சக்கரவர்த்தியின் திருமகன்
கட்டுரைகள் 9 · 9 / 14
“அயோத்தி வேந்தன் தசரதன், அறுபதினாயிரம் மனைவியரை மணந்து வாழ்ந்ததாக ராமாயணம் கூறுகிறதே; இது அடுக்குமா? பெண்ணுலகம் அங்கீகரிக்குமா? என்றெல்லாம் கேள்வி கேட்டு அங்கலாய்த்துக் கொள்கிறார் ஈ.வெ.ரா! ராமாயணம் இயற்றப்படும் காலம் வரை இல்வாழ்க்கையில் ஒருத்திக்கு ஒருத்தன் என்ற கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அது போல ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கொள்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆம், பெண் கற்பு வற்புறுத்தப்பட்டதேயன்றி ஆண் கற்பு வற்புறுத்தப்படவில்லை.
இந்தக் கொடுமைக்கு எதிராக ஆண் கற்பைப் போதிக்கிறது ராமாயணம்.
“தந்தை தசரதன் அறுபதாயிரம் மனைவியரை மணந்தவன் - மைந்தன் ராமனோ ஏகபத்தினி விரதன். இல்வாழ்க்கைப் பண்பில் எத்தகைய புரட்சிகரமான மாற்றம்!”
மேற்கண்ட இவ்வளவும் எழுதியிருப்பது தோழர் சிவஞானம் தான்! ராமனும் சீதையும் வாழ்ந்த வாழ்க்கைதான் இல்வாழ்க்கைப் பண்பாம்! புரட்சிகரமான மாற்றமாம்!
எவனோ, ஏதோ சொன்னான் என்று, மனைவியை கற்புக்கேடு காட்டிலே கொண்டு போய்விட்டு விட்டு, நாட்டை ஆண்டு கொண்டிருந்தானே ராமன் அவன் இல்வாழ்க்கைப் பண்பின் இலக்கணமாம்! காட்டிலே லவன் என்ற மகனைப் பெற்று, பிறகு குசன் என்ற மகனையும் ரிஷி அருளால் பெற்று கணவனிடம் சென்று வாழ நினைக்காமல் காட்டிலேயே காலங் கழித்தவள் மாதர் வாழ்வில் புரட்சிகரமான மாற்றத்தைச் செய்த புனிதவதியாம்! புலம்புகிறார் சிவஞானம்; விபீஷண போதை தலைக்கேறிவிட்ட காரணத்தால்!
தம்பி இலக்குமணன், அழகு மனைவி ஊர்மிளாவை அரண்மனையிலே விட்டுவிட்டு, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியாக காட்டிலே வாழ்ந்து அண்ணன் அண்ணி படுத்திருக்கும்போது காவலும் காத்து நின்றானாம்! அதைப் பற்றி ராமனோ சீதையோ கவலைப்பட்டிருந்தால் இலக்குவன் காத்திருக்க, அவர்கள் களிப்பில் ஆடவும், கண் அயரவும் மனம் வந்திருக்குமா? இல்வாழ்வின் பண்பாம் இது? இனித்தவாயனும் ஏற்க முடியாத இலக்கணம்! பாதகப் பண்பு சிவஞானத்தின் வாதம் சரிதானா என்று ஆச்சாரியாரையே கேட்போம்!
“ஏகபத்தினி விரதத்தை போதிக்கவே ராமாயணம் எழுதப்பட்டது என்று சிவஞானம் கூறுகிறாரே, அப்படியானால் ஆச்சாரியாரே! ராமனை விஷ்ணு அவதார மென்றீர்கள். நீங்கள் அந்த விஷ்ணு உலகத்திற்கு ஏக பத்தினி விரதத்தை போதிக்கப் புறப்பட்டது உண்மை என்றால், அதற்காகவே ராமவதாரம் எடுத்தார் என்பது சரி என்றால், அதே விஷ்ணு, பூதேவி, ஸ்ரீதேவி என்ற இருவரைத் தழுவுவானேன்? அந்த விஷ்ணு எடுத்த கிருஷ்ணாவதாரத்திலே அளவில்லா கோபிகைகளுடன், குலவுவானேன்?
பாமா, ருக்மணி, ராதா முதலியோரின் ஆசைநாயகனாக இருப்பானேன்?” இப்படி யெல்லாம் ஆச்சாரியாரை நோக்கி கேள்விகள் எழுவதற்குத் தான் சிவஞானத்தின் கட்டுரை பயன்படும்.
