சக்கரவர்த்தியின் திருமகன்
கட்டுரைகள் 8 · 8 / 14
சீதை சொன்னாளாம் இது போல! - எப்படியும் நடந்து தீரவேண்டிய பிராப்த விஷயத்தை இச்சமயத்தில் உன்னோடு சேர்ந்து அனுபவித்து விடுகிறேன் என்று மனைவி கூறுகிறாள் என்றால், அவளுக்கு சுயநலத்தை தவிர வேறென்ன தலைதூக்கியிருக்கிறது என்பதை ஆச்சாரியார்தான் கூறவேண்டும்.
சீதையின் சுயநலம் ஒருபுறம் இருக்கட்டும்; ராமன் வனவாசம் போவதற்கு கைகேயி காரணமல்ல சீதையின் ஜாதக விசேஷம் தான் காரணம் என்பதாகுவது ஆச்சாரியாரால் ஒத்துக்கொள்ளப்படுமா? ரிஷியின் சாபம் ஒன்றால், தசரதனுக்கு புத்திரப்பிரிவு ஏற்பட்டதாக ஆச்சாரியார் கூறியிருக்கிறார். ஆகவே - ராமன் காடு சென்றது; சீதையின் ஜாதகத்தாலா? ரிஷியின் சாபத்தாலா? கைகேயியின் கோபத்தாலா? அல்லது விதியின் வலிமையாலா?
விதியின் வலிமை என்றால், கைகேயியை திட்டுவது நேர்மையாகாது - நாணயமாகாது!
சீதை லட்சுமியின் அவதாரம் என்கிறார் ஆச்சாரியார் ஓரிடத்தில்!
லட்சுமி அடியெடுத்து வைத்த அயோத்தியிலே அனர்த்தங்கள் அமோகமாக விளைகின்றன.
மணமகள், வீட்டுக்கு வந்து ஏதாவது துன்பம் ஏற்பட்டால் ‘மூதேவி அடி எடுத்து வைத்த நேரம் அப்படி!” என்று முணுமுணுக்கிறார்கள் ஆச்சாரியார் உட்பட - அனைவருமே!
ஆனால் இந்த சீதை அடி எடுத்து வைத்த அரண்மனையில் அறுபதாயிரம் வருடம் வாழ்ந்த தசரதன் சாக நேரிடுகிறது - ராமன் காட்டேக நேருகிறது - அயோத்தியே சோகக் காடாகிப் போகிறது - மகா லட்சுமி அவதாரமாம் அவள்! மூதேவிதான் இவளும் என்று கூறினால் முட்ட வருகிறார்கள்.
சக்கரவர்த்தித்திருமகன் மூலம் பழமைக்கு சப்பைக் கட்டு போடும் ஆச்சாரியார் விடும் சரடுகள் ஒருபுறமிருந்தாலும் - அவர் எழுத்து அழகு இருக்கிறதே! அடடா - அந்த அனுமாருக்குத்தான் வெளிச்சம்!
இதோ ஒரு உதாரணம் பாருங்கள் - செப். 19 கல்கியில் எழுதுகிறார்,
“ஜனங்கள் கூட்டம் கூட்டமாக நின்று, ராமனும், சீதையும், லட்சுமணனும் காலால் நடந்து போவதைக் கண்டார்கள்.”
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்! அப்போதெல்லாம் மக்கள் தலையாலும், கையாலும் நடந்து போவார்கள். அந்தப்பாவி கைகேயி, ராம லட்சுமணரை காலால் நடந்து போகக் கட்டளையிட்டுவிட்டாள் என்றுதானே! காலால் நடந்து போனார்களாம்! காலால்! ஆச்சாரிய மேதை எழுதுகிறார் இப்படி! - அதையும் பக்தியோடு படிக்க ஆஞ்சநேய கும்பல் காத்திருக்கிறது! - வக்காலத்து வாங்கி வாழ்த்துப்பாட, சுதேசமித்திரன் போன்ற ஆரியக்காவல் படைகள் காத்துக் கிடக்கின்றன.
காகபட்டர் எதையும் எழுதுவார் - எதையும் பேசுவார் - இதெல்லாம் மேதையின் இலக்கியமய்யா இலக்கியம்!
