உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கட்டுரைகள்

சக்கரவர்த்தியின் திருமகன்

கட்டுரைகள் 2 · 2 / 14

“மொத்தத்தில் தேவர்கள் நல்ல சுபாவம் கொண்டவர்கள் அவர்களிலும் சிலர் தீயகாரியங்களைச் செய்து அதனால் கஷ்டமும் படுவார்கள்.

ராட்சசர் என்பவர் அதர்மத்துக்கு கொஞ்சமும் பயப்படாத துஷ்டர்கள், குலம், ராட்சசர்களிலும் கூட ஒரு சிலர் அறிவாளிகளும் நல்லவர்களும் இருந்தார்கள்.”

ஜூலை 18 இதழில் ஆச்சாரியார் எழுதுகிறார் இப்படி! அதே இதழில்தான் தேவர்களின் தலைவன் இந்திரனும், தேவரிஷியின் மனைவி அகலிகையும் கள்ள இன்பத்தில் ஈடுபட்ட கதையையும் அவர் வரைந்திருக்கிறார், வால்மீகி ராமாயணத்தில் ராமன் கதாநாயகனாம் ராவணன் வில்லனாம்! கதாநாயகன் ராமன், கற்பிழந்த அகலிகை சாபவிமோசனம் பெறதும் அவள் காலில் விழுந்து வணங்குகிறான், அதையும் ஆச்சாரியார் எழுத தவறவில்லை, பலாத்காரத்தினால் கற்பிழந்த பாவையரையே சமுதாயம் தீண்ட மறுக்கிறது.

அந்தச் சமுதாயத்தைக் கண்டிக்க வக்கற்ற சக்கரவர்த்தியார், “பெரிய மனுஷனே கை பிடித்திழுக்கும்போது எப்படி மறுப்பது” என எண்ணி கற்பைப் பறிகொடுத்த அகலிகையை ராமனை விட்டே வணங்கச் சொல்லுகிறார், வெட்கக் கேடு! வெட்கக் கேடு! தேவர்கள் நல்லவர்களாம் - சிலர் தான் கெட்டவர்களாம். தேவராஜனாம் இந்திரனின் நடத்தையே இப்படியிருக்கும்போது அவன் குடிமக்கள் எப்படியிருப்பார்கள் என்று கூறவும் வேண்டுமா? -இராவணன் தீய குணத்தானாம் - தேவர்கள் நல்லவர்களாம் - காமச் சேட்டையோடு மட்டும் முடியவில்லையே, அந்தக் கயவர்களின் கதை!

ஆச்சாரியாரே அவரையுமறியாமல் எழுதுகிறார் படியுங்கள்!

குதிரை திருடிய கோமான்!...

“அம்சுமான் என்ற ராஜ குமாரன் மிகவும் குணசாலி. சீலமும் அறிவும் பொருந்தியவன். சகரனுடைய அசுவமேத யாகத்துக்கான குதிரையை அம்சுமான் ராஜகுமாரன் காத்து வந்தான். ஆனால் இந்திரன் ராட்சச வேடம் பூண்டு வந்து அந்தக் குதிரையைக் கொண்டுபோய், மகாவிஷ்ணுவாகிய கபிலர் பக்கம் மறைத்து விட்டான், குதிரையைத் தேடிப் போன சகரபுத்திரர்கள் அறுபதினாயிரம் பேரும், கபிலர் தான் குதிரையை திருடியது என சந்தேகப்பட்டு பாய்ந்தார்கள்.

கபிலர் அந்த அறுபதினாயிரம் பேரையும் சாம்பலாக்கி விட்டார்.”

