சக்கரவர்த்தியின் திருமகன்
கட்டுரைகள் 11 · 11 / 14
பரதன் அழைத்தான் - ராமன் வர மறுத்துவிட்டான். வசிஷ்டர் அழைத்தார் - வர மறுத்துவிட்டான், ஏன்? ராமனுக்கு அயோத்தி திரும்பவும், ராஜ்ய பாரத்தை ஏற்கவும் ஆசையில்லை; தந்தை, தம்பிக்குத் தந்த ராஜ்யத்தை தான் அபகரிக்க விரும்பவில்லை - அதனால் அவன் வர மறுத்துவிட்டான் என்றா கருத முடிகிறது? இல்லை - இல்லவே இல்லை! - ராமன், தசரதன், வசிஷ்டன் முதலியோர் சதி நடத்தி ராமனுக்கு முடிசூட்ட ரகசிய ஏற்பாடு செய்தபோது, அதை முறியடித்து, அவனைக் காட்டுக்கு அனுப்பினாளே கைகேயி - அவளிடத்திலே அல்லவா இருக்கிறது சூட்சமம்!
- அவள், பரதனைப்போல ராமனைக் கெஞ்சிக் கூப்பிட்டிருப்பாளேயானால் ராமன் கட்டாயம் வந்தேயிருப்பான். பரதன், தற்கொலை செய்து கொள்வேன் என்றான் - தீயில் இறங்குவேன் என்றான் - என்னவெல்லாமோ சொல்லி அழுதான்; ஆனால், கூப்பிடவேண்டியவர்கள் கூப்பிடவில்லை; ராமனும் அயோத்தி திரும்பவில்லை என்பதுதான் உண்மை!
உள்ளபடியே, ராமனுக்கு அயோத்தியில் அரசனாக வீற்றிருக்க ஆசையில்லை என்று யாரும் கூற முடியாது. அப்படி ஆசையில்லாவிட்டால், பதினான்கு ஆண்டுகள் கழித்து அவன் அரசனாக முடிசூட்டிக் கொண்டிருக்க மாட்டான். தந்தையின் ஆணையை - சத்தியத்தை மீறிய நாஸ்திகனாக ராமன் இங்கே மாறிவிட்டான். தந்தை, ராஜ்யத்தைப் பரதனுக்குத்தானே கொடுத்தார். பதினான்கு ஆண்டு கழித்து மீண்டும் ராமனே நாடாள வேண்டும் என்று கூறியது யார்? வரம் கேட்ட கைகேயியும் கூறவில்லையே!
- பரதனுக்குரிய நாட்டை, சத்தியத்தை மீறி ராமன் அடைந்தது எவ்வாறு பொருந்தும்? நாட்டை மீண்டும் பெறுவதற்கு வசிஷ்டரும், ராமனும் எவ்வளவு சதி நினைப்போடு பேசியிருக்கிறார்கள் என்று ஆச்சாரியாரே எழுதுகிறார் காண்க.
ராமன் கூறுகிறான்; “தம்பி, நான் தந்த ராஜ்யமாகவே எண்ணி, நீ ஒப்புக்கொண்டு தந்தை சொற்படி நட!”
பார்த்தீர்களா; ராஜ்யத்துக்கு ராமன் மறைமுகமாகக் கொண்டாடும் உரிமையை! தசரதன் அளித்த வாக்குப்படி நாட்டுக்குரியவன் பரதன்! ஆனால், ராமனோ வெகு லாவகமாக - மிக நளினமாக - அது - “தான் தந்த நாடு” என்று கூறுகிறான் பரதனிடம்! தந்தையினால் பரதனது நாடு என்று சொல்லப்பட்டதை, தன்னுடைய நாடு என்று கூறிக்கொள்ள எவ்வளவு தைரியமும், சத்தியம் மறந்த தன்மையும் இருந்திருக்க வேண்டும் அவதார புருஷன் அயோத்தி ராமனுக்கு!
வசிஷ்டன் பேசுகிறான் பாருங்கள்!
