சக்கரவர்த்தியின் திருமகன்
கட்டுரைகள் 10 · 10 / 14
தன்னைப் பற்றியே கவலைப்பட்டுக் கொள்ளும் தாம் பத்தினி கவுசல்யா தேவி, கைகேயியைவிட எந்த விதத்தில் உயர்ந்தவள் என்று ராமாயணக் கதையையே ஆதாரமாக வைத்துக் கேட்கிறேன். பந்துக்கள் வீட்டில் போய் அண்டிப் பிழைக்கலாமென்றால், அதற்கும் கணவன் உயிரோடிருந்து தொலைகிறானே என்று ஒரு ராஜ பத்தினி புலம்புகிறாள் என்றால், அவளது பண்பின் அளவு எத்தகையது என்பதை இயம்பவும் வேண்டுமோ?
தசரதனோ, புத்திர சோகத்தால் தான் வருந்துவதற்குக் காரணம் இளம் வயதில் தனக்குக் கிடைத்த சாபமே என உறுதியாக எண்ணுகிறான்.
ஓசை கேட்டு அம்பு எய்வதிலே அவன் வல்லவனாம். வாலிப வயதில் ஒருநாள் வனாந்திரப் பகுதியில் ஒருவன் குடத்தில் தண்ணீர் முகப்பதை யானை நீர் குடிக்கும் ஓசையெனக் கருதி அம்பு பூட்டினான். அந்த அம்பு மனிதனைக் கொல்லவே அந்த மனிதனின் பெற்றோர் அப்பெய்திய தசரதனும் புத்திர சோகத்தால் வருந்துக எனச்சாபமிட்டுச் செத்தனராம். ஆகவே தசரதனது, வாட்டத்திற்கு காரணம் கைகேயி அல்ல; இளமையிற் பெற்ற சாபமே - என்பதும் தெளிவாகி விட்டது.
ஓசையைக் கேட்டு அம்பெய்து வெல்லக்கூடிய அத்தனை சிறப்புடைய வீரன் தசரதனுக்குத்தான், ஒரு போர்க்களத்திலே கைகேயியின் துணை அவசியமாகப் போய்விட்டது! பாவம்; அவனால் ஓசையைத்தான் கேட்க முடியுமே தவிர; அந்த ஓசை யானையின் ஓசையா? - தண்ணீர் முகக்கும் பானையின் ஓசையா? - என்று கண்டுபிடிக்கத் தெரியாதுபோலும்! பால்யத்தில் தான் பெற்ற சாபத்தின் சாயலே இந்த சங்கடம் என்ற கதையை கவுசல்யாவிடத்திலே அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே.
“மார்பு அடைக்கிறது! இனி எதும் மிச்சமில்லே கவுசல்யே! நீ என் கண்களுக்குத் தெரியவில்லை. மரணம் நெருங்குகிறது - அருகில் வா! விளக்கில் எண்ணெய் வற்றிப் போயிற்று - கவுசல்யே! சுமித்திரே!” எனக் கூவினான். வர வர பேச்சு அடங்கிப்போய் அன்றிரவே உயிர் நீத்தான் அரசன்.
இதையும் ஆச்சாரியார் விபரமாக எழுதியிருக்கிறார். இன்னும் ஒரு வேதனையான வேடிக்கையையும் எழுதியிருக்கிறார் பாருங்கள். உயிர்நீத்த விஷயம் பக்கத்திலிருந்த கவுசல்யை சுமித்திரைக்குக்கூடத் தெரியவில்லை.
காரணம் என்னவாம்? கூறுகிறார், படியுங்கள்.
“சோகத்தாலும், கண் விழித்த களைப்பாலும், அந்தப்புரத்தில் ஒரு மூலையில் அயர்ந்து கிடந்தார்கள்.
மணவாளன், “மரணம் நெருங்கிவிட்டது - எல்லோரும் அருகே வாருங்கள் - கவுசல்யே! சுமித்திரே! விளக்கில் எண்ணெய் வற்றிவிட்டது!” என்று கதறியிருக்கிறான். பேச்சும் வர வர அடங்கி விட்டது - என்று அவனது மரணப்படுக்கையின் இறுதிக் கட்டம் வர்ணிக்கப்படுகிறது. அந்த வேதனைப் படலத்தின்போது, கவுசல்யா தேவியும், சுமித்திராதேவியும் கண்விழித்த களைப்பால் அயர்ந்து போய்விட்டார்களாம்! தசரதன் உயிர் நீத்த விஷயம் பொழுது விடியும்வரையில் அவர்களுக்குத் தெரியாதாம்!
