சிந்தனையும் செயலும்
கட்டுரைகள் 21 · 21 / 50
ஆரம்பத்தில் மகன் இங்கர்சால் குறித்து மனவேதனை அடைந்திருந்த தந்தை; அவரது இறுதி நாட்களில் மகன் வழியே தன் மனத்திற்கும் உகந்த வழியென்று மறுமலர்ச்சி பெற்றார் என்பது வரலாறு!
படித்துக் கொண்டே அந்தப் பருவத்திலேயே பகுத்தறிவு வாதங்களின் மூலம் பலரைத் தன் பக்கம் ஈர்த்த இங்கர்சால் முதலில் ஆசிரியராகப் பணியேற்றார். அவரது முற்போக்குச் சிந்தனைகளும், அறிவுப் பிரச்சாரமும், அவருக்குச் சிலரைப் பகைவராக்கிய காரணத்தால் ஆசிரியர் பணியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டவே; அதனால் அவர் மனங்கலங்காமல் சட்டம் பயிலத் தொடங்கினார். திறமைமிக்க வழக்கறிஞராக விளங்கி, குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஓரிரு பெரிய வழக்கறிஞர்களில் ஒருவர் எனப் புகழ் பெற்றார்.
ஒரு நீக்ரோ மீது; பசுவைத் திருடினான் என்று ஒரு வழக்கு - அந்த நீக்ரோவுக்காக வாதாடுவதற்கு யாருமில்லை எனக் கேள்வியுற்று; இங்கர்சால் அவனுக்காகத் தானே வாதாடினார். வாதங்கள், எதிர்வாதங்கள் எல்லாம் முடிந்தன. தீர்ப்பு கூறப்பட்டது. நீக்ரோ விடுதலையானான். இங்கர்சால் அவனை அணைத்து ரகசியமாகக் கேட்டார்.
“இப்போதுதான் நீ விடுதலையாகி விட்டாயே; இப்போதாவது உண்மையைச் சொல் என்னிடம்! நீ பசுவைத் திருடியது உண்மைதானே?”
“ஆமாம் - நான் திருடியது உண்மைதான்! ஆனால் ஒன்று; இந்த வழக்கின் துவக்கத்தில் நான் குற்றவாளிதான். பிறகு; நீங்கள் ஆதாரங்களை அள்ளி வீசி வாதம் நடத்த - வாதம் நடந்த - நான் திருடினேனா என்று எனக்கே சந்தேகமாகிவிட்டது”
நீக்ரோ பசு திருடிய வழக்கு ஒன்றே, இங்கர்சாலின் திறமைக்குச் சான்றாகத் திகழ்கிறது அல்லவா!
நீதிமன்றத்தில் மட்டுமல்லாது - நெஞ்சு வலி நோயையும் பொருட்படுத்தாமல் சுற்றிச் சுழன்று தனது 66வது வயதில் கண்மூடும் வரையில் பகுத்தறிவுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கட்டணம் அளித்து அவரது உரை கேட்க மக்கள் அலைமோதி வருவார்கள். பேசுவதற்கும் அவர் தொகை பெறுவதில் கண்டிப்பானவர். ஆனால் கருத்துக்கள் மக்களிடம் பரவினால் போதும்; தொகை பெரிதல்ல என்று அவர் நினைத்து அவ்வாறே
நடந்து கொண்டதற்கும் அவர் பொதுவாழ்வில் தக்க சான்றுகளாக சில நிகழ்ச்சிகள் உண்டு.
உதாரணமாக கிளரிமண்ட் என்ற ஓர் ஊரைச் சேர்ந்த அறிவியக்கப் பற்று கொண்ட சில இளைஞர்கள் அவரை ஒரு கூட்டத்துக்கு அழைத்தனர். முன்னூறு டாலர்கள் கொடுப்பதாயின் வருகிறேன் என்றார். ஒப்புக்கொண்டு அவரை இளைஞர்கள் அழைத்துப் போனார்கள். ஊர் மக்கள் பலரும் அந்தக் கூட்டத்திற்கு வரப் பயந்த காரணத்தால் கட்டணமாக 28 டாலர்கள் மட்டுமே வசூலாயிற்று. இளைஞர்கள் அதை இங்கர்சாலிடம் சொல்லாமல், அவரிடம் பேசியபடியே அவருக்கு 300 டாலர்களைக் கொடுத்துவிட்டனர்.