ஜூலை 4ஆம் தேதி இதழிலே ஆச்சாரியார் தந்த கதை இது! நல்லவனிடம் இருந்த குதிரையை இந்திரன் திருடிப்போய் கபிலரிடம் ஒளித்த காரணத்தால் அறுபதாயிரம் பேர் ஏக காலத்தில் அணுகுண்டு பட்டதுபோல சாம்பலாகியிருக்கிறார்கள். இந்த தேவர்கள் நல்லவர்களாம்; ஆச்சாரியார் முரண்பட்டு, முரண்பட்டு, முனகுகிறார்! சக்கரவர்த்தித்திருமகன் மூலம் சாய்ந்து வரும் ஆரியத்துக்கு சப்பைக்கட்டு போடுகிறார் - பாவம். யாகங்களை அழிக்கும் அரக்கரை அழிக்கவே விஸ்வாமித்திரன் ராம இலக்குமணர் இருவரையும் அழைத்து வந்தான் எனக் கூறும் ஆச்சாரியார், ஜூலை 4ஆம் தேதி இதழில் ஒரு உண்மையை உரைக்கிறார் பாருங்கள் - தேவர்கள் நல்லவர்கள் - ஒரு சிலர் கேடு செய்யலாம் என்று ஓர் இதழில் எழுதிய அவர் - இதோ தேவர்கள் அனைவரையுமே தீயவராக்குகிறார் ‘கல்கி’யில்!

“அசுவமேதயாகங்களைத் தடை செய்வது தேவர்களுடைய வழக்கம்.”

இப்படி முன்னுக்குப்பின் உதைக்கிற நிலையிலேயே, ஆச்சாரியாரின் - ஆம் - சக்கரவர்த்தியாரின் செல்வத் திருமகன் - வளர்ந்துகொண்டு போகிறான், சரிந்து போய்க் கொண்டிருக்கும் ஆரிய சாம்ராஜ்யத்தைத் தூக்கி நிறுத்தலாம் என்ற அவரது கனவு பலிக்காது - நிச்சயம் பலிக்காது - என்பதற்கு அவரது முரண்பட்ட கட்டுரைகளே சான்று பகருகின்றன. பார்ப்போம்; இன்னும் “திருமகன்” எந்தெந்தத் திக்கில் நடை போடுகிறான் என்று!

“ஆனந்தமாக - ஆண்டுகள் பன்னிரெண்டு ராமனும் சீதையும் அயோத்தியில் சுகம் அனுபவித்தார்கள். இனி, உலகில் மக்கள் படும் இடையூறுகள், துயரங்கள், கோபதாபங்கள் - எல்லாவற்றையுமே பகவானும் ஈஸ்வரியும் நேராக ஊனுடலில் அனுபவிக்கப் போகிறார்கள்.”

“பன்னிரெண்டு ஆண்டுகள் ஆனந்தமாக ராமனும் சீதையும் அயோத்தியில் சுகம் அனுபவித்தார்கள்.”

ஆச்சாரியார்தான் எழுதியிருக்கிறார், ராஜகுலத்தில் உதித்த அந்த இன்ப ஜோடிகள் எப்படி பெய்ப்படி தங்கள் காதல் கீதத்தைப் பாடியிருப்பார்கள் என்று நாமும் ஒரு முறை வர்ணிக்க வேண்டுமா என்ன? நான் சொல்ல வந்த விஷயம் அதுவல்ல! பகவானும் ஈஸ்வரியும் மனித குணங்களுக்கு உட்பட்ட, இடையூறு, கோபதாபம், எல்லாவற்றையும் அனுபவிக்கப் போகிறார்கள் என்று ஆச்சாரியார் கூறுவது எந்தக் காலத்திலிருந்து தெரியுமா? மீண்டும் படியுங்கள்!

“பன்னிரெண்டு ஆண்டுகள் ஆனந்தமாக ராமனும் சீதையும் அயோத்தியில் சுகம் அனுபவித்தார்கள். இனி, உலகில் மக்கள் படும் இடையூறுகள், துயரங்கள், கோபதாபங்கள், எல்லாவற்றையுமே பகவானும் ஈஸ்வரியும் ஊனுடலில் அனுபவிக்கப் போகிறார்கள்.”

இதில் வருகிற “இனி” என்ற வார்த்தையைக் கவனிக்க வேண்டும். பன்னிரெண்டு ஆண்டுகள் இன்பமாக இருந்த இருவரும் இனிமேல் தான் உலக மக்கள் உணர்ச்சிகள் எல்லாவற்றையுமே ஊனுடலில் அனுபவிக்கப் போகிறார்களாம்.

