உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கட்டுரைகள்

சிந்தனையும் செயலும்

கட்டுரைகள் 22 · 22 / 50

“புதிதாக ஒன்றைச் செயல்படுத்த எடுத்துக் கொள்ளும்போது அதற்கான பொதுக் கருத்து

அறிவதற்குத் தேவையான ஒப்பந்தம் ஏற்பட்டதான் எல்லோருடைய கருத்தும் ஒரே வகையாக இருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பிறகு எல்லா நிலைகளிலும் அந்தப் பொதுக் கருத்து, எல்லோருடைய விருப்பம்போல அமைந்திட முடியாது. அவ்வாறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது, பெரும்பான்மையோர் கருத்து எதுவோ, அதைத்தான் பொதுக் கருத்து எனக் கொள்ள வேண்டும்”

ரூசோவின் இந்தக் கருத்தையும்; மகளிருக்கான இடஒதுக்கீடு சட்டம் கொண்டுவர, ஆர்வமுடையோர் சிந்தித்துச் செயல்பட முன்வரவேண்டும்.

இப்போது 500க்கு மேற்பட்ட நாடாளுமன்ற இடங்களில் குறிப்பிட்ட தொகுதிகளை இரட்டை உறுப்பினர் தொகுதிகளாக்கி; உறுப்பினர்களின் எண்ணிக்கையை கூடுதலாக்கி, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடம் ஒதுக்கலாம் என்றால்; ஆண்கள் இப்போது இருக்கும் இடங்களைப் பெண்களுடன் பகிர்ந்து கொண்டு 33 சதவீத இடங்களை இழக்கத் தயாராக இல்லை என்றுதான் ஆகிறது; எனவே மகளிர்க்கென தனி இடம் தர இடங்களை மேலும் அதிகமாக்குங்கள் என்பது மறைமுகமாக தம்மையறியாமல் அந்த மசோதாவுக்கு வைக்கப்படும் தடைக்கல்லாகி விடுகிறதல்லவா?

அங்கனமாயின் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு வேண்டாமா?

இதற்கு ஒரே பதில்; முதலில் இந்திய சுதந்திரம் - அடுத்து மொழிவழி மாநிலம் என்றுதானே வாதாடிப் போராடி வாகை சூடினோம்; என்பதுதான்!

இப்போது நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களுக்கான தொகுதிகளில் (தனித்தொகுதிகள் இருப்பவை தவிர) ஆண்களுக்கு மட்டும் என்று எந்தத் தொகுதியும் இல்லை; ஆண்களில் பிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று தொகுதிகள் வகுக்கப்படவுமில்லை - இந்த நிலையில்

மகளிர்க்குக் கேட்கப்படும் இட ஒதுக்கீடு என்பது; இப்போது இருப்பதில் 33 சதவிகிதம்தான்.

எனவேதான் முதலில் மகளிர்க்கு 33 சதவிகிதம் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்வதையும்; பின்னர் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் என்று படிப்படியாக “உள் ஒதுக்கீடு” செய்து கொள்வதையும்; நெஞ்சார வரவேற்போம்!

முதலில் விருந்துக்கான அழைப்பையேற்று வீட்டுக்குள் செல்வோம்.

பின்னர் விருந்தில் படைக்கப்படும் பண்டங்களில் நம் உடலுக்கு ஒத்துக்கொள்ளக்கூடியது எது; ஒவ்வாதது எது என்பதைச் சொல்லி அதற்கேற்பப் பரிமாறச் செய்வோம்.

26 - 8 - 2005

★★★

குறிப்பு :- “மகளிர் இடஒதுக்கீடு” கோரிக்கை; ஒரு சமுதாயப் புரட்சியென்பதால் “சிந்தனையும் செயலும்” பகுதியில் இடம் பெறுவது முற்றிலும் பொருத்தமான ஒன்றாகும்.

மு.க.

சுயமரியாதை இயக்கத்தின் துவக்க காலத்திலேயே சமுதாயத்தைச் சீரழிக்கும் மூட நம்பிக்கைகளைச் சுட்டிக்காட்டி அவற்றை வேரறுக்கும் விளக்கக் கட்டுரைகள் பலவற்றைத் தாங்கி வெளிவந்த ஏடுகளில் ஒன்றாக “பகுத்தறிவு” ஏடு திகழ்ந்தது. சுவாமி கைவல்யம், சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் போன்ற முற்போக்குச் சிந்தனையாளர்களின் எரிமலை எழுத்துகள், கனல் தெறிக்கும் கட்டுரைகளாக அந்த ஏட்டில் இடம்பெறும். தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுச் சிந்தனைகளைத் தாங்கிய அந்தப் “பகுத்தறிவு” இதழ் போலவே, இப்பொழுது ஆருயிர் இளவல் திரு.