பொழுது விடிந்த பிறகும் எப்படித் தெரிகிறது? ஆச்சாரியாரே அதையும் எழுதியிருக்கிறார்; பாருங்கள்!
“பொழுது விடியும் காலத்தில் சூதமாகதர்கள் அந்தப்புர வாயிலில் வழக்கம்போல் கூடி அவரவர்களுடைய கிரமப்படி அரசனை எழுப்ப - சுப்ரபாதம் பாடவும், வாத்தியம் வாசிக்கவும் செய்தார்கள். அரசன் எழுந்ததாக காணவில்லை. பணியாட்கள் வெகு நேரம் காத்திருந்துவிட்டு, ‘இன்று அரசர் ஏன் இன்னும் எழவில்லை’ என்ற சந்தேகத்துடன் உள்ளே பிரவேசித்தார்கள். அரசன் உயிரற்றுக் கிடப்பதைக் கண்டார்கள். பிறகு அரண்மனை முழுதும் விஷயம் தெரிந்து ஒரே துயரக்கடலாயிற்று.”
அயோத்தி வேந்தன் - பட்டத்தரசி மூவரும், ஆசை சரசிகள் அறுபதினாயிரவரும் கொண்ட தசரத மகா ராஜன் - இரவு வெகுநேரம் வரையிலே, யாரும் கவனிக்காத அளவுக்கு பிணமாகக் கிடந்தான் என்பது பரிதாபத்திற்குரிய விஷயம்தான். இப்படி பல மனைவிகளை கட்டிக்கொள்வதிலே வருகிற ஆபத்தே இதுதான்!
மூத்தவள் கவனிப்பாள் என்று இளையவள் தூங்க - இளையவள் கவனிப்பாள் என்று அடுத்தவள் தூங்க - இப்படி அன்பு மனைவிகள் அனைவரும் அரசனின் மரணப் படுக்கையருகே போட்டி போட்டுக் கொண்டு தூங்கியதால்தானே அவன் தூங்க ஆரம்பித்த நீண்ட தூக்கத்தை யாரும் கவனிக்க முடியாமற் போயிற்று!
இன்ப கேளிக்கை ஒன்றுக்காக மட்டுமே, இளைய மனைவி கைகேயி இருந்தாள். ராமனுக்கு ‘முடிசூட்ட நாள்’ குறிக்கப்பட்டிருந்த முதல்நாள் இரவு, கைகேயியிடம் காம போதையில் தசரதன் உளறினான் என்று ஆச்சாரியாரே எழுதியிருக்கிறாரே; அந்தக் காம போதைகூட - புலன்களை அடக்கும் திறமையால் வந்ததுதான் போலும்! புத்திர சோகத்தை தாங்கமுடியாமல் இறந்து விட்டானே; அந்த நிகழ்ச்சியும் புலன்களை அடக்கும் திறமையால் ஏற்பட்டதாகத்தான் ஆச்சாரியார் கூறுவாரோ என்னவோ?
“கண்ணில் பட்ட காரிகையாம், இளமை பொங்கும் கைகேயி எனும் அழகியாள் மனதைப் பறிகொடுத்து, வாலை அடக்கிப் பேசமுடியாமல் அவளுக்குப் பிறக்கும் மகனுக்கே நாடு தருவேன் எனக் கூறி, அவளுடன் தினந்தோறும் உடல் சுகம் அனுபவித்து, ‘ராமன் காட்டேகினான்’ என்ற சொல் செவி புகுந்ததும் சிந்தைகெட்டு செத்து மடிந்த தசரதன்” புலன்களை அடக்கியவன் என்று கூறுவது பொருந்துமா என்று பூணூல் வேந்தர் ஆச்சாரியாரைக் கேட்கிறேன்.
