சிந்தனையும் செயலும்
கட்டுரைகள் 26 · 26 / 50
கட்டுப்பாடு பிரச்சினைகளும் - நோய் தடுப்பு முறைகள் போதாமையும் இயற்கையாகவே ஏற்பட்டு விட்டன என்பதை உணர முடிகிறது.
ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் மட்டுமே மக்கள் தொகை மிகுதியாயிற்று என்ற நிலை மாறி, கோடிக்கணக்கில் மக்கள் எண்ணிக்கை பெருகிடும்போது; நோய் நொடிகளும் பெருகிடத்தான் செய்கின்றன. அந்த நோய்களைத் தடுக்கவும், குணப்படுத்தவும் - பல வகை சிகிச்சை முறைகளும் - மருந்துகளும் இருக்கின்றன.
வளர்ந்து வரும் விஞ்ஞான உலகத்தில், நோய்களைக் குணப்படுத்திட அறுவை சிகிச்சையும் அலோபதி மருத்துவ முறையும் பெரும்பாலும் வரவேற்கப்படக் கூடியனவாக இருப்பினும் - இடையிடையே சித்த மருத்துவம் போன்ற பச்சிலை மற்றும் மூலிகைகளாலும் நோய்களை எதிர்த்து ஏற்ற பரிகாரம் காண முடியும் என உறுதிகூறும் மருத்துவர்களை நூற்றுக்கு நூறு மடங்கு அப்படியே நோயாளிகள் நம்பி விடுவது இல்லை.
நோயாளிக்கு முதலில் நம்பிக்கை கொள்வது; ஒரு முக்கியமான மருந்தாகக் கருதப்படுகிறது. நாட்டு மருந்து என்பது எதுவாயினும் அது தரப்படும் முறையின் தரம், காலத்துக்கேற்ப நவீன மயமாக்கப்பட வேண்டும் என்பது மிக முக்கியம். பறித்தெடுத்த பச்சிலை மூலிகைத் தழைகளாகவே கொடுப்பதைக் கண்டு முகஞ்சுளிக்கும் நோயாளி; அதே பச்சிலை அல்லது மூலிகைத் தழைகளை பக்குவம் செய்து மாத்திரையாகவோ அல்லது நுண்ணிய குழாயிலிட்டோ தரப்படும்போது முகங்கோணாமல் பெற்றுப் பயன்படுத்திக் கொள்வதைக் காணமுடிகிறதல்லவா!
அலோபதி முறை - நாட்டு மருத்துவ முறை என்ற இரண்டு முறைகளையும் அறவே தள்ளிவிட முடியாத ஏதாவது ஒரு முறை தேவைப்படுகிற அவசியம், சில சூழல்களில் தவிர்க்க முடியாததாக இருக்கும்.
அலோபதி முறையை ஒரு மருத்துவமனையில் ஐந்தாவது மாடிக்குச் செல்லும் “லிப்ட்” இயந்திரம் என்று வைத்துக் கொள்வோம். நடக்க முடியாமல் காலில் வலியுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதில் குறிப்பிட்ட மாடிப்படிகளைக் கடந்து மருத்துவமனையின் ஐந்தாவது மாடி நீண்ட தாழ்வாரத்தை அடைந்த பிறகு; அப்போதும் காலில் வலியிருக்குமானால்; அந்த நீண்ட தாழ்வாரத்தைக் கடந்திட ‘சக்கர நாற்காலி’யைப் பயன்படுத்துவதில்லையா; அந்த சக்கர நாற்காலி போன்றதுதான் அலோபதியில்லாத ஏனைய சித்தா முதலிய மருத்துவ முறைகள் ஆகும்!
தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத் திறப்பு விழாவில் இந்தியப் பிரதமர் ஆற்றிய உரையில் அலோபதி மருத்துவ முறையையும் - சித்த மருத்துவ முறையையும் - ஒப்பிட்டு இரண்டையும் சிலாகித்திருப்பது இருமுறைகளைக் கடைப்பிடிப்போரும் ஏற்கக் கூடியதாகும்.