அப்படியானால் சீதா கல்யாணம் ஆன பிறகு இருந்த அந்த பன்னிரெண்டு ஆண்டுகளிலும் சரி, அதற்கு முன்பு ராமனின் பால்யப் பருவத்திலும் சரி அவர்கட்கு ஊனுடலில் ஏற்படும் உணர்ச்சிகள் ஏற்பட்டதில்லையா? - கோபம் கொண்டதில்லையா? - தாடகையைக் கொல்ல கோதண்டத்தை வளைத்தது கோபத்தால் அல்லவா? - மனைவி சீதையுடன் பன்னிரெண்டு வருடம் ஆனந்தம் அனுபவித்து, தாபம் ஏற்படாமல் என்று யாராவது கூற முடியுமா? ராமன்தான் கூறுவானா? தையல் சீதை தான் சொல்லுவாளா எனக்குத் தாபம் ஏற்படவில்லை என்று!

பிறகு ஏன் - பிராமணஜோதி ஆச்சாரியார், கோப தாபங்கள் போன்ற மனித உணர்ச்சிகளை இனி பகவானும் ஈஸ்வரியும் ஊனுடலில் அனுபவிக்கப் போகிறார்கள் என்று கூறவேண்டும்? அப்படியானால் இதுவரையில் ராமனும் சீதையும் அனுபவித்த உணர்ச்சிகள் தேவ உடலில் அனுபவித்தவைகளா? விளக்கம் தேவை - வேதியப் பெருந்தகையாரே, விளக்கம் தேவை! “எந்த அவதாரம் எடுக்கிறேனோ அந்த அவதாரத்திற்குரிய தேகமும் உணர்வுமாகத்தான் என் திருவிளையாடல் நடைபெற்று வரும் - என்பது பகவானே சொல்லிய விளக்கம்.”

ஆகஸ்டு 8ஆம் நாள் இதழிலே ஆச்சாரியார் இப்படி எழுதியிருக்கிறார், “பகவான் வாமனாவதாரம் எடுத்தார். அந்த உருவத்தைப் பற்றிய வர்ணனைகளையும், படத்தையும் கூட நாம் பார்த்திருக்கிறோம். மிக மிகக் குள்ளமான உருவம், சிறிய உருவம், மனித இலக்கணத்துக்கும் கீழான தேகம் படைத்த அவ்வளவு சிறிய உருவம் வாமனாவதாரம் என்று படித்திருக்கிறோம். என்ன செய்து தெரியுமா? மாபலிச்சக்கரவர்த்தியின் வலிமையைக் கெடுப்பதற்காக - மூன்றடி மண் கேட்டு, உலகத்தையே இரண்டு அடிகளாக அளந்துவிட்டது என்பது கதை!

பகவான் எந்த அவதாரம் எடுத்தாலும் அந்த அவதாரத்திற்குரிய தேகமும், உணர்வுமாகத்தான் திருவிளையாடல் நடத்துவார் என்று ஆச்சாரியார் கூறுகிறார். கவனியுங்கள் இதையும்!

தேகம், உணர்வு இரண்டும் எடுத்த அவதாரத்திற்குத் தக்கதாய்த்தானிருக்குமாம், பகவான் கூறிய விளக்கமாம். பார்ப்பனகுல மகிபரும் பகருகிறார், சரி! ஒப்புவோம்! “அப்படியானால் வாமனாவதாரம் என்ற சிறிய தேகத்தின் பாதங்கள் எவ்வளவு சிறியதாய் இருந்திருக்க வேண்டும்? அந்தச்சிறிய பாதங்களால் ஜெகத்தை எப்படி அளந்து வாமனாவதாரம்?”

என்று அறிவுள்ளவர்கள் கேட்கமாட்டார்களா? ஆச்சாரிய மேதை அதற்குப் பதில் சொல்லவேண்டாமா?

அவதாரத்திற்குத் தகுந்த தேகமும், உணர்வும் பெறுவாராம் பகவான். வராகவதாரம் எடுத்தார் - பூமியைத் தூக்கிக்கொண்டு வந்தார், பன்றியைப் போன்ற தேகம் பெற்றார் - சரி! ஆனால் அந்தப் பன்றி பூமாதேவியுடன் இன்பம் அனுபவிக்கிற அளவுக்கு உணர்வு பெற்றது என்று புராணம் எழுதப்பட்டிருக்கிறதே அதுதான் அவதாரத்திற்குத் தகுந்த உணர்வா? என்று ஆச்சாரியாரை வினயத்தோடு கேட்க ஆசைப்படுகிறோம்.