சித்ரகூட மலைச் சாரலிலே, ‘சீதா! அதோ, பறவைகள் விளையாடுவதைப் பார்! மலைப் பாறைகளைப் பார்! அவற்றில் தாதுக்கள் நீலமும், மஞ்சளும் சிகப்புமாக எப்படி மின்னுகின்றன! வனத்தில் செடிகளையும் கொடிகளையும் பார்! புஷ்பங்களைப் பார். நாம் என்னவோ எண்ணினோம்; இந்த வனவாசம் எவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கிறது. பட்டண வாசத்தைவிட இந்த வனவாசம் எவ்வளவு இன்பமாயிருக்கிறது” என்றெல்லாம் ஆச்சாரியார் எழுதியிருக்கிறபடி, சக்கரவர்த்தி திருமகனும் ஜானகியும் உரையாடிக் கொண்டு, இன்பமாகப் பொழுது போக்கிக் “கஷ்டப்பட்டுக்” கொண்டிருந்த சமயத்திலே பரதனும், மூன்று அரசியரும், மற்றவர்களும் வந்து சேர்ந்தார்கள்.
போருக்கு வருகிறானா என்று கூடத் தெரிந்துகொள்ள முடியாமல் அவசரப்பட்டுக் குதிக்கிறது லட்சுமண அவதாரம். வந்த பரதனும் மற்றவரும் ராமனைக் கண்டு வருந்தினார்கள். தசரதன் இறந்த செய்தி அவர்கள் சொன்ன பிறகுதான் மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமருக்குத் தெரிகிறது! தெரிந்த பிறகு, தந்தைக்கு செய்ய முடிக்கவேண்டிய கடமைகளைச் செய்து முடித்தார்கள்.
அங்கு மந்தாகினி என்னும் நதியிலேதான் அவர்களுக்கு வேண்டிய தண்ணீரை வழக்கமாக லட்சுமணன் எடுத்துச் செல்வான் என்று கேள்விப்பட்டதும் கவுசல்யா தேவியும் - சுமித்திரையும் அழுதார்களாம். கவுசல்யை ஏன் அழுதிருப்பாள்? அரண்மனையிலே கேட்ட நேரத்திலே தண்ணீரும் பன்னீரும் கிடைக்குமே இங்கே என் மகன் ஆற்றுத் தண்ணீர் குடித்துக் கஷ்டப்படுகிறானே யென்று அழுதாள் போலும்!
சுமித்திரை அழும்போது, கவுசல்யை என்ன சொல்லித் தேற்றுகிறாள் தெரியுமா? ஆச்சாரியார் நடையிலேயே படியுங்கள்.
“சுமித்திரையே! என் மகனுக்காக, இந்தத் துறையில் உன் மகன் தினமும் ஆற்றில் இறங்கிச் சுத்தமான ஜலம் ஆசிரமத்துக்கு எடுத்துப்போய் வைக்கிறான், பார்த்தாயா? அண்ணனுக்காக எந்த வேலையும் சந்தோஷமாக செய்வான் உன் மகன்!”
என்று கவுசல்யை கூறி அவளை சமாதானப்படுத்துகிறாள். இலக்குமணனின் பெருமையைக் கூறுவதுபோல், அவன் கஷ்டங்களை அவனது தாயிடம் மறைக்க எண்ணுகிறாள் மூத்தவள்.
தண்ணீர் எடுத்தல் முக்கிய வேலைகளைக்கூட இலக்குமணனே செய்திருக்கிறான் என்று எண்ணும் போது, சீதையைப் பற்றி நாம் என்ன கருதுவது என்றே புரியவில்லை. ராமனின் அணைப்பிலேயே ஈடுபட்டு ஆரண்ய சுகத்தை அனுபவித்த சீதாதேவி, தன் ‘கொழுந்தனார்’ ‘லட்சுமணன்’ குடமெடுத்துத் தண்ணீர் கொண்டுவரச் செல்லும் நிலைமையை எப்படித்தான் அனுமதித்தாளோ தெரியவில்லை. உடல் நலமில்லாது வருந்தும் பெண்கள் கூட, தங்கள் வீட்டு ஆண்மக்கள், அடுக்கனை வேலைகள் செய்வது, தண்ணீர் கொண்டு வருவது போன்ற பணிகளைச் செய்ய அனுமதிக்க மாட்டார்கள், சீதாதேவியோ கற்பின் அணிகலம்!