பிரதமர் அவர்களின் உரையில் முக்கியமான பகுதி;
“அலோபதி மருந்துகள் பொதுவாக நோய்களை குணமாக்குகின்றன. நமது பாரம்பரிய சித்தா போன்ற மருந்துகள் நோய்களைக் குணமாக்குவதுடன்; நோய்கள் வராமலே தடுக்கவும் பயன்படுகின்றன. இவற்றைத் தயார்படுத்த நவீன முறைகளை மேலும் மேம்படுத்திட வேண்டும்”
என்பதாகும்.
“அலோபதி” முறையில் மட்டுமே தற்காலத்தில் அறுவை சிகிச்சையும் நோய்களை நுணுக்கமாகக் கண்டறியும் ஆய்வு கருவிகளும் கையாளப்படுகின்றன - அலோபதி அல்லாத நாட்டு மருத்துவ முறைகளில் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாமல் அன்றாடம் தலைகாட்டுகிற நோய்களை எளிமையாகவும் குணப்படுத்திட முடிகிறது. அத்தகைய நோய்கள் வராமலே
தற்காப்பு செய்து கொள்ளவும் பழங்கள், காய்கறி, கீரை போன்றவைகளே மருந்துகள் போலவும் பயன்படுவதை அவரவர் அனுபவத்தில் உணருகிறோம்.
நெல், கோதுமை, பச்சைப்பயறு, துவரை, கொண்டைக் கடலை, மொச்சை, உளுந்து, எள், கொள்ளு ஆகிய நவதானியங்களை நன்றாக சுத்தப்படுத்தி, மாவாக அரைத்து பொடி செய்துகொண்டு, ஒவ்வொரு நாளும் அதிலே இரண்டு தேக்கரண்டி அளவிற்கு எடுத்து, அத்துடன் சம அளவில் சர்க்கரையைச் சேர்த்து பாலில் கலந்து காய்ச்சி அன்றாடம் காலை மாலை வேளைகளில் அருந்தினால் நமது உடல் நலத்துக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களும் கிடைக்கும் என்றும், நன்றாகப் பசியெடுக்கும் என்றும், ஜீரண சக்தி பெருகுமென்றும், நோய்களை எதிர்க்கக் கூடிய சக்தி உண்டாகுமென்றும், உடலுக்கு நல்ல வலிமை ஏற்படும் என்றும் சிறு வயதில் என்னுடைய திருக்குவளை கிராமத்திற்கு பக்கத்தில் உள்ள காருகுடி என்ற கிராமத்தைச் சேர்ந்த நாட்டு வைத்தியர் ஒருவர் கூறியது எனக்கு இன்றைக்கும் நன்றாக நினைவில் உள்ளது.
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்”
என, அன்றைக்கே மருத்துவர்களுக்கெல்லாம் மேலான மனித நேயமிக்க மருத்துவர் அய்யன் வள்ளுவர்; திருக்குறளில் “அருந்திய உணவு செரிப்பதற்குக் கால அளவு தந்து; பின்னர் உணவு அருந்தினால் அவருக்கு மருந்தென ஒன்று வேண்டாம்” என்று கூறியிருப்பது கூர்ந்து கவனித்துப் பின்பற்றத்தக்கது.
8 - 9 - 2005
★★★
பலாயிரம் நூல்கள் கொண்டதும் அவற்றை முறையாகப் படிப்பதற்குரிய வசதி வாய்ப்புகள் நிறைந்ததுமான நூலகம் ஒன்று சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் நீண்ட காலமாக இயங்கி வருகிறது. “பேராசிரியர் ஆய்வக நூல் நிலையம்” என்ற பெயரால் விளங்கும் அதனை, அறிவு தாகமெடுத்தோர், இலக்கிய ஆர்வம் படைத்தோர், பயன்படுத்திக் கொள்ளும் பாங்கு, நாளும் வளர்வதுகண்டு நமக்குப் பெருமகிழ்ச்சி ஏற்படுகிறது.
அனைத்துத் துறைகள் பற்றிய அரிய நூல்கள் பல அந்த ஆய்வக நூலகத்தில் இடம் பெற்றுள்ளன. விலை கொடுத்து வாங்கி வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் மட்டுமின்றி; ஈகைக் குணமுடையோர் பலரும் ஏராளமான நூல்களை அன்பளிப்பாக வழங்கியும் வருகின்றனர். அந்த நூலகத்தில் நூலகராகப் பணியாற்றும் திரு. சுந்தரராஜன் அங்குள்ள ஆயிரக்கணக்கான புத்தகங்களை பொருள்வாரியாக பிரித்து வைத்திருப்பதோடு, ஆய்வுக்காக வருபவர்களின் தேவைக்கேற்ப அவராகவே முன்வந்து புத்தகங்களைத் தேடிக் கொடுத்து உதவி புரிந்து வருவதைப் பாராட்டாதார் இல்லை.