வீரமணி அவர்களை ஆசிரியராகக் கொண்ட “உண்மை” என்ற அறிவுக் களஞ்சியம் நம்மிடையே உலவிக் கொண்டிருக்கிறது.

பணிகள் பல இடையறாது எனக்கிருப்பினும் “உண்மை” இதழைப் படிப்பதில் எனக்குத் தனி ஆர்வம் உண்டு.

தெளிவுற்ற நீரோடை எனத் தக்க கருத்துக்களை வழங்கிக் கொண்டிருக்கும் “உண்மை” இதழில் செப்டம்பர் 1 அன்றைய தேதியிட்டு வெளிவந்த ஒரு கட்டுரையில் இடையிடையே காணப்படும் சில கருத்துக்கள் நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்துவனவாக அமைந்து விட்டதை எடுத்துக்காட்டுவது என் கடமையெனக் கொண்டு அவற்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

“சாமியார்கள் சொல்லித் தருவது தியானமா?” என்ற தலைப்பில் “உண்மை” இதழில் இடம் பெற்றுள்ள அந்தக் கட்டுரையின் தலைப்பே “தியானத்தை ஒப்புக் கொண்டது போலவும் - அதனைச் சாமியார்கள் சொல்லித் தருவதால் “மக்கள் தியானம் என்ற பெயரில் செய்து கொண்டிருக்கிற முறைகள் தவறு” என்று கூறிவிட்டு; “உண்மையிலேயே தியானத்தைச் சரியான முறையில் செய்திருந்தால் நமது நாடு கொஞ்சமாவது எல்லா வகையிலும் முன்னேறியிருக்க வேண்டும்.

உற்பத்தி பெருகி வருமானம் அதிகரித்திருக்க வேண்டும். பஞ்சம், பசி போயிருக்க வேண்டும்” என்று அந்தக் கட்டுரையாளர் திரு. எம். மனோகரன் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

தியானமோ - உடற்பயிற்சியோ - எதுவாயினும் ஒருவனின் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்ததே தவிர; கட்டுரையாளர் கூறுவதுபோல்; அதற்கும் நாட்டின் வருமானம் - பஞ்சம், பசி போன்ற பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படித் தொடர்புபடுத்தவும் இயலாது.

தியானத்தைச் சரியான முறையில் செய்ய வேண்டும் என்று கூறுகிற கட்டுரையாளர், “தியானம் என்று சொல்லி சாமியார்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள்” என்கிறார்.

சாமியார்கள் ஓரிருவரைத் தவிர மிகப் பலர் மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். மக்களில் சிலரும் ஏமாந்து கொண்டுதானிருக்கிறார்கள். தியானத்தின் பெயரைச் சொல்லி மட்டுமல்ல; தெய்வத்தின் பெயரைச் சொல்லியும் ஏமாற்றியும் ஏமாந்துகொண்டுந்தானிருக்கிறார்கள். எனவே; கட்டுரையாளர் “தியானம்” என்பதையே மறுக்கவில்லை என்பதற்கு அடையாளமாக அவரே தனது கட்டுரையில் ஓரிடத்தில் “சிலம்புப் பயிற்சியில் தியானம் உள்ளது” என்று குறிப்பிடுகிறார்.

“தியானம் என்றால் மனத்தை ஒருநிலைப்படுத்துவது என்பதுதான்” என்கிறார்கள். “அதற்காக ஒரு கடவுளை

நினையுங்கள் அல்லது ஒரு புள்ளியை உற்று நோக்கினால் மனம் ஒருநிலைப்படும்” என்று சாமியார்கள் சொல்கிறார்கள்.

இதுவும் அந்தக் கட்டுரையாளர் எடுத்துரைத்துள்ள கருத்துதான் - மனத்தை ஒருநிலைப்படுத்துவது என்பதைக் கட்டுரையாளர் ஏற்றுக் கொள்கிறாரா இல்லையா என்பதற்கான விடையை; இதோ அவரே அளிக்கிறார்.

“வீரக் கலைப்பயிற்சியில் - சிலம்பாட்டக் கம்புகளின் அசைவுகளின் மீது கவனம் செலுத்தினால், மனம் அதில் ஒருநிலைப்படும்”

மனத்தை எப்படி நிலைப்படுத்த முடியும் என்ற முறைகளில்தான் கட்டுரையாளர் வேறுபாடு காண்கிறாரே தவிர, மனத்தை நிலைப்படுத்துவது என்பதை அவர் மறுக்கவில்லை.