“பரதா! ராமனுடைய அதிகாரத்தைக் கொண்டு சக்கரவர்த்தித் திருமகனுக்காக, நீ ராஜ்ய பரிபாலனம் செய்! அப்படிச் செய்தால், பழியுமில்லை - சத்தியமும் காப்பாற்றப்படும்.”
முனிவர் சொல்லியிருக்கிறார் இப்படி! எந்த அளவுக்கு அருமையாக உபதேசம் செய்திருக்கிறார் என்று சிந்தியுங்கள்! எவ்வளவு பெரிய சதி இது! முதலில் ராமனுக்குப் பட்டம் கட்ட, சதி செய்தவர்களில் ஒருவர் வசிஷ்டர், அதே வசிஷ்டர் இப்போதும், ராமனுக்கு அயோத்தியின்மீது உரிமையை நிலைநாட்ட இதுபோல வழி சொல்லித் தருகிறார். ராமன் இல்லாவிட்டாலும் அவன் அதிகாரம் இருக்கட்டும் - அவனது ராஜ்யமே அயோத்தியில் நடைபெறுகிறது என்று தெளிவாகட்டும், என்பதுதான் முனிவரின் திட்டம்!
- அதன்படி ராமனது பாதுகைகளை, சிம்மாசனத்திலே வைத்துவிட்டு பரதன், நந்திக் கிராமத்திலே யிருந்து ராஜ்யத்தை கவனித்து வந்தான். இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்கிறோம்? தந்தையின் சொல்லையும் -சத்தியத்தையும் மீறிவிட்டானா இல்லையா ராமன்?
ராமன் சிம்மாசனத்தில் உட்காரவில்லை; அவன் செருப்புகள் உட்கார்ந்தன.
“ஏ! தசரத ராஜனே! தந்தையாக வாய்த்த பாதகனே! என்னை சிம்மாசனத்தில் உட்காரக்கூடாது என்றாய் - இதோ அந்த சத்தியத்தை காப்பாற்றுவது போல் நடித்துக்கொண்டு, என்னுடைய செருப்புகளையே சிம்மாசனத்தில் வைத்துவிட்டேன். உன்னுடைய சத்தியம் - ஆணை - எல்லாம் இந்த செருப்புக்கு சமானம்.”
என்று சவால் விடுவது போலத்தானே ராமன், தனக்கு பதிலாக தன் பாதுகை ஆளட்டும் என்றான் - இதற்கு ராமன் ஆட்சி என்ற பெயர் இல்லையா? - தந்தை வாக்கை மீறியதாக அர்த்தமில்லையா? - இப்போது, சென்னையிலே நேருவா உட்கார்ந்துகொண்டு ஆளுகிறார்? அவர் டில்லியிலே இருக்கிறார்; இங்கே அவரது அதிகாரம் கவர்னர் பிரகாசா மூலம் பிரயோகிக்கப்படுகிறது! இதுபோலத்தான் ராமன் காட்டிலேயிருந்தான் - அயோத்தியிலே அவனது அதிகாரபூர்வமான பிரதிநிதியாக அவனது “புனிதமான” பாதுகைகள் இருந்து ஆட்சி புரிந்தன.
ஆயிரம் முறை சொல்லுகிறோம்; ராமன் தந்தையின் வாக்கை மீறினான் - மீறினான் என்று! நெஞ்சிலே நேர்மை உள்ளவர்கள் - ராமனைக் காப்பாற்றத் துடிக்கும் பக்த கோடிகள் - ஆச்சாரியாரின் சீடர்கள் - ராமன், தந்தை வாக்கை மீறவில்லை என்பதை நிருபிக்க முடியுமா? “என்னையா ஆளக்கூடாது என்று சொல்கிறீர்கள்? என் செருப்பை ஆளச் செய்கிறேன்?”
என்ற விதத்திலே வெற்றி பெற்றான் சதிகார ராமன்! - “கவுசல்யையின் மகன்” என்றாலே தனிப் பிரியம் காட்டும் வசிஷ்ட முனிவரும், சதி நிறைந்த சாகசப் பேச்சால் ராமன் அதிகாரத்தை அயோத்தியில் நிலைநாட்டி ஜெயக்கொடி நாட்டினார். இதை ஆச்சாரியார் மறுப்பதற்கில்லை.