என்னைக் காண வருவோர், புத்தகங்கள் வழங்கிடும் பழக்கமுடையோர் எனக்களிக்கும் புத்தகங்களின் குவியலை சில நாட்கள் வீட்டில் வைத்திருந்து பின்னர் அந்த ஆய்வக நூல் நிலையத்துக்கே அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.
அவற்றில் ஒரு குவியல், மருத்துவத் துறை பற்றிய நூல்களாகவே இருக்கக் கண்டு, சிலவற்றை - “சிந்தனையும் செயலும்” எனும் தலைப்பில் எழுதுவதற்குப் பயன்படுத்திக் கொண்டுமிருக்கிறேன்.
“பேராசிரியர் ஆய்வக நூலக”த்திற்கு அனுப்பி வைத்திட எண்ணி சில நூல்களை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தபோது “ஹார்ட் அட்டாக்” என்று தமிழ் எழுத்துக்களில் ஆங்கில மொழியில் எழுதப்பட்டதும் அழுக்கேறிக் கிழிந்துபோன அட்டை போடப்பட்டதுமான புத்தகம் ஒன்று காணப்பட்டது.
என் இல்லத்து நூல் நிலையத்திலேயே ‘4906’ என்ற எண்ணுள்ள அந்த நூலினை அதன் பரிதாபத் தோற்றங்கண்டு பரிவுடன் மேலும் கிழிந்து விடாமல் எச்சரிக்கையாகப் புரட்டினேன்.
“ஹார்ட் அட்டாக் (மாரடைப்பு) நடைமுறை ஐயங்கள் - விளக்கங்கள்”
என்ற தலைப்பிடப்பட்ட அந்த நூலை எழுதியவர், “ஹிமானா சையத்” என அழைக்கப்படும் பல்கலை ஆர்வலர் டாக்டர் அ. சையத் இப்ராஹிம் என்பவராவார். 1-7-1990 எனத் தேதியிட்டும் அவர் கையெழுத்திட்டும் அந்த நூலை எனக்கு 15 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கியிருக்கிறார். புத்தகத்தைப் படிக்கும்போதும், முகவரியெனக் குறிப்பிடப்பட்டுள்ள (புத்தகம் கிடைக்குமிடம்) “மல்லாரி கிளினிக், சித்தார்கோட்டை பனைக்குளம், அழகன்குளம்” என்பனவற்றை அப்புத்தகத்தின் முகப்பில் காணும்போதும் - அந்த நூலாசிரியர் இராமநாதபுரம் மாவட்டத்துக்காரர் என்பது எளிதில் புரிந்தது.
ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது ஒரு முறை உதகை மலர் காட்சி சிறப்பு விழாவில் “சோலை வனங்களால் சொக்க வைக்கும், நீலகிரியும் காண்கிறேன் - பாலைவனம் போல் காட்சி தருகிற முகவை மாவட்டம் போன்ற பகுதிகளையும் எண்ணிக் கலங்குகிறேன்” என்று உரை நிகழ்த்தியது; ‘இராமநாதபுரம்’ என்ற யார் சொன்னாலும் உடனே என் நினைவுக்கு வந்துவிடும்.
பாலைவனத்தை சோலைவனமாக்கிடப் பணிகளும் தொடர்ந்தன அன்றைய ஆட்சியில்!
என் கையில் கிடைத்த நூலின் தலைப்பான “ஹார்ட் அட்டாக்” என்பதையும், இராமநாதபுரத்தையும் இணைத்துப் பார்த்திடும்வேளையில் ஒரே குடும்பத்தில் தந்தை, தனயர்கள் மூவர்; இந்த நான்கு பேருமே 45 வயதுக்கு மேல் வாழாமல்; 45 வயதுக்குள்ளாகவே மாரடைப்பு மரணத்துக்கு ஆளாகிவிட்ட கொடுமையைக் கண்டு கேட்டுக் கண்ணீர் வடித்தவர்களில் ஒருவனாயிற்றே நான்!
