உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கட்டுரைகள்

சக்கரவர்த்தியின் திருமகன்

கட்டுரைகள் 7 · 7 / 14

இடமோ ஆரண்யம்; நேரமோ அர்த்தசாமம்; காமக் காட்சிகளை வர்ணிப்பதோ கம்பன்; ஆச்சாரியார் கூட நிலைதவறிப் போயிருப்பார்.

தான் பெற்ற இன்பத்தை ‘கல்கி’ வாசகர்களும் பெறக்கூடாது என்கிற கெட்ட நினைப்புதானோ என்னவோ, அந்த வேதியப் பெருங்கிழவர், கம்பனது வர்ணனை விநோதங்களுக்கு விளக்கம் தராமல் ஒதுக்கி விட்டார்.

அப்படிப்பட்ட விருந்தின் மேன்மையைப்பற்றி - ஆச்சாரியார் எழுதுகிறார் - இனிக்கிறது பக்தர்களுக்கு! ஆஸ்ரமத்து போக்கியதையைப் பாருங்கள் என்று நாம், இதே விருந்து விளக்கத்தைத் தந்தோம் - அப்போது பக்தர்கள் சீறிப் பாய்ந்தார்கள்!

இப்போது இனிப்பது, அப்போது கசப்பாகத் தெரிவானேன்? பதில் கூறுவார்களா, பக்தர்கள்? அல்லது, பரத்துவாஜர் விருந்தை விமர்சிக்கும் பார்ப்பன குலமகிபர் ஆச்சாரியார்தான் பதில் கூறுவாரா?

ஆஸ்ரமம் - அங்கே அப்சரஸ்களா?

முனிவர் கூடாரம் - அங்கே மோகக் களியாட்டமா?

முத்திக்கு வழிதேடும் முகாம் - அங்கே முத்தத்தால் வீங்கிய முகங்களா? -

துக்கமான கட்டடம் - அங்கே தொடர்ச்சி கெடாத இன்ப லோக யாத்திரையா?

தொல்லை நிறைந்த வேலை - அப் போது எல்லை மீறிய இன்பமா?

❧★❧

பரதன் நாடாள வேண்டும் - ராமன் காடு செல்லவேண்டும் என்று உறுதியாகக் கூறுகிறாள் கைகேயி.

கேகய மன்னனுக்கு தசரதன் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித்தான் கைகேயி அத்தகைய வாசகத்தை வீசுகிறாள், கேகயனுக்குத் தந்த வாக்குப்படி பரதன் நாடு பெற வேண்டியது நியாயம் தான்.

ஆனால், ராமன் காடு செல்ல வேண்டுமென்பது அநியாயமல்லவா என்று கேட்கத் தோன்றும். கைகேயியின் பக்கமும் நின்று வாதிட்டுப் பார்த்தால் அவள் நிபந்தனையிலும் நியாயமிருப்பது நன்றாகத் தெரியும். பரதனைப் பாட்டன் வீட்டுக்கு அனுப்பிவிட்டு யாருக்கும் தெரியாமல் சதிசெய்து முடிசூட்டிக் கொள்ள ராமன் தயாராயிருந்தான் என்று கேள்விப்படும்போது கைகேயிக்கு ஆத்திரம் பொங்காதா? கைகேயி ராமனிடம் ஆரம்ப முதல் பொறாமை உள்ளவள் அல்ல!

அன்புடன் அவனை நேசிப்பவள். ஆச்சாரியாரும் அதை எழுதியிருக்கிறார். அப்படிப்பட்ட கைகேயி ராமன்மீது கோபங்கொண்டு காட்டேகச் சொன்ன காரணம் என்ன? தன் மகனை வஞ்சிக்க ராமனும் உடன்பட்டான் என்ற செய்தி எந்தத் தாயாரைத்தான் கொதிப்படையச் செய்யாது! நாம், கைகேயி நல்லவள் என்று நிரூபிப்பதற்காக இந்த ஆதாரங்களை கண்டுபிடிக்கவில்லை. ராமாயணக் கதையில் அமைக்கப்பட்டுள்ள கைகேயி பாத்திரம், முன்னுக்குப்பின் முரண்படுவானேன் - மூலி அலங்காரி பட்டியலிலே சேர்க்கப்படுவானேன் - என்பதற்காகத்தான் இதைக் குறிப்பிடுகிறோம்.