இங்கர்சால் துருவித் துருவி அந்த இளைஞர்களைக் கேள்வி கேட்டு, உண்மையான வசூலைத் தெரிந்து கொண்டார். உடனே அந்த இளைஞர்களை அருகே கூப்பிட்டு; “உங்கள் அன்புக்கு நன்றி - ஆர்வத்துக்குப் பாராட்டு - நாணயமான செயலுக்கு வாழ்த்து - இதோ நீங்கள் எனக்குத் தந்த 300 டாலர்களில் 272 டாலர்களை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் - என் பேச்சுக் கேட்க வந்தவர்கள் அளித்த கட்டணத் தொகை 28 டாலர்கள் மட்டும் எனக்குப் போதும்” என்று கூறிவிட்டு விடைபெற்றுப் போனார்.
“அடேயப்பா; இவர் எவ்வளவு பெரிய மனித நேயம் கொண்டவர் - பொருளீட்டுவதற்காகப் பேசும் சொற்பொழிவாளராக இல்லாமல்; கொள்கை பரவுவதற்காகப் பாடுபடுபவர் என்பதால்தான்; அவருக்கு நாம் இந்தக் கூட்டம் நடத்த பட்ட பாடு புரிகிறது”
என்று அந்த இளைஞர்கள் இங்கர்சாலுக்குப் புகழாரம் சூட்டியிருப்பார்கள் அல்லவா?
24 - 8 - 2005
★★★
அரசியல் இயக்கங்களில் இருப்பவர்களில் ஓர் இயக்கத்திலிருப்போருக்கும் இன்னொரு இயக்கத்திலிருப்போருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் - கருத்து மோதுதல்கள் இருப்பினும்; சமுதாய சமத்துவம், சமுதாய முற்போக்கு, சமதர்மக் கொள்கை என்பனவற்றில் ஒருமித்த உடன்பாடான நிலை உருவாக வேண்டும் என்பதை அவரவர் பின்பற்றும் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டே அணுகித் தீர்வு காண வேண்டும். இதனை விருப்பு வெறுப்புக்கு இடம் தராத திறந்த மனத்தினர் ஏற்றுக் கொள்வர்.
சமுதாயப் பிரச்சினைகளை முன்னிறுத்திச் செயல்படும் அரசியல் இயக்கமான நமது இயக்கம்; எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே 1929 ஆம் ஆண்டில் செங்கற்பட்டு சுயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியார் முன்னிலையில் பெண்களுக்குச் சொத்தில் சம உரிமையை உறுதிப்படுத்துகிற சட்டம் கொண்டுவர வேண்டுமென்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்தத் தீர்மானத்தை 60 ஆண்டு கழித்து தமிழகச் சட்டப்பேரவையில் 1989 ஆம் ஆண்டு நான் முதலமைச்சராக இருந்தபோது சட்டமாக நிறைவேற்றி, நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளோம்.
மக்களாட்சி முறையில் ஓர் ஆட்சியில் எல்லா மக்களும் எல்லா உரிமைகளும் பெற்றவர்களாக விளங்க வேண்டும் என்பதிலும் - பல்லாண்டு காலமாக ஏற்படுத்தப்பட்ட பின்னடைவு
காரணமாகப் பள்ளத்தில் கிடப்போரையும் கை தூக்கிவிட்டு, தேவையான உரிய சலுகைகளை வழங்கி, கரைசேர்க்க வேண்டுமென்பதிலும் - மக்கள் என்றாலே ஆண் - பெண் இருபாலாரையும் குறிப்பிடும் சொல்தான் என்ற அடிப்படையில் ஆணுக்குள்ள உரிமைகளைப் பெண்ணுக்கு மறுக்கக்கூடாது என்பதிலும் சமுதாய அக்கறை கொண்டோர் ஆர்வங்காட்டியே செயல்படுவார்கள் - செயல்பட்டும் செய்கிறார்கள்.
மத்திய ஆட்சி அளவில் மகளிருக்கான உரிமைகள் பற்றி விதிமுறைகள், சட்டங்கள் வருகிறபடி வரட்டும்; மாநில அளவில் உள்ள அதிகார எல்லைக்குள் மகளிருக்கு உள்ளாட்சி மன்றங்களில், மற்றும் அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு தருவோம் என அறிவித்து, அதனை அமல்படுத்தியுள்ளதும் நமது ஆட்சிப் பொறுப்பில் தமிழ்நாடு இருந்தபோதுதான் என்பது எவரும் மறுக்க இயலாத உண்மையாகும்.