பழம் பாரதத்தின் பெண்மைச் சிறப்புக்கோர் எடுத்துக்காட்டாம்! அவள் இம்மாதிரி வேலைகளை இலட்சுமணன் செய்யும்போது பார்த்துக் கொண்டிருந்தாளாம்.
அது நிற்க, பரதனும் ராமனும் கானகத்தில் சந்தித்த கட்டமே மிகப்பெருமை வாய்ந்த கட்டம் என்று புகழ்கிறாரே ஆச்சாரியார் -அந்தக் கட்டத்தை சிறிது கவனிப்போம்.
“பரதன் ராஜ்யத்தை ஆளவேண்டும்; ராமன் பதினான்கு வருடம் காட்டேக வேண்டும்” என்பதுதான் தந்தையின் கட்டளை, இந்த வரிகளை நன்றாக ஞாபகம் வைத்துக்கொண்டு இந்தக் கட்டத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். பரதன், ராமனைத் திரும்ப அழைக்கும் போது ராமன் என்ன பதில் சொல்லுகிறான் தெரியுமா? “தந்தை, உனக்கு ராஜ்யப் பொறுப்பைத் தந்தார் - எனக்கு வனவாசம் தந்தார். இப்படி நம்மிருவருக்கும் வாழ்க்கையை வகுத்துக் கொடுத்து மரணமடைந்தார்.”
ராமனுடைய உள்ளத்திலே தசரதனைப் பற்றிய ஆத்திரம் எவ்வளவு இருந்திருக்கிறது என்பதைப் பாருங்கள். ஒருவனை நாடாளவும் இன்னொருவனைக் காட்டாளவும் செய்து, இருவருக்கும் தந்தை, வாழ்க்கையை வகுத்துக் கொடுத்துவிட்டார், என்று எரிச்சலை, கேலியோடு கலந்து வழங்குகிறான் ராமன்.
ஜாம்பாலி என்பவர், ராமனை எப்படியாவது அயோத்திக்கு வரவேண்டும் என்று கோரியபோது சொல்லுகிறான்;
“சத்தியத்தை நீர் ஒரு பொருட்டாக மதிக்காமல் நாஸ்திகம் பேசுகிறீர். சத்தியத்தைவிட மேலான ஒரு பொருள் உலகத்தில் இல்லை” இப்படிச் சொல்வது ராமன். தந்தை பரதனுக்கு முடிசூட்ட கட்டளையிட்ட பிறகு அதை மீறுவது சரியல்ல என்கிறான். சத்தியத்தை விட மேலானது எதுவுமில்லை; அதை மீறுவது நாஸ்திகம் என்கிறான். அப்படியானால், கேகய மன்னனுக்கு அளித்த வாக்குறுதியை - சத்தியத்தை - மீறுவது மட்டும் நாஸ்திகமில்லையா? அந்த தசரதனை தர்ம ராஜன் என்றும் நேர்மையான வேந்தன் என்றும் போற்றுவதிலே உண்மையிருக்கிறதா?
ஆச்சாரியார் இதற்கு பதில் சொல்ல முன் வருவாரா? ராம கதையை தலையிலே தூக்கி வைத்துக்கொண்டு பரதனைப்போல் ஆடுகிறவர்கள் இருக்கிறார்களே அவர்களைக் கேட்கிறேன் - தசரதன் சத்தியம் தவறியவன்தான் என்பதை மறுக்க முடியுமா இவர்களால்? ஆட்டு மந்தைபோலக் கூடி, “கோவிந்தா” போட்டுப் பயனில்லை. நாம் கூறும் கருத்துக்களை நேர்மையாக எதிர்த்திடும் நாதிகமுள்ளவர்கள் முன்வர வேண்டுகிறோம்; தசரதன் சத்தியம் தவறிய நாஸ்திகனா இல்லையா என்பதை விளக்கிட வேண்டும் - வருவார்களா?
- துணிவு உண்டா? ஆதாரம் இருக்கிறதா?
நிற்க, ராமனும் சத்தியத்தை எப்படிக் காப்பாற்றினான் என்ற அழகை சற்று கவனிப்போம்.