ராமனிடத்திலே கைகேயி எது பற்றி பேசியிருக்கவேண்டும்?

ராமன் கடவுள் அவதாரமல்ல - பெரிய வீரன் மட்டுமே - என்று எழுதியிருக்கிறாரே ஆச்சாரியார். அத்தகைய ராமனைப் பாத்திரமாகக் கொண்ட ராமாயணக் கதையில் வரும் கைகேயி பாத்திரம், ராமனிடத்திலே எப்படிப்பேசியிருக்கவேண்டும் ? அப்படிப் பேச வைத்தார்களா - வால்மீகியோ? அல்லது கம்பரோ? - அல்லது இந்த பிராமணவம்பரோ? இல்லை!

“ராமனே! உன் தந்தை என் தந்தைக்குத் தந்த வாக்குறுதி என் மகனுக்குப் பட்டம் தருவது என்பது! அதை இப்போது மீறுகிறார் -மீறுவது மட்டுமல்ல; சூழ்ச்சியாக என் மகனைப்பாட்டன் வீட்டுக்கு அனுப்பி விட்டு, அவனுக்குத் தெரியாமலே உனக்குப் பட்டம் கட்ட முனைகிறார்! இது நியாயமா? நியாயமென்று கருதித் தானே, நீயும் இந்த சூழ்ச்சிக்கு உடன் பட்டாய்? என் தந்தை கேகயராசருக்கு கொடுத்த சத்தியத்தை தசரதர் மீறுகிறார். ஆகவே தசரதர் எனக்கு கொடுத்த இரண்டு வரங்களைப் பயன்படுத்தி, இப்போது என் காரியத்தை வெற்றிகரமாக சாதித்துக் கொள்கிறேன்!

- சூழ்ச்சி வெல்லாது என்பதை எடுத்துக் காட்டுகிறேன்!”

இப்படித்தானே கைகேயி ராமனிடம் பேசியிருக்க வேண்டும்! இது போலத்தானே கதையிலே கைகேயி பாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது. தசரதன் கேகயனுக்கு தந்த வாக்கையும் குறிப்பிட்டு, பரதனை தந்திரமாகப் பாட்டன் வீட்டுக்கு அனுப்பியதையும் குறிப்பிட்டு, அவன் அறியாமலே ராஜ்யாபிஷேகம் ராமனுக்கு செய்துவிட முயற்சித்ததையும் குறிப்பிட்டு, கடைசியில் கைகேயியின் சம்பாஷணையை மட்டும் வேறு கோணத்திற்குத் திருப்பிக்கொண்டு போவானேன்?

தசரதனை நல்லவன் என்று காட்டவா? அல்லது, கைகேயி கொடியவள் என்று சொல்லவா? அல்லது அது மூலக்கதை ஆசிரியருக்கு பாத்திரம் அமைக்கும் திறமை கிடையாது என்பதை ஆச்சாரியார் ஒத்துக் கொள்கிறாரா?

ராமன் காட்டேகத் தீர்மானிக்கிறான். இந்தச்சோகக் கட்டத்தின் சிறப்புகளை ஆச்சாரியார் அள்ளி இறைக்கிறார், இறைக்கும் வேகத்தில் ராமாயணத்தின் பெருமையையும் சுருக்கமாகக்குறிப்பிடுகிறார்;

“எந்த இடத்திலும் எங்கேயேனும் ராமாயணக் கதையை யாரேனும் சொன்னால் அவ்விடம் “பாஸ்பவாரி பரிபூரண லோசனத்துடன் கண்களிலிருந்து நீர் பெருக ஆஞ்சநேயர் கைகூப்பி நின்று கேட்டுக் கொண்டிருப்பார் என்று பெரியோர்கள் சொல்லுவதின் கருத்து இதுவே.

