சிந்தனையும் செயலும்
கட்டுரைகள் 27 · 27 / 50
அரசியலில் அண்ணாவின் தம்பிகளாக - என் அன்பு உடன்பிறப்புகளாக அல்லும் பகலும் பாடுபட்டவர்கள் - ஆம்; சத்தியேந்திரன், மகேந்திரன், ராஜேந்திரன் - இந்த மூன்று சகோதரர்களும் ஒருவர் பின் ஒருவராக 45 வயதுக்குள்ளாகவே மாரடைப்பு நோயினால் தாக்குண்டு, மறைந்து போனார்கள். அவர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக, நகர் மன்றத் தலைவர்களாக இருந்தவர்கள். திடீர் மாரடைப்புத் தாக்குதலால் தீர்ந்தது அவர்கள் வாழ்வு!
“இது ஒரு பரம்பரை வியாதி எனலாம். அதாவது குடும்பத்தில் தந்தை அல்லது தாய் வழியில் வேறு யாருக்காவது வந்திருந்தால் இவ்வியாதி வரலாம்”
என்று நூலாசிரியர் அவர்களே குறிப்பிட்டுள்ளதற்கிணங்க - இந்த மூன்று சகோதரர்களின் தந்தை குப்புசாமி சேர்வை அவர்களும்கூட அதே மாரடைப்பு காரணமாகத்தான் குறை வயதில் மறைவுற்றிருக்கிறார்.
அந்தக் குடும்பத்தின் தொடர் சோக வரலாற்றை நண்பர் தென்னரசு அவர்களும், தம்பி தங்கவேலனும் என்னிடம் கூறியிருந்த காரணத்தால்; நான் அந்தச் சகோதரர்களைப் பல முறை எச்சரித்தும், முன்கூட்டியே அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்படி ஆலோசனை கூறியும், அதனை ஏற்று நடந்திடத் தயங்கி விட்டார்கள் அறுவை சிகிச்சைக்கு அஞ்சி!
தென்னரசு, அவர் காலந்தாழ்த்தி விட்ட காரணத்தால், அவரையும் காலம் வென்று விட்டது. கம்பம் ராஜாங்கம் எம்.பி., தொடங்கி, அடுத்து கம்பம் நடராசன், எம்.பி., - அண்மையில்
க.சோ. கணேசன் வரையில் எச்சரிக்கையில்லாததாலும் - ஏற்ற சிகிச்சை பெறாததாலும் - மருத்துவர்கள் அறிவுரையை மனத்தில் கொள்ளாததாலும் - எத்தனை பேரிழப்புகளை நாம் சந்திக்க நேர்ந்திருக்கிறது. இளம் வயதினர் எல்லா இயக்கங்களிலுமே இப்படியொரு முடிவுக்கு ஆளாவதை பெருமளவு தடுப்பதற்கு நான் கண்டெடுத்துள்ளதும், கையில் கிடைத்ததுமான இந்த ‘ஹார்ட் அட்டாக்’ என்ற எட்டு ரூபாய் விலையுள்ள சிறிய புத்தகம் பெரிதும் பயன்படும்.
அந்த நூல் விற்பனைக்கான விளம்பர நோக்குடன் இதை நான் எழுதவில்லை. இருதய நோய் குறித்த நூல்கள்; எல்லா நோய்களையும் குறித்தும் சிகிச்சை குறித்தும் நூல்கள் பெரிய அளவில் வெளிவந்துள்ளன. அவற்றைப் படித்து முடிப்பதே பெரும் வேலை! ஆனால் இந்த நூல் சிறிய அளவிலும் - விரைவில் படித்துவிடக் கூடியதாகவும் - இருதய நோய் தாக்கினால் எப்படி குணமாக்குவது - வராமலே எப்படித் தடுப்பது - என்பன போன்ற பல விவரங்களை சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதாகவும் அமைந்திருப்பதால் இதனை எல்லோருமே எளிதாகப் படித்துப் பயன் பெறலாம் என்ற எண்ணத்துடன்தான் இதனை எழுதியுள்ளேன்.