ராமாயணத்தின் மூலம், கற்பு சம்மாக்கப்பட்டு ஏகபத்தினி விரதம் பாதுகாக்கப்படுகிறது என்று வாதாடுகிற சிவஞானம், பாரதத்தின் மூலம் - அய்வருக்கும் தேவியாக இருந்தவளின் வரலாறு மூலம் - என்ன பாடம் உலகுக்கு போதிக்கப்படுகிறது என்று கூறுவாரோ, யார் கண்டது? இருதார மணம் புரிந்துகொண்ட குமரக் கடவுளின் கதை மூலம் என்ன பாடம் கிடைக்குமென்று கூறுவாரோ தெரியவில்லையே! இந்திரன் என்று தெரிந்தும் அவனோடு கூடி நின்றாள் அகலிகை என்று ஆச்சாரியார் எழுதியிருக்கிறார் - வால்மீகியும் எழுதியிருக்கிறார்.
அந்தத் தவறுடைய தவ முனிவன் பத்தினியை சாப விமோசனம் செய்து வணங்கி நின்றான் ராமன் - என்கிறதே ராமாயணம்; அந்த ராமாயணமா கற்பு நிலையைப் பாதிக்கும் ராமனைக் கதாநாயகனாகக் கொண்டது என்று கூறுகிறார் சிவஞானம்!
**அந்தோ! அந்தோ! வெட்கம் வெட்கம்!**
“ராமன் வட நாட்டான்; ஆகவே தமிழ் நாட்டார் அவனை வழிபடக் கூடாது என்று வம்பு பேசுவது நிறவெறிப் பேயாட்டமே யன்றி அறிவு வழிப்போராட்டமன்று.”
இந்தப் பொன்னான(?) கருத்தையும் வீசியிருப்பவர் தோழர் சிவஞானம் தான்! மனிதன் தெய்வீக சக்தி பெற்று வழிபடுதற்குரியவனாகிறான் - அப்படி ஆனவன் ராமன் - அவன் வடநாட்டானாயிருந்தால் என்ன? வணங்குவதில் என்ன தவறு?
இப்படிக் கேட்கிறார் சிவஞானம், பொட்டி ஸ்ரீராமுலு தெலுங்கு நாட்டவர் என்பதற்காக அவர் தியாகத்திற்குத் தரவேண்டிய மதிப்பைத் தர மறுக்கும் சிவஞானம், நம்மைப் பார்த்து “நிற வெறிப் பேயாட்டம்” ஆடுகிறோம் என்கிறார்! நல்லவேளை, இதன் மூலமாகாவது, வேறு வேறு “நிறங்கள்” என்ற உண்மையை ஒத்துக் கொள்கிறாரே!
வடநாட்டு ராமனை வணங்கினால் என்ன என்று கோபத்தோடு கேட்கும் சிவஞானம், தெய்வமாகப் போற்றப்படும் கண்ணகியை வணங்கும் வடநாட்டார் யாருமில்லை என்பதை வெட்கத்தோடு ஒத்துக் கொள்வாரா? கண்ணகியின் புகழ் தமிழகத்திலேயே சரியாகப் பரவ முடியாதபடி - ஆரிய சீதை அடியெடுத்து வைத்து விட்டாள் என்பதை சிவஞானங்கள் மறுக்க முடியுமா?
வடநாட்டு ராமனை வணங்க மறுப்பது நிறவெறி என்கிற சிவஞானம், மேல்நாட்டு அப்போலோ, ஆர்குஸிஸ் போன்ற தேவதைகளை நிறவெறியின்றி வணங்கத் தயார்தானா?
கடைசியாக, சிவஞானம், ராமனைக் கடவுளாக்கியது கம்பரல்ல - முதலில் சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் கூட ராமனைக் கடவுளெனக் குறித்திருக்கிறார் என்கிறார்.
யார் முதலில் சொன்னால் என்ன; ராமன் கடவுள் அல்ல; ராமாயணம் பண்புள்ள காவியம் அல்ல - அதை நம்பி மக்கள் தங்கள் மதியை இழக்கக் கூடாது என்பது தான் அறிவுடையோர் வாதம்!
இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும் சிவஞானங்கள்! இளங்கோவடிகள் ராமனைப் பற்றி குறிப்பிடும் முறையும், கம்பர் குறிப்பிடும் முறையும் வேறு வேறானவை !