மகளிர் உரிமையுடன் அவர்தம் நல்வாழ்வு போற்றும் தொடர் சாதனைகளில் ஒன்றுதான் 1989ல் நமது ஆட்சியில் தர்மபுரி மாவட்டத்தில் என்னால் தொடங்கி வைக்கப்பட்ட “மகளிர் சுய உதவிக் குழு” என்பதுமாகும்.
இன்றைக்கு இந்தியத் திருநாட்டின் மூலை முடுக்கெல்லாம் முழங்கப்படுகிற கொள்கை முரசமாக - நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிர்க்கு 33 சதவீத இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்ற ஒலியையே கேட்க முடிகிறது.
ஏன்; தனியாக மகளிர்க்கு இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வர வேண்டும்? இப்போது மகளிர் அந்தப் பொறுப்புகளுக்கு போட்டியிட முடியாதா? சட்டம் ஏதாவது தடுக்கிறதா?
சட்டம் தடுக்கவில்லை! சட்டமன்ற வேட்பாளராகவோ, நாடாளுமன்ற வேட்பாளராகவோ; தேர்தலில் ஒரு ஆண் போட்டியிடுவதைப்போல; இப்போது ஒரு பெண்ணும் போட்டியிடலாம்; அரசியல் சட்டம் அதைத் தடுக்கவில்லை. ஆனால் ஆணாதிக்கம் அவர்களைப் போட்டியிட அனுமதிக்கவில்லை. ஆணாதிக்கத்தின் இந்தச் சனாதனச்
சம்பிரதாயத்துடன் எவ்வளவு காலத்துக்குச் சண்டை போட்டுக் கொண்டிருக்க முடியும்; அதனால்தான் மகளிர்க்கு இத்தனை இடம் என்று ஒதுக்கீடு செய்து, அந்தச் சட்டப்படி அந்த இடங்களில் மகளிர் மட்டும்தான் போட்டியிட முடியும் என்று செய்துவிட்டால்; அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைக்கான அடிக்கல் நாட்டும் திருப்பணி நிறைவேறத் தொடங்கிவிடும்.
ஏற்கெனவே தலித் எனப்படும் தாழ்த்தப்பட்ட பெருங்குடி மக்களை; இந்த உரிமைகளைப் பெறக் கூடியவர்களாகக் கைதூக்கி விட இருக்கின்ற தனித் தொகுதி முறை எல்லா மட்டத்திலும் அரசியல் சட்ட ரீதியாக அமைக்கப்பட்டிருப்பதை “மாதிரி”யாகக் கொண்டு; அந்தப் பழைய நிலைக்குப் பங்கமேதும் நேராமல்; இப்போது கோரிக்கையாக வைக்கப்படுகிற மகளிர் இடஒதுக்கீட்டை ஏற்றுக் கொண்டு அதற்கான துவக்கத்தை நடத்த சமூகப் பிரக்ஞையுள்ள, உரிமைகள் வழங்கப்படுவதில் உள்ள நியாயங்களை நிலைநாட்டுவதற்கு நினைத்திடும் இயக்கங்கள் முன்வரவேண்டும்.
பொதுக்கருத்து உருவாக வேண்டும் என்று பொறுமையுடன் காத்திருப்பது பொறுப்புடையோர் செயல் எனினும்; கோரிக்கையைத் தள்ளிப் போடுவதற்காகக் 'காத்திருப்பு' என்பது ஏற்க இயலாத ஒன்றாகி விடும்.
சட்டம் நிறைவேற்றிட தேவையான வாக்குகள் கிடைக்கா விட்டால்கூட இந்த மசோதாவுக்கு ஆதரவு தராதவர்களை மகளிர் சமுதாயத்துக்கு அடையாளம் காட்டலாம் அல்லவா?
பொதுக்கருத்து பற்றி பிரெஞ்சு நாட்டுப் பேரறிஞரும் - பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்து; பிரெஞ்சுப் புரட்சிக்கான எழுச்சிப் பாதையை தனது எழுத்து மூலம் வகுத்துக் கொடுத்தவர்களில் ஒருவரும், “வால்டேர்” காலத்தவருமான “ரூசோ” என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?