ஆச்சாரியார் எழுதுகிறார் இப்படி - அது என்னவோ உண்மைதான்! மறைந்திருந்து ஆஞ்சநேயர் கேட்கிறாரோ என்னவோ; நிஜ ஆஞ்சநேயர்கள் பலர் - இனத்தை எதிரியிடம் காட்டிக் கொடுக்கும் ஆஞ்சநேயர்கள் பலர் ஆச்சாரியார் போன்றவர்கள் - ராமாயணக் கதை சொல்லும்போது, கண்ணீர் பெருக கை கூப்பி நின்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது!

சூழ்ச்சியால் நாடு கவர எண்ணினார்கள் தந்தையும் மகனும்! அதை எதிர்த்து ஒரு பெண்மணி போரிட்டாள் - தன் மகனுக்கு பட்டம் கிடைக்குமென்ற ஒரே நம்பிக்கையிலே தான் வயதான கிழராஜனையும் மணந்து கொள்ள சம்மதித்தாள் - தன் எழில் மிகுந்த பருவத்தையே கிழவனின் பலிபீடத்திலே வைக்கத் தயாரான அந்தப் பெண்மணி - எதற்காக அந்த இளமைத்தியாகத்தை ஏற்றுக் கொண்டாளோ அது நிறைவேறவில்லை. என்கிற போது, ஆத்திரமடைவதிலே என்ன தவறு?

அந்த ஆத்திரத்திலேதான் அயோத்தி பரதனுக்கு - ஆரண்யம் ராமனுக்கு - என்று ஆணையிட்டாள் - இது சோகக் கட்டமாக நமக்குத் தெரியவில்லை - சூதர்கள் வீழ்ந்துபோன மகிழ்ச்சிக் கட்டமாகவே தெரிகிறது.

காட்டேகும் ராமன் தாயிடமும் சீதையிடமும் விடை பெற்றுக் கொள்கிறான். லட்சுமணனும் அவன் கூடப் புறப்படுகிறான். சீதையும் ராமனுடன் கிளம்புகிறாள்.

“உம்மைவிட்டு எப்படிப் பிரிந்திருப்பேன்?” என்று அழுகிறாள். சீதை ராமனிடத்திலே மிகுந்த அன்பு கொண்டவள். ஆகவே அழுதாள் என்று நாம் விட்டுவிட்டுப் போக முடியவில்லை. சீதையின் அன்பிலும் களங்கம் காணக் கிடக்கிறது. படியுங்கள் அதை! ஆச்சாரியாரே எழுதியிருக்கிறார் - செப்டம்பர் 19 நாள் இதழில்!

ராமபிரபு! உம்மோடு வனத்தில் வாழ்வதே எனக்கு இன்பம் - அதுவே எனக்கு வாழ்வு - என்றெல்லாம் சீதை சொல்லுகிறாள் - சொல்லட்டும் - ஆனால் அவள் கணவனிடம் கடைசியாகச் சொன்னதை நினைத்தாலே சிரிப்பு வருகிறது.

“நான் மிதிலையில் இருந்த காலத்தில் பிராமணர்களும், ஜோதிஷர்களும், இவளுக்கு வனவாசப் பிராப்தி என்று என்னைக் குறித்து என் தாயிடம் சொல்லியிருக்கிறார்கள். நான் தனியாக வனவாசம் செய்ய முடியுமா? உம்முடன் சேர்ந்து வனவாசம் செய்துவிட்டு, எப்படியும் நடக்கவேண்டிய அந்த நிகழ்ச்சியை சுகமாக முடித்து விடுவதற்கு இதுவே சமயம்.”

மறு பதிப்பு 2018 — திராவிடர் கழக (இயக்க) வெளியீடு (முதற்பதிப்பு மே 1956, வேலூர் திராவிடன் பதிப்பகம்)

அச்சுப் PDF பார்க்க ↗