நான் குறிப்பிடும் இந்த நூலில் மாரடைப்பு பற்றிய பல முக்கிய விபரங்கள் இருப்பினும் - மாரடைப்பு ஒரு முறை வந்தவர்கள் எப்படி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகக் கூறப்பட்டுள்ள அறிவுரைகள்; முதல் முறையே கூட மாரடைப்பு வராமல் தடுப்பதற்கும் பயன்படக் கூடியவை என்பதை இந்த நூலைப் படிப்போர் உணர்ந்து கொண்டால் மட்டும் போதாது;
உணர்ந்தவாறு நடந்து கொள்ளவும் வேண்டும்.
மருத்துவர்களின் சிகிச்சை - அவர்களின் அறிவுரை - அவற்றுக்குத் தோழமை உணர்வுடன் துணை நிற்கக் கூடியது “ஹார்ட் அட்டாக்” எனும் இந்த சிறிய நூல் என்பதால்; இதனை இன்னும் பல பதிப்புகளாக வெளியிட்டுப் பரப்பலாம். இது, ஏதோ எழுத வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட எழுத்தல்ல; என்றைக்குமே என் எழுத்து;
- அத்தகைய பட்டியலில் இடம் பெறுவதல்ல;
எல்லோரும் வாழ வேண்டும் என்பதற்காக எழுதப்படுவதேயாகும்!
10 - 9 - 2005
★★★
1990 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 11ஆம் நாள் காலை திருச்சியில் திராவிட முன்னேற்றக் கழக மாநாடு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது; மகிழ்ச்சி பொங்கிட துள்ளிக் குதித்துக் கொண்டு மேடையிலிருந்த ஒலிபெருக்கியின் முன்னால் நான் வந்து நின்றேன். அலைகடலெனக் குழுமியிருந்த தமிழ் மக்களைப் பார்த்துச் சொன்னேன்.
“தமிழ்ப் பெருங்குடி மக்களே!
கழக உடன்பிறப்புக்களே!
எல்லையற்ற மகிழ்ச்சியை ஏந்தி வந்துள்ள செய்தி;
27 ஆண்டுக் காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த
தென்னாப்பிரிக்கா நாட்டின் கறுப்பர் இனத்தலைவன்
நெல்சன் மண்டேலா விடுதலை செய்யப்பட்டு
விட்டார் - இந்த மகிழ்ச்சியைக் கொண்டாட
மாநாட்டுப் பந்தலில் குழுமியிருப்போர் அனைவரும்
எழுந்து நின்று தொடர்ந்து கையொலி செய்யுங்கள்”
இந்தக் கருத்தமைந்த என் வேண்டுகோள்கேட்டு; மண்டேலா விடுதலையால் மகிழ்ச்சியில் ஆழ்ந்தோர் மாநாட்டில் “நான்
போதும் போதும்” என்று கையமர்த்தும் வரையில்; கடலில்லா திருச்சியில் கடலலைகளின் முழக்கத்தைச் செய்தனர்.
உலகமே அந்த ஒரு மனிதனின் சிறைவாசத்தைப் பற்றித்தான் அப்போது பேசிக் கொண்டும்; கண்கலங்கிக் கொண்டுமிருந்தது. தென்னாப்பிரிக்கா நமது அண்ணல் காந்தியடிகள் இந்திய மக்கள் உரிமைக்காக குரல் எழுப்பி அறப்போர் முறையை அறிமுகப்படுத்திய மண்! அண்ணல் நடத்திய அந்தப் போராட்டத்தில் இந்திய நாட்டின் தமிழ் நிலத்துக்குச் சொந்தக்காரர்களான நாகப்பன், நாராயணசாமி என்ற வாலிபர்களும், தில்லையாடி வள்ளியம்மாள் என்ற பெண்மணியும்; சிறை புகுந்து, உடல் நலிந்து, உயிர் விட்டார்கள் என்பது வரலாறு - அந்த வரலாறு என்றும் நினைக்கப்படும் வண்ணம் கழக ஆட்சியின் கைவண்ணத்தால் உருவான அரிய சின்னங்கள் இன்னும் அழியாச் சின்னங்களாக விளங்குகின்றன.
தென்னாப்பிரிக்காவிலும்கூட நமது இந்தியப் பிரதமராக நமது அணியின் நாயகராக விளங்கிய திரு. குஜ்ரால் அவர்கள் 1997ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் நாள் அந்தத் தியாகிகளின் நினைவிடம் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார் என்பது உணர்ச்சிமிக்க ஓர் நிகழ்ச்சியாகும்.