பட்டாபிஷேகம்

ராமனுக்குப் பட்டாபிஷேகம் நடத்த ஏற்றதொரு நாள் குறிக்க வேண்டுமென்று தசரதன் சபையில் அறிவிக்கிறான். பிறகு ஏதோ ஒரு யோசனை வந்து, மறு நாளே புஷ்ய நட்சத்திரத்தில் ராமனின் பட்டாபிஷேகத்தை வைத்துக் கொள்வதென்று முடிவுசெய்து அதை ராமனிடமும் தசரதன் கூறுகிறான். அவ்வளவு அவசரமாக தசரதன் நாள் வைத்தமைக்குக் காரணம் என்னவென்று ஆச்சாரியார் விளக்குகிறார் பாருங்கள்.

“கைகேயியை விவாகம் செய்துகொண்ட காலத்தில் தசரதன் கேகயனுக்கு (கைகேயியின் தந்தை) கொடுத்த வாக்கு அவன் நினைவுக்கு வந்து, அது அவனை மனத்தில் தொந்தரவு செய்ததுபோல் தோன்றுகிறது, பரதன் மிக நல்லவன், அண்ணனிடம் அவன் மிக்க அன்பும் பக்தியும் வைத்தவன். ஆனபடியால் கைகேயி விவாக நிபந்தனையை அவன் பொருட்படுத்தமாட்டான். ஆயினும் மனிதனுடைய மனத்தை நம்பக் கூடாது. நல்லவருடைய புத்தியும் சில சமயம் மாறிப்போகும் என்று தசரதன் பயந்தான்.”

புரிகிறதா தோழர்களே! பரதனுக்குப் பட்டம் கட்டுவதாக தசரதன் வாக்களித்திருப்பது - யுத்தத்தில் உதவி செய்த தன் மனைவி கைகேயி என்பவளை தான் மணந்திட விரும்பியபோது அவள் தகப்பன் கேகய மன்னன் விதித்த நிபந்தனை அது! உனக்கு மூத்த மனைவியிருப்பதால் அவள் மகன் பட்டத்திற்கு வர நேரும்; என் மகள் கைகேயியின் மகனுக்குப் பட்டம் தருவதாக வாக்களித்தால் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேகய மன்னன் நிபந்தனை விதித்தான்.

அதை ஒத்துக்கொண்ட தசரத ராஜன்தான் இப்போது, பரதன் ஊரில் இல்லாத சமயம் அவசர அவசரமாக மூத்தவன் ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடு துவங்குகிறான்.

“பரதன் ஊரில் இல்லை, அவனுக்கு இப்போது சொல்லி அனுப்பி வரவழைக்க சவகாசமில்லை. அவன் வருவதற்காக காரியத்தை நிறுத்திவைப்பது உசிதமல்ல.”

தசரதன், ராமனிடம் கூறுகிறான் இப்படி ஆச்சாரியார் எழுதியிருக்கிறார். தோழர்களே! சூழ்ச்சி எங்கே முதலில் உருவாகிறது பாருங்கள். கைகேயி இடத்தில் அல்ல; தசரதன் இடத்தில்தான் சூழ்ச்சி உருவாகிறது என்பதை ஆச்சாரியார் தன்னையறியாமலே ஒத்துக் கொள்ள நேரிடுகிறது. “ராஜ்யாதிகாரம் உடனே வகிக்க வேண்டுமென்று ராமனுக்கு ஆசை இருக்கவில்லை. அதை கடமையாகவே பாவித்தான். அரசன் ஒப்புக்கொள்ளும்படி சொன்னால் சரி, இல்லாவிட்டால் வேண்டியதில்லை என்பது அவன் கருத்து.”

இப்படிப்பட்ட ராமன் - அருங்குணவான் - தகப்பனுடன் சேர்ந்து சூழ்ச்சியில் எப்படி ஈடுபடுகிறான் பாருங்கள். ஆச்சாரியாரே எழுதுகிறார்; படியுங்கள்.

மறு பதிப்பு 2018 — திராவிடர் கழக (இயக்க) வெளியீடு (முதற்பதிப்பு மே 1956, வேலூர் திராவிடன் பதிப்பகம்)

அச்சுப் PDF பார்க்க ↗