உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கட்டுரைகள்

சிந்தனையும் செயலும்

கட்டுரைகள் 23 · 23 / 50

“ஒரு புள்ளியை உற்று நோக்கினால் மனம் ஒருநிலைப்படும் என்கிறார்கள். அப்படி செய்தால் சலிப்புதான் ஏற்படும், மனம் ஒருநிலைப்படாது. ஒரு புள்ளியை ஒரு நாள் அல்லது இரண்டு நாள் அல்லது சில நாட்கள் பார்த்துக் கொண்டிருக்கலாம். ஆண்டு முழுக்க முழுக்க அதையே பார்த்துக் கொண்டிருந்தால் பைத்தியம்தான் பிடிக்கும்”

என்று கட்டுரையாளர் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். தியானம் பற்றிக் கூறுகிற பயிற்சியாளர்கள் யாரும் ஆண்டு முழுவதுமோ அல்லது ஆயுள் முழுவதுமோ ஒரே புள்ளியைப் பார்த்துக் கொண்டு அப்படியே உட்கார்ந்திருக்க வேண்டுமென்று சொல்லவில்லை. அதனால் யாருக்கும் பைத்தியம் பிடிக்கும் என்ற பிரச்சினையே எழாது.

“மனம் நிலைப்பட உடலுக்கு அறிவுபூர்வமான வேலை கொடுக்க வேண்டும்.”

“உடலுக்கு வேலை தராமல் சம்மணம் போட்டு உட்காருங்கள் என்று கூறினால், பல எண்ணங்கள் மனதில் அலையாயுமே தவிர, கண்டிப்பாக மனம் ஒருநிலைப்படாது”

இந்தக் கருத்துகளும் கட்டுரையாளருடையதே ஆகும் - இதிலிருந்து மனத்தை ஒருநிலைப்படுத்தும் வழிமுறையில்தான் அவர் வேறுபடுகிறாரே தவிர, மனத்தை நிலைப்படுத்துதல் என்ற பயிற்சியை அவர் மறுக்கவில்லை என்பது தெளிவாகிறது.

இதுபற்றிய விளக்கத்தை “தியானப் பயிற்சி” யாளரும் “யோகா” ஆசிரியருமான ஒரு நிபுணரிடம் நான் கேட்டபோது அந்த நிபுணர் (நிச்சயம் சாமியாரல்ல) விளக்கியது வருமாறு :-

“மனம் ஒருநிலைப்படச் செய்யும் தியானப் பயிற்சிகள் பல வகைப்படும். இது ஒவ்வொருவரின் வயது, உடல் நிலை, மனநிலை, குறிக்கோள், நம்பிக்கையைப் பொறுத்து மாற்றி அமைக்கப்படுவதுண்டு. எந்த வகை பயிற்சியை செய்தாலும் இறுதியில் மனம் அமைதி அடைந்து ஒருநிலையில் நிற்கும்”

தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் அவர்கள் எனக்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னால் வலியுறுத்தி வழங்கிய யோசனையை ஏற்று அது முதல் யோகா பயிற்சியும், மனத்தை ஒருநிலைப்படுத்தும் தியானப் பயிற்சியும் செய்து வருகிறேன். இடையிடையே சில ஆண்டுகள் அப்பயிற்சியில் தொய்வு ஏற்பட்டிருக்கலாம்; எனினும் அனுபவ ரீதியாக பயன் தெரியத்தான் செய்கிறது இப்போதும்!

நடைப் பயிற்சியும் நீண்ட காலமாக உண்டு எனக்கு. ஆனால் “உண்மை” இதழின் கட்டுரையாளர், நடைப்பயிற்சியைப் பற்றி என்ன கூறுகிறார்?

“நடைப்பயிற்சி என்பது உடற்பயிற்சியே அல்ல. அது அன்றாடம் ஒவ்வொருநாளும் செய்ய வேண்டிய வேலை. இதனை உடற்பயிற்சி என்பது அறியாமை”

கட்டுரையாளரின் இந்தக் கூற்றுக்கு செவிசாய்த்து நடைப் பயிற்சியை ஒதுக்கி விடக் கூடாது. உடலில் எடை கூடினால் இதயக் கோளாறு - இரத்த அழுத்தம் வரக்கூடும். அதற்கு நடைப் பயிற்சியை மேற்கொண்டு உடல் கனத்தைக் குறைக்கச் சொல்லி பிரபல டாக்டர்கள் எல்லாம் அறிவுரை கூறிக்

கொண்டிருக்கிறார்கள். அதனால் நடைப்பயிற்சியை ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் காற்றோட்டமான பெருவெளியில் மேற்கொள்ள வேண்டும்.

“கராத்தே, குங்ஃபூ, குத்துவரிசை, சிலம்பம் ஆகிய எல்லா விளையாட்டுக்களுமே வீரக்கலைதான்” என்று கூறிடும் கட்டுரையாளர், “யோகா” என்பது அ.ஆ. படிப்பு மாதிரிதான். அது மனிதனுக்குப் போதாது என்றுரைக்கிறார். கட்டுரையாளரின் இந்தக் கருத்துக்கு நான் மாறுபட்டவனல்லன். அவர் கருத்து ஏற்கக் கூடியதே என்பது போலவே நானும் யோகா, தியானம் போன்றவை அனைவருக்கும் பயன்படக் கூடியவை என்று கருதமாட்டேனா?

வயது, சூழ்நிலை, உடல்நிலை ஆகியவற்றையும் கணக்கிட்டுக் கொண்டுதான் வீரக்கலை பயில வேண்டும் - “யோகா என்பது வீரக் கலையின் அடித்தளம்” என்று திட்டவட்டமாகக் குறிப்பிடுகிற கட்டுரை ஆசிரியர், “அதை கற்றுக் கொள்வதால் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியமே இல்லை” என்று வீரக் கலைப் பயிற்சியை சிலாகித்துப் பேசுவதை தடையின்றி ஏற்றுக் கொள்ளலாம்.