சமீபகாலமாக ராமாயணப் பிரச்சினை நாட்டிலே தலை தூக்கி நிற்கிறது. ராமாயண கதா காலட்சேபங்களும் நாடக, சினிமாக்களும் கடந்து முடிந்து மறந்துபோய் இருந்த நேரத்திலே மீண்டும் புதிய முறுக்குடன் ராமாயணப் பிரச்சாரத்தைத் துவக்கியிருக்கிறார்கள். இப்படி துடிப்போடு துவக்கப்பட்டிருக்கிற இந்தக் காலத்தை நாம் ஓரளவுக்கு வரையறுத்துக் கூறிவிட முடியும், ஆச்சாரியார் அமைச்சர் பதவியிலிருந்து விரட்டப்பட்ட நேரத்திலிருந்து - என்பதாகக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
ஆட்சியின் மூலமாக தன் இனத்திற்கும், தன் இனத்தைப் பாதுகாக்கும் பாரத ராமாயண புராணக் கருவிகளுக்கும் ஆக்கம் தேட முயன்று திராவிட இனத்தின் அடி பீடத்தையே இருந்த இடம் தெரியாமல் அழித்து விட முடிவு கட்டி முப்புரியை உருவிப் புறப்பட்ட சூதின் உருவம் - சூழ்ச்சியின் எல்லைக்கோடு - ஆச்சாரியார் அவர்கள், நினைத்தது பரிபூரணமாக நடக்காது எனத் தெரிந்த காரணத்தால், புதிய முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார், அந்தப் புது முயற்சியின் விளைவுதான் அந்த சதித்திட்டத்தின் எதிரொலிதான் - ராமாயணத்திற்கு ஏற்பட்டிருக்கும் புதிய பொலிவு!
பழமை - மூடநம்பிக்கை - தண்ட கண்ட கடவுள் கொள்கை - கலாச்சாரத்திற்கு முரண்பட்ட பண்பாடு - இவைகளையெல்லாம் தரை மட்டமாக்கி, பகுத்தறிவு ஒளி பரப்பும் புதிய சமுதாயத்தை உருவாக்க ஏங்கி நிற்கும் அறிவுலகம் - அந்த அறிவுலகத்தின் படை வீரர்கள் - அந்த வீரர்க்கு அனுதாபம் தெரிவிப்போர் - அனைவருமே எச்சரிக்கையாகயிருந்து பணியாற்ற வேண்டிய நேரமிது வென்போம் வீழ்த்திக்கொள்ள வேல் கிடைக்காத காரணத்தால் -
**கோல்கொண்டாவது கண்ணைக் குத்தி குருடாக்கி விடலாம் என்று எண்ணிக் கிளம்பும் இழிந்தகையோனுக்கும், அதிகாரம் கை தவறிய காரணத்தால் இதிகாசத்தைக் கொண்டாவது திராவிட இனத்தாரைக் கபோதிகளாக்கி விடலாம் என்று கனவு காணும் ஆச்சாரியாருக்கும் அதிக வேறுபாடில்லை! நிச்சயமாக இல்லை!**
அதனால்தான் ஈரோட்டில் இருமல் முற்றி, பாடை கட்டிப் பயணம் நடத்த வேண்டிய பக்குவத்தை அடைந்துவிட்ட பாரத ராமாயணங்களுக்கு “கார்ண பூஷணம்” “பூணூல் தரிக்கும் புனித விழா” “கல்யாண வைபவம்” எல்லாம் நடத்திக் களித்திடக் குதிக்கிறது காகபட்டர் பரம்பரை! அந்தப் பரம்பரைக்கு ஏற்படும் ஆசையிலும் - ஆர்வத்திலும் அர்த்தமிருக்கிறது - ஒத்துக் கொள்கிறோம்.
தன் இனம்,தன் சமுதாயம்,அந்த சமுதாயத்தின் பரம்பரை பாத்தியமான உழைப்பில்லா பெருவாழ்வு, அத்தனையும் நாடொறுமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வாழ வேண்டுமென்பதிலே அந்தப் பரம்பரை அக்கரை காட்டுகிறது! நரி! புதரிலே பதுங்கி நிற்கிறது நாக்கை நீட்டிக் கொண்டு! ஏன்? தான் வாழ! கொக்கு கரையிலே காத்திருக்கிறது - ஏன்? தன் வயிற்றை நிரப்ப! நரியும் கொக்கும் தீனி தேடக் காத்திருக்கின்றன - அது அவைகளின் பசியைப் பொறுத்த விஷயம் - நரிக்கும் கொக்கும், முறையே ஒரு மானும், மீனும் நண்பர்களாகி தம் இனத்தவரை அவைகளுக்கு இரையாக்கிக் கொண்டிருந்தால் - மான் மீதும் மற்றுகள் ஆத்திரப்படாமலிருக்க முடியுமா?
மன்னிக்க வேண்டும் நண்பர்களே! - மானிடத்திலும், மீன் இனத்திலும் அத்தகைய துரோகிகள் கற்பனைக்குக் கூட கிடைக்கமாட்டா! **உதாரணத்திற்காகச் சொன்னேன்; அவ்வளவுதான்! மனித இனத்திலேதான் அவர்களைக் காண முடியும். இராவணன் காலத்து விபீஷணன் முதல் இராஜாஜி காலத்து சிவஞானங்கள் வரையிலே அத்தகையோரை மனித சமுதாயத்திலே தான் காண முடியும்!**
அப்படித் தொன்று தொட்டு விபீஷணர்கள் தொகை வளர்ந்து வருவதாலேதான் இந்த இனம், இன்னும் தன் உரிமையை, தனக்குள்ள அரச பாத்யதையைப் பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது!