கம்பர், தானே ஆழ்வாராக மாறி ராமக்கடவுளைத் தொழுது பாடுகிறார். இளங்கோவடிகளோ, அந்தக் காலத்து மக்கள் உள்ளத்தை, வாழ்க்கை நிலையை நம்பிக்கைகளை, ஆசிரியர் பாடும் குறவைப் பாட்டு மூலமாகச் சொல்லுகிறார். இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் பாடுவதற்கு முன்பே ராமகதை இருந்திருக்கிறது - ஆனால் அவர் கம்பரைப்போல ராமாயணம் எழுத எண்ணவில்லை; கண்ணகி என்ற தமிழச்சியின் மாண்புக்கோர் நூல் யாத்திருக்கிறார். கம்பரோ, தமிழகத்து சரித்திரக் கதை எதுவும் கிடைக்காதவர்போல வடமொழி வால்மீகி நூலுக்கு தமிழ் மெழுகு கொடுத்துப் பழி தேடிக் கொண்டிருக்கிறார், ராமனைக் கடவுளாக்கித் தொழுவதின்மூலம்!
தமிழகத்து வரலாறு எதையும் எழுத வால்மீகி ஆசைப்பட்டாரில்லை! ஆனால் கம்பரோ வடநாட்டு சரிதை எழுதியிருக்கிறார்!
“ஏகபத்தினி விரதம்” என்ற கொள்கை வலியுறுத்தப்பட கற்பு இலக்கணம் சொல்லப்பட, சிலப்பதிகாரத்தைவிட ராமாயணம் தகுதி வாய்ந்தது என்று சிவஞானங்கள் கருதுகிறார்கள். இது வடநாட்டுக்கு காவடி தூக்கும் பரம்பரைப் பழக்கத்தின் பாற்பட்ட கருத்து! இராவணன் காலத்திலே கிளம்பிய விபீஷணக் கொள்கை! இந்தக் கொள்கை என்று ஒழியுமோ? எப்போது நாடு நலம் பெறுமோ?
ராமபக்தர்கள் தெளிவு பெறுவது வெறுங்கனவு தானோ? காலந்தான் பதில் கூறவேண்டும்!
ராமர்,லட்சுமணர்,சீதை மூவரும் கானகத்தில் தங்கள் வாழ்க்கையைத் துவங்கிவிட்டனர். இங்கே அயோத்தியில், தசரதன் புத்திர சோகத்தில் புழுவாய்த் துடிக்கிறான். அந்தச் சமயத்தில் அவனருகே இருப்பது கவுசல்யை என்றும் ஆச்சாரியார் குறிப்பிடுகிறார்.
“அரசன் இன்னது செய்வது என்று தெரியாமல் தத்தளித்து அரை ஜீவனாக இருக்கும் சமயத்தில் கவுசல்யை தனக்குத் தோன்றிய நியாயத்தை யெல்லாம் சொல்லித் தசரதனுடைய குற்றத்தை வெகு கடுமையான முறையில் குத்திக் குத்திக் காட்டிப் பேசினாள்.”
கவுசல்யாவின் பதிபக்தி எத்தன்மைத் தூய்மை யுடையதாயிருக்கிறது பாருங்கள். உயிருக்கே மன்றாடி, அரை ஜீவனாகக் கிடக்கிறானாம் மன்னன். வெகு கடுமையாக குத்திப் பேசினாளாம் கவுசல்யாதேவி! ராமனின் தாயார். அது மட்டுமா? - மகனைக் காட்டுக்கு அனுப்பி விட்டு மணாளனையும் மரணப் படுக்கையிலே காணும் அந்தக் கற்புக்கரசி(?) கணவனிடம் என்ன சொல்லிப் புலம்புகிறாள்; ஆச்சாரியாரே எழுதியிருக்கிறார் படியுங்கள்.
“எனக்கு யார் கதி? ஸ்திரீக்குப் புருஷன்தான் கதி. நான் பெற்ற புருஷனோ வேறு மனைவியுடன் சேர்ந்து கொண்டு என்னைக் கைவிட்டுவிட்டான். என் மகனோ காட்டுக்குப் போய்விட்டான். என் பிறந்தகத்துப் பந்துக்கள் தூர தேசத்தில் இருக்கிறார்கள். புருஷன் உயிரோடிருக்க அங்கேபோய் நான் எப்படிப் பந்துக்களை அண்டிப் பிழைக்க முடியும்? நிர்க்கதியாக நிற்கிறேன். உமக்கு இதைப்பற்றி யெல்லாம் என்ன கவலை?”