அதைப் போலவே தியானம், யோகா போன்றவைகளும் உடல்நலத்துக்கு சிறந்த பயிற்சிகள் என்பதை ஒப்புக்கொள்கிறோம். தியானம், யோகாக்களில் இருப்பது போலவே வீரக்கலையிலும் மூச்சுப் பயிற்சி இருக்கிறது என்பதை கட்டுரையாளர் ஒத்துக் கொண்டுள்ளார். மூச்சுப் பயிற்சி சுவாசப்பைகளை விரிவடையச் செய்து தூய்மையாக்கவும் பயன்படுகிறது.

“வீரக்கலை பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் 100 வயது வரை ஆரோக்கியமாக வாழலாம்” என்று கட்டுரையாளர் கூறுகிறார்.

தியானப் பயிற்சி செய்தாலும் அவர்கள் தீர்க்காயுசாக வாழ்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

வீரக்கலையில் வல்லவரான “காமா” என்ற பிரபல பயில்வான் - பார்ப்பதற்கு மலை போல இருப்பார் - அவருக்கு

எலும்புருக்கி நோய் பாதித்து உடல் துரும்பாக இளைத்து மடிந்தார் என்பதும்; தியானக் கலை பயிற்சி பெற்ற இரமண முனிவர் கொடிய ‘பிளவை’ நோயால் மரணமடைந்தார் என்பதும் விதிவிலக்குகளாக இருந்தாலும்; மூச்சுப் பயிற்சியை அடிப்படையாகக் கொண்ட தியானப் பயிற்சியும்; யோகாவை அடிப்படையாகக் கொண்ட வீரக்கலைப் பயிற்சியும் - இரண்டுமே ஒருவரின் வயது, உடல்நிலை, மனநிலை, குறிக்கோள், நம்பிக்கையைப் பொறுத்து - அவருக்குப் பயன்தரக் கூடியதே ஆகும்.

வயது, உடல்நிலை, மனநிலை, குறிக்கோள், நம்பிக்கை இவற்றின் அடிப்படையில் அவரவர் சக்திக்கேற்ப இரண்டில் ஒரு பயிற்சியைத் தேர்வு செய்து கொள்ளலாம். எது உயர்ந்தது என்ற மோதுதல் தேவையில்லை. வயது மற்ற நிலைமைகளைப் பொறுத்து அந்தப் பயிற்சியைத் தேர்வு செய்து கொள்ளலாம். பயிற்சி அளிப்பவர் சாமியாராகக்கூட இருக்கலாம். ஆனால் போலிச்சாமியாராக இருக்கக் கூடாது. இவற்றைத் தவிர கட்டுரையாளரின் மற்ற கருத்துக்கள் ஏற்கக் கூடியவைகளேயாகும்.

3 - 9 - 2005

★★★

விபத்துகள் நாள்தோறும் நடைபெறுகின்றன. இதனை அரசியலாக்க விரும்பவில்லை. விரும்பவும் கூடாது. எனினும் அறவே தவிர்க்க முடியாவிட்டாலும், ஓரளவு விபத்துக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காவது அரசுத் துறைகளும், அதிகாரிகளும் அக்கறை எடுத்துக் கொள்ளலாம்.

பெரும்பாலான விபத்துகள்; பயணங்களில்தான் ஏற்படுகின்றன. அவற்றுக்குக் காரணங்களாக அமைபவை; பயணம் செய்யும் வாகனங்களை இயக்கிடும் நபர்களின் முன் எச்சரிக்கை இல்லாமையும், தேவையற்ற அவசரமும் என்பதைத் தெளிவாகவே அறிய முடிகிறது.

கட்சிகளின் மாநாடுகள், விழாக்கள் கூட்டங்களுக்குச் செல்லவோரும் - கடவுளரை வணங்கிடவும், பிரார்த்தனைகளை நிறைவேற்றவும் கோயில் குளங்கள் திருவிழாக்களுக்குப் போவோரும் அல்லது மணவிழாவுக்கெனப் பயணம் செய்யும் மணமக்கள் - அவர்களுடன் குதித்து விளையாடிக்கொண்டு குதூகலமாகச் சென்றிடும் குழந்தைகளும்; ஒரேநொடியில்; ஆமாம், ஒரேஒரு நொடியில் விபத்துக்கு ஆளாகிப் பிணங்களாக அடுக்கி வைக்கப்படுகிற காட்சிகளைப் படமெடுத்துக் காட்டுகிற பத்திரிகைகளை - தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை காணும்போது நம்மையறியாமல் கண்களை மூடிக் கொள்கிறோம். கலங்குகிறோம்.

“என்னதான் எச்சரிக்கையுடன் சென்று என்ன பயன் ? விதி அப்படியிருக்கும்போது அதை மாற்ற முடியுமா?” இதுபோன்ற பழகிப்போன பழைய காலத்து சமாதானங்கள்

சனாதன முலாம் பூசிக் கொண்டு ஒவ்வொரு விபத்தின் பின்னணியிலும் ஒளித்திடத் தவறுவதில்லைத்தான்!

விழிப்புடன் இருந்து, விழிப்புடன் செயல்பட்டு, விபத்துக்களைத் தவிர்ப்பதற்கு வழிகள் இருக்கும்போது அவற்றை அலட்சியப்படுத்தியோ, புறக்கணித்தோ, நம்மை நாமே பாதிப்புக்கு உள்ளாக்கிக் கொள்வது எந்த வகையில் அறிவுடைமையாக இருக்க முடியும்?