சிவஞானங்களை விபீஷணர்கள் என்பதால் சீறிப் பாய்வோரும் இருப்பார்! உண்மைதான்; விபீஷணர் பெரிய ஆழ்வார் - ராமபக்தர் அறநெறி தெரிந்தவர் - என்றெல்லாம் பாராட்டிப் பாடல் புனைவோருக்கு, விபீஷணர் என்று தன்னை அழைப்பதால் கோபம் ஏற்பட நியாயமில்லை அல்லவா? அதனால் சொல்லுகிறோம்; ஆனந்தமாகவே ஏற்றுக்கொள்வார்கள் விபீஷணப்பட்டத்தை! சீற மாட்டார்கள்! சிந்தை குளிர்வார்கள்! அப்படி அவர்கள் ஆத்திரப்படுவார்களேயானால் - விபீஷணன் என்ற பெயர் களங்கமுடையது என்பதை ஒத்துக்கொண்டவர்களே யாவார்கள்!
ஆகையால் நாம் தாராளமாக ராமபக்தர்களை - ராமாயணம் தூக்கிகளை விபீஷணர் என்று அழைக்கலாம் - தகுதியான பெயர் எனத் தலையசைத்து ஆமோதிப்பார், வால்மீகி கம்பர், வாலேந்திகள்!
கடைந்தெடுத்த விபீஷணத் தன்மையின் முழு உருவமும் வெளிப்படும் வகையிலேயே தோழர் சிவஞானம் அவர்கள் ஒரு கட்டுரை தீட்டியிருக்கிறார் - ராமாயணத்திற்கும், ராமனுக்கும் கம்பனுக்கும், வால்மீகி முனிவருக்கும் வக்காலத்து வாங்கிக்கொண்டு! அதைப் படிக்கப் படிக்கப் பரிதாபம் மேலிடுகிறது.
அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழியே - என்று சொல்லக் கேட்டிருக்கிறோம்; ஆனால் ஆச்சாரியார் எவ்வழியோ அவர் வழியே தொண்டர் படைகளும் முரண்பாடான செயலில் இறங்குவதெனக் கிளம்பியிருக்கும் காட்சியிருக்கிறதே; அது நினைக்க நினைக்க சிரிப்பூட்டுகிறது!
‘சக்கரவர்த்தித்திருமகன்’ எழுதி ஆரம்பித்த ஆச்சாரியார், ‘ராமன் கடவுள் அல்ல - அவதாரம் அல்ல’ என்று உறுதியாக குறிப்பிட்டு, பிறகு போகப் போக, அவனும் அவதார புருஷனே என்று முரண்பாடுடைய கட்டுரைகள் எழுதினார் - எழுதியும் வருகிறார். மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமன் - கடவுளின் பிறப்பான ராமன் என்றும் அடிக்கடி குறிப்பிடுகிறார். கடைசியாக அக்டோபர் 3ஆம் நாள் “கல்கி” இதழில் கூட, “ராமாவதாரத்தில் மானுஷ சுபாவத்தின் போக்கும், அதனுடன் சாதாரண தருமத்தின் விளக்கமும் சேர்ந்துவரும்” என்று “அவதார”த்திற்கு அஸ்திவாரம் அமைத்துக் காட்டியிருக்கிறார்.
ஆனால், பெரியார் ராமசாமியைத் தாக்குவதற்குப் புறப்பட்ட தோழர் சிவஞானம் தன் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது - அவரது குருவாம் ஆச்சாரியாரை எந்த வகையில் எதிர்த்து நிற்கிறது என்பதை கீழே படியுங்கள்.
“கடவுள் மனித உடல் தாங்கி, மண்ணுலகில் பிறப்பதில்லை என்பது மதவாதிகளும் அறிந்த உண்மை தான்.”
சீடர் சிவஞானம், குருநாத ஆச்சாரியாரின் முரண்பட்ட வாதத்திற்கு மற்றுமொரு முரண்பாட்டை இவ்வண்ணம் தருகிறார், “ராமன் வாழ்வாங்கு வாழ்ந்த மனிதன் - அவனை விண்ணுறையும் தெய்வமாகப் போற்றினார்” என்றும் சிவஞானம் வாதிடுகிறார் - ஆச்சாரியாருக்குப் பலம் தேட முனைந்தவர், ஆச்சாரியாரின் ஆரம்பப் பாதையிலே போய், அவரை அறியாமலே தடுமாறுகிறார் - பாவம்!