ஆச்சாரியார் தீட்டும் சக்கரவர்த்தித் திருமகன் இதுவரை, 69 அத்தியாயங்கள் வெளிவந்திருக்கின்றன. அவைகளில் 41 அத்தியாயங்களில் வந்த கதைக்கும், ஆச்சாரியாரின் அபிப்பிராயங்களுக்கும், அவ்வப்போது பதில் தரப்பட்டிருக்கிறது. ஆச்சாரியாரோ, அல்லது ராமாயணப் புலிகளோ - யாரும் மறுப்புரைக்க முன்வரவில்லை. வந்தாலும் வாதில் வெல்ல முடியாது என்பதும் அப்படி வருபவர்களிடம் உண்மை லவலேசமும் கிடையாது என்பதும் அவர்களுக்கே தெரியும்.
நாம், நாட்டு மக்கள் உண்மை நிலை உணரவேண்டு மென்பதற்காகவும் - ஆச்சாரியாரின் வார்த்தைகளிலே எவ்வளவு கோணல் இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவும் - மீண்டும் “சக்கரவர்த்தியின் திருமகனை”த் தொடருகிறோம். 42லிருந்து 69ஆம் அத்தியாயம் வரையிலுள்ள கட்டுரைகளை மொத்தமாக இரண்டொரு வாரங்களில் விமர்சனம் செய்துவிட்டு, பின்னர் அவ்வப்போது தொடர்ந்து எழுதுவோம்.
(முரண்பாட்டைக் கவனியுங்கள். மகாவிஷ்ணுவின் அவதாரம் ராமன் என்று சொல்லப்படுகிறது. ராமன், கடவுள் அவதாரம் அல்ல என்று கூறிய ஆச்சாரியரே, மீண்டும் - ராமன் அவதார புருஷனே என்று வலியுறுத்தினார். இப்போது குழப்ப ஆரம்பித்திருக்கிறார்!
விஷ்ணு அவதாரம் என்பதும் ராமனிடமே, “இந்தா; இது விஷ்ணு கொடுத்தது” என்று சொல்லி, வில்லையும் அம்பையும் அகஸ்தியர் கொடுக்கிறார். ராமன் யார் என்று திரிகாலமுணரும் தேவரிஷி அகஸ்தியருக்கே தெரியவில்லை யென்றால் இது பெரிய அதிசயம்தானே!
44ஆவது அத்தியாயத்தில் அகஸ்தியரைப் பற்றிக் கூறும்போது ‘வரப்போகும் விஷயங்களையும் அறிந்தவர் அந்த முனிவர்’ என்று கூறுகிறார். அப்பேர்ப்பட்டவர் ராமனிடம், “இந்தா விஷ்ணு தந்த வில்!” என்று கூறுகிறார் என்றால், வேடிக்கையாகத்தானேயிருக்கிறது.
பஞ்சவடி ஆச்ரமத்திலே, சூர்ப்பனகை வருகிறாள். வால்மீகி, சூர்ப்பனகையை சுய உருவத்துடன் அறிமுகப்படுத்துகிறாராம். கம்பர், சூர்ப்பனகை அழகிய மங்கை போல வந்து ராம லட்சுமணரை ஏமாற்ற முயன்றதாக மாற்றி அமைத்திருக்கிறாராம். இந்த இடத்திலே ஆச்சாரியார் கம்பரை மிகவும் பாராட்டுகிறார். வால்மீகி எழுதியுள்ள கட்டம் அவருக்கே சங்கடமாக இருக்கிறது போலும்.
காம தாகத்தால் பேசும் சூர்ப்பனகையைப் பார்த்து ராமன், “அழகியே! என்னைக் குறித்து ஆசைப்படுவது உனக்குத் துன்பமாகும். இந்தப் பெண் - என் மனைவியானவள் கூட இருக்கிறாள். இரண்டு மனைவிகள் வியாபாரத் தொந்தரவுக்கு இடமாகும். இது உனக்குத் தெரியுமல்லவா? இதோ இருக்கிறான் என்னுடைய தம்பி, தனியாக இருக்கிறான். அதிலும் பலத்திலும் எனக்குச் சமம். இவன் உனக்குத் தகுந்த புருஷன். இவனைக் கேட்டுப்பார். என்னை விட்டுவிடு” என்கிறான்.
லட்சுமணனிடம் அவள் போனதும், அவன், “நீ அண்ணனுக்கே இரண்டாந்தாரமாகப் போ - சீதைக்காகப் பயப்படாதே! ராமன் காதல் உன்பேரில்தான் வேகம் கொள்ளும் -சீதையை அலட்சியம் செய்துவிடுவான். நீ சுகமாக இருக்கலாம்” என்று ராமனிடம் திருப்பி அனுப்புகிறான்.
ராமனும் லட்சுமணனும் அவதார புருஷர்கள் - உத்தம புத்திரர்கள் - தீய பேச்சுக்களை பேசாதவர்கள் - சற்குண சீலர்கள் - என்றெல்லாம் ஆச்சாரியார் புகழ்கிறார். அப்படிப்பட்ட புருஷரத்தினங்கள் - அதுவும் அண்ணனும் தம்பியும் ஒரு பெண்ணிடம் இவ்வளவு தகாத முறையிலே நடந்து கொண்டிருக்கிறார்கள். இதனால்தான் ஆச்சாரியார் சூர்ப்பனகை வரும் கட்டத்தை கம்பர் அழகாக எழுதியிருக்கிறார் என்கிறார். இதற்கு என்ன பொருள்? ராமனும் அவன் தம்பியும் “ரசாபாச மான முறையில் நடந்துகொண்டதை வால்மீகி மறைக்காமல் கூறுகிறார்; கம்பர் மறைத்திருக்கிறார் என்பது தானே!
வால்மீகிக்கும் ஆச்சாரியார் “சப்பைக் கட்டு” கட்டுகிறார் பாருங்கள்:
“ஒரு பெண்ணை அதிகம் காதல் கொண்ட பெண்ணை, இப்படியெல்லாம் வேதனை செய்யலாமா என்று சில மேதாவிகள் கேட்கலாம்; எதிரில் ஒரு விகார சொரூபத்தை வைத்துக் கற்பனா சக்தியை பயன்படுத்தினால் அவ்வாறு கேட்கமாட்டார்கள்” - இது ஆச்சாரியாரின் சமாதானம்.
விகார மிகு சொரூபமாக ஒரு பெண் வந்தால், “அவளை விட்டு விலகிப் போவார்களே தவிர, அவள் காதல் கொண்டதாகக் கூறினால் முடியாது என்று கூறி விட்டுப் போய்விடுவார்களே தவிர, “அண்ணனிடம் போ” என்று தம்பியும், “தம்பியிடம் போ!” என்று அண்ணனும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு அதுவும் பக்கத்திலே மனைவியையும் வைத்துக் கொண்டு, கேவலமான பரிகாசத்தில் - நல்ல உணர்ச்சியுள்ள எந்த ஆண் மக்களும் இறங்க மாட்டார்கள்.
ஒரு வேளை, ஆரியக் கலாச்சாரத்தின்படி வேண்டுமானால் - ஆச்சாரியாரின் சமாதானம் பொருத்தமாக இருக்கலாம்.
சூர்ப்பனகை மானபங்கம் செய்யப்பட்டது கண்டு கரன் முதலியோர் ராமனைப் பழிவாங்க முயன்று இறுதியில் மரண மடைகிறார்கள் - ராமன் தனியொருவனாகவே நின்று அரக்கர்களின் சேனையத்தையும் அதன் தலைவர்களையும் கொன்று குவிக்கிறான்.
ராமனின் சக்தியைப் பற்றி ஆச்சாரியார் எழுதுவதைக் கவனியுங்கள்:
“தெய்வமே மனித உருவத்தில் வந்து அனாதைகளுக்கு அபயம் தந்து அந்தச் சத்தியத்தைக் காக்க முனைப்பட்டால் அந்த மனிதன் எவ்வளவு செய்வான் என்பதைச் சிந்தனைச் சக்தியைக் கொண்டு காணலாம்.”
இதோடு விடவில்லை அவர் - இன்னும் படியுங்கள்:
