாம் அலைய வேண்டியதில்லை; அயல் நாடுகளில் அவைக் களங்களில் எப்போதோ; என்றோ ஒரு நாள் நடக்கின்ற அமளி துமளி; நமது நாட்டில் உள்ள பாராளுமன்ற மாயினும்; சட்டப் பேரவையாயினும்; மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சி மன்றங்களிலாயினும் அன்றாடம் நடப்பதைக் காணும்பொழுது;
அறிவு முதிர்ச்சியுற்றோர் இல்லாத அவைக்களம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தீமையே விளைவிக்கும் என்று நல்லாதனார் ‘திரிகடுக’த்தின் வாயிலாகத் தெரிவுபடுத்துவது ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மையாகத்தானே இருக்கிறது.
26 - 9 - 2005
★★★
தமிழ் மொழி காத்திடவும், தமிழர் உரிமை நிலை நாட்டிடவும், இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நடைபெற்ற மொழிப் போராட்டத்தில் சிங்கத் தமிழன் சின்னச்சாமி திருச்சி மாநகரில் தீக்குளித்து மாண்டான். அவ்வாறு உயிரை மாய்த்துக் கொள்ளும் முறை; ஏற்றத்தாழ வன்முறைக்கு ஒப்பானதுதான் என்று எடுத்துரைத்தும்கூட; அந்த மொழிப்போராட்டத்திலும் – அதன் பின்னர் தலைவர்கள் மீது ஏவப்பட்ட அடக்குமுறைகள், சிறை வாசங்கள், ஆகியவற்றைத் தாங்கிக் கொள்ள முடியாத தமிழ் இளைஞர்கள் நூறு பேருக்கும் குறையாத எண்ணிக்கையினர் தீயைத் தழுவியும், நஞ்சருந்தியும், உயிர்த் தியாகம் செய்துகொண்ட கொடுமையைத் தடுத்து நிறுத்திடத் திராவிட இயக்கத் தலைவர்கள் பாடாதபாடுபட்டனர்.
அந்தத் தியாகச் சுடர்களின் திருநாமங்களை இந்தத் திருநாடு என்றும் மறந்து விடாது என்று பெருமிதங் கொண்டு; அதே நேரத்தில் அந்த உயிர்கள் உலகில் இன்னும் பல நல்ல காரியங்களை ஆற்றுவதற்குத் தேவை; ஆகவே அவற்றை அழித்துக் கொள்ள முனையாதீர் என்ற அறிவுரையும் – அன்பான வேண்டுகோள்களும் விடப்பட்டன.
அந்தச் சோகம் சூழ்ந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன். தீக்குளித்தோர் – அதனால் மாண்டு மடிந்தோர் கண்டு தீயிற்பட்ட புழுவாய்த் துடித்துமிருக்கிறேன்.
அந்த நெருப்பு மண்டலம் இப்போதும் நம்மைச் சுற்றி நீண்டுயர்ந்த சுவராக எழுந்து நிற்பது போன்ற காட்சியைக் காணச்
சகியாது கண்களை மூடிக் கொள்ளும்போதுகூட; நம்மைத் திடுக்கிட வைக்கும் ஓர் ஒலி கேட்கிறது.
“தீப்புகுதல் நன்று”
ஆம்; இந்த ஒலி ஓர் இலக்கியத்து வரியாக அமைந்து, நமக்குத் திகிலூட்டுகிறது.
உயிரனைய கணவன் இறந்தான்; இனி உயிர் வாழ்தல் இல்லையென; நீதிக்காக உயிர் துறந்த
நெடுஞ்செழியப் பாண்டியனின் நெஞ்சக மீதே வீழ்ந்து உயிர் விட்ட கோப்பெருந்தேவியைச்
சிலப்பதிகாரத்தில் காண முடிகிறது.
கணவனையிழந்து கைம்மைக் கொடுமையை
அனுபவிப்பதோ என அலறித் துடித்து
ஆவிதனை
மாய்த்துக் கொள்வதே நன்முடிவு எனத் துணிந